நாமக்கல்: நெசவாளர் காப்பீடு அட்டைக்கு, நாளை (செப்.,30ம் தேதி)யுடன் கெடு முடிவடைந்து விட்டதால், ஏற்கனவே, ஆறு மாதம் நீட்டிப்பு செய்தது போல், மீண்டும் ஆறு மாதம் நீட்டிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, கைத்துறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசு, கைத்தறி நெசவாளர்களின், உடல் நலத்தை பாதுகாக்க மற்றும் மேம்படுத்த நலவாழ்வு காப்பீடு திட்டத்தை துவக்கியது. அதன்படி, தமிழக அரசு, கடந்த 2005ம் ஆண்டு முதல், நெசவாளர் மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில், 1,182 கைத்தறி கூட்டுறவு சங்கங்களில், 2.07 லட்சம் கைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. அதில், 1.89 லட்சம் குடும்பத்தைச் சேர்ந்த 3.19 நெசவாளர் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. மத்திய அரசு சார்பில், 769.36 ரூபாயும், மாநில அரசு சார்பில், 170.40 ரூபாயும், ஆண்டு ஒன்றுக்கு செலுத்தப்படுகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ., லேம்பார்டு காப்பீடு நிறுவனத்துடன், இணைந்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு பேர் என அதிகபட்சமாக, ஒரு ஆண்டுக்கு, தலா, 15 ஆயிரம் ரூபாய் வரை மருத்துவச் செலவு பார்த்துக் கொள்ளலாம். கூட்டுறவு நெசவாளர் சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும், தனியார் நெசவாளர் சங்க உறுப்பினர்களும் பயனடையலாம்.
தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டதால், நெசவாளர் குடும்பங்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் முதல் தேதியில், புதிய காப்பீடு அட்டை வழங்கப்படும். ஆனால், நடப்பு ஆண்டு நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய புதிய காப்பீடு அட்டை வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக, கடந்தாண்டு பயன்படுத்திய காப்பீடு அட்டையை பயன்படுத்தி சிகிச்சைப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. அதுவும், செப்டம்பர், 30ம் தேதி வரை பயன்படுத்த உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், நாளை (செப்., 30ம் தேதி)யுடன், காப்பீடு அட்டைக்கான கெடு முடிகிறது. இருந்தும் காப்பீடு நிறுவனத்தில் இருந்தோ அல்லது கைத்தறி துறை அதிகாரிகளிடம் இருந்தோ, புதிய அட்டை வழங்குவதற்கான எந்த விபரமும் நெசவாளர்களுக்கு தெரிவிக்கவில்லை. அதனால், அக்டோபர், 1ம் தேதியில் இருந்து, தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியுமா, என்ற சந்தேகம் நெசவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து கைத்துறைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆறு மாதம் நீட்டிக்க வாய்ப்பு : ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் முதல் தேதிக்கு வழங்க வேண்டிய, காப்பீடு அட்டை, இந்தாண்டு வழங்கப்படவில்லை. கடந்தாண்டு செப்டம்பர் மாதம், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், ஆயிரக்கணக்கான புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்கள் பெயரையும், காப்பீடு திட்டத்தில் சேர்த்து, புதியதாக காப்பீடு அட்டை தயாரித்து வழங்க உத்தரவிடப்பட்டது. நெசவாளர்கள், ஏற்கனவே பயன்படுத்திய அட்டையை கொண்டு, செப்டம்பர், 30ம் தேதி வரை சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம், என அறிவுறுத்தப்பட்டது. இருந்தும், புதிய அட்டை அக்டோபர், 1ம் தேதிக்கு வழங்குவது குறித்து, இதுவரை, எவ்வித உத்தரவும் காப்பீடு நிறுவனத்தில் இருந்து வரவில்லை. அதனால், அடுத்த, ஆறு மாதம் வரை, பழைய அட்டையே நடைமுறையில் இருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இதற்கான உத்தரவு, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE