உரத்த சிந்தனை: தண்டனை மட்டும் போதுமா?- அப்சல்

Updated : செப் 29, 2013 | Added : செப் 28, 2013 | கருத்துகள் (7) | |
Advertisement
கடந்த ஆண்டு, டிசம்பர், 16 அன்று டில்லி பஸ்சில் ஆறு பேர் கொண்ட கும்பலால், மருத்துவ மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளானார். அந்த மாணவியின் நண்பரை தாக்கிய, கும்பல் ஓடும் பஸ்சிலிருந்து மாணவியை துாக்கி வீசினர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மாணவி, பனிரெண்டு நாள் கழித்து இறந்து போனார். இந்த அவலச் சம்பவம் உலகமெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.மனிதனுக்கும்,
Uratha sindanai,உரத்த சிந்தனை, அப்சல்

கடந்த ஆண்டு, டிசம்பர், 16 அன்று டில்லி பஸ்சில் ஆறு பேர் கொண்ட கும்பலால், மருத்துவ மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளானார். அந்த மாணவியின் நண்பரை தாக்கிய, கும்பல் ஓடும் பஸ்சிலிருந்து மாணவியை துாக்கி வீசினர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மாணவி, பனிரெண்டு நாள் கழித்து இறந்து போனார். இந்த அவலச் சம்பவம் உலகமெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

மனிதனுக்கும், மிருகத்திற்கும் வித்தியாசம் உண்டு என்பதை, இந்த சம்பவம் தகர்த்துவிட்டது. இதில் ஈடுபட்ட ஆறு பேரில், பஸ் டிரைவர் ராம்சிங், ஜெயில் அறையிலேயே துாக்கு போட்டுக் கொண்டார். இன்னொருவர், 18 வயதுக்குட்பட்ட இளம் குற்றவாளி என்பதால், அவனுக்கு மூன்று ஆண்டுகள் மட்டும் ஜெயில் தண்டனை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மிச்சமிருக்கும் நான்கு பேருக்கு துாக்கு தண்டனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பத்து நாள் கழித்து பார்த்தால், நாடெங்கும் தினசரி நடக்கும் சம்பவங்களை கவனித்தால், கற்பழிப்பு குற்றங்கள் குறைந்த மாதிரி தெரியவில்லை. தேசத்தின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக இதுமாறிவிட்டது.
இந்த நிகழ்வுகளை கவனித்தால், பெண்களை உடல் உறவுக்கு பயன்படும் ஒரு கருவியாக, ஒரு சில கயவர்கள் கருதினாலும், இது வெறும் பாலின இச்சை என்று தோன்றவில்லை. அதற்கும் மேல் உயிரும், உணர்வும் அற்ற ஒரு ஜடமாக பெண்ணைப் பார்க்கும் மனோபாவம், சமூகத்தில் பெருகி வருகிறது.

இந்த இழிவான மனநிலை, திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல.பெண் வீட்டை விட்டு வெளியே வந்தால் கெட்டவள். கவர்ச்சியான ஆடை உடுத்தினால் குற்றம்; படித்தால் பாவம்; வேலை பார்த்தால் கேவலம்; சம்பாதித்து தன் சொந்தக்காலில் சுயமாக நின்றால் தலைகுனிவு. யார் அழைத்தாலும் அவள் வரவேண்டும். இல்லை என்றால் கற்பழிப்பு, கொலை, ஆசிட் வீச்சு என்கிற வக்கிர உணர்வு சமுகத்தில் வேகமாக பரவி வருகிறது.இப்படிப்பட்ட மனோ வக்கிரம் பிடித்த, சில மிருகங்கள் ஆண்களுக்கிடையே உலவுவது ஆண்வர்க்கத்திற்கே அவமானம். அவர்களுக்கு சரியான தண்டனை பெரும்பாலும் கிடைப்பதில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும், நிம்மதியும் கிடைப்பதில்லை. ஒரு குற்றத்தின் துயரம் மறப்பதற்குள், இன்னொரு குற்றம் நடக்கிறது. அதைப்பற்றி பேச ஆரம்பித்து முன்னதை மறக்கிறோம்.ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பதே உண்மை. ஒரு மனித சமுதாயமாக நாம் தோற்றுப்போய் விட்டோம் என்பதை, வெட்கத்துடன் ஏற்றுக் கொள்ளவேண்டும்.அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமாக்காரர்கள் என்று ஒரு கூட்டம் கொழுத்த பணத்தில் மிதப்பதும், அதனால் சுகமான வாழ்வில் திளைப்பதும், சாதாரண மக்களுக்கு எரிச்சலுாட்டுகிறது. அந்த எரிச்சலுடன், வழி தவறிப் போகும் ஒரு கும்பல், குடிபோதையில் எந்தக் குற்றத்தையும் செய்ய தயாராகி விடுகிறது. போதை தான், எல்லா குற்றங்களுக்கும் ஆணிவேர், என்பதை உணர்ந்து திருந்தாத சமுதாயத்திற்கு நிம்மதியில்லை. மக்களுக்கு வழிகாட்டக் கூடிய தலைவர்கள் இன்று இல்லை. ஒழுக்கத்தை தனிப்பட்ட வாழ்விலும், பொதுவாழ்விலும் கடைப்பிடித்த தலைவர்கள் இன்று இல்லை.

சமுக அவலங்களை பயன்படுத்தி, ஓட்டு அறுவடை செய்யத்தான் அரசியல்கட்சிகள் நினைக்கின்றனரே தவிர, உண்மையான பிரச்னையை உணர்ந்து, அதற்கு தீர்வு காண எந்த அரசியல்வாதியும் தயாராக இல்லை. எந்த அரசியல் கட்சியிடமும் இதற்காக ஒரு செயல்திட்டமும் இல்லை. பெண்ணுக்கு மரியாதை தராத மண் என்ற அவலத்தை சுமந்து நிற்கும் தேசத்தின் பாதையை மாற்றிக் காட்டுவதே, நம் அனைவர் முன் நிற்கும் அவசியப்பணி.வன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்களை தடுக்க முடியவில்லை. அதே போல், கற்பழிப்புக்கு எதிராக, வெறும் வலுவான சட்டங்கள் கொண்டுவருவதால் மட்டும், அந்த பாதகத்தை தடுத்து நிறுத்தி விட முடியாது. காலங்காலமாக பெண்களை வெறும் ஒரு பண்டமாக பார்க்கும் மனோபாவத்தை, நம் மனதிலிருந்து துாக்கி வீசுவதிலிருந்தே, ஒரு புதிய மாற்றம் துவங்கும். கடந்த ஆண்டு, தலைநகரம் டில்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட பின், நடந்த ஆர்ப்பாட்டங்களில், ‘குற்றவாளிகளை, துாக்கில் போடுங்கள் என்று மட்டும் பெண்கள் கோஷம் போடவில்லை. நாங்கள் எவ்வாறு ஆடை உடுத்த வேண்டும் என்று பாடம் நடத்தாதே... உங்கள் பையன்களிடம் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்யாதே எனச் சொல்!’ என்றும் முழங்கினர்.

பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக முன்னிறுத்தப்படும் ஆணாதிக்க குடும்ப அமைப்பு முறை தான், பல நேரங்களில் பெண்ணுக்கு சமாதி கட்டும் இடமாகவும் மாறி விடுகிறது. வீட்டிற்குள் நடக்கும் பெண் கருக்கொலை, பெண் சிசுக்கொலை, வரதட்சணைக் கொலைகள், மனைவியின் சம்மதமின்றி கணவர்கள் இச்சையை கட்டாயப்படுத்தி பூர்த்தி செய்வதை வேறெப்படி சொல்ல முடியும்?சாராய விடுதிகளில், மதுவை கலக்கி தரும், ‘பார் பெண்டர்’களாகவும், 20/20 கிரிக்கெட் போட்டிகளில், கவர்ச்சி உடையணிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும், ‘சியர்ஸ் கேர்ள்ஸ்’களாகவும் பெண்கள் இறக்கி விடப்பட்டு உள்ளனர். அழகிப் போட்டிகளை அறிமுகம் செய்து, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் என, அடுத்தடுத்து இந்தியப் பெண்களை, உலக அழகிகளாக தேர்வு செய்து, அவர்களை போல் மெலிந்த உடம்பு, சிவந்த நிறம் பெறுவதையே லட்சியமாக கருதும்படி, பெண்களை தொடர்ந்து ஊடகங்கள் மூலம், மூளைச்சலவை செய்து, அதன் விளைவாக மூலைக்கு மூலை அழகுச் சாதனங்களின் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது.மன இச்சையின்படி வாழ்ந்தால், அதன் முடிவு அழிவில் தான் முடியும் என்பதை உணர்ந்தால், தவறு செய்ய எந்த மனமும் தயங்கும்.அரசியல் செல்வாக்கில்லாத, பண பலமில்லாத நான்கு பேருக்கு துாக்கு தண்டனை கொடுத்து விடுவதால், இந்த அவலத்திற்கு முடிவு கட்டி விட முடியாது. இப்படிப்பட்ட குற்றங்களை செய்பவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், அவர்களுக்கும் இந்த தண்டனை தரும் நிலை வர வேண்டும்.ஒரு வகையில், சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு நாமும் மறைமுக காரணமாக இருக்கிறோம். நம்மைச் சுற்றி நிகழும் தீமைகளை கண்டும் காணாமல் வாழ்கிறோம். அதைத் தடுக்க முயற்சிப்பதில்லை. அது தவறு என்று வாயைத் திறந்து சொல்லாமல் ஊமையாக இருக்கிறோம். இது சரி, இது தவறு என்று உணரும் பக்குவத்தை உதறிய மனசாட்சி செத்துப் போன மனதின் விளைவு. ஒரு மனிதனுடைய சாவை விட கொடியது அவன் உயிருடன் இருக்கும் போதே நிகழும் அவனது மனசாட்சியின் மரணம். ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியும் மரத்துப் போய் கிடக்க, யாரிடம் நியாயம் கேட்பது என்று தெரியவில்லை. விரைவான தீர்ப்புகளும், கடுமையான தண்டனைகளும், சட்டத்தின் மாற்றங்களும் இந்த அவல நிலையை போக்க போதுமானது அல்ல. இவை குப்பைத் தொட்டிக்கு சென்ட் தெளிப்பது போலதான்.

இனி மாற்றங்கள் என்பது சட்டத்தில் அல்ல... மக்களின் மனோபாவத்தில் தான் வர வேண்டும் என்பது மட்டும் நிச்சயம். ஒருவேளை குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு அவர்கள் செத்துப் போகலாம். ஆனால், செத்துப் போன மனசாட்சியை வைத்துக் கொண்டு நாம் எப்படி இனி வாழப்போகிறோம் என்பதே பிரதான கேள்வி.
இ.மெயில்:affu16.in@gmail.com

அப்சல் - சிந்தனையாளர், எழுத்தாளர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (7)

ramram - Pondicherry,பிரான்ஸ்
29-செப்-201314:10:47 IST Report Abuse
ramram இவ்வாறு ஏன் அரபு நாடுகளில் நடப்பதில்லை. யோசிக்கவேண்டும் அரபுநாடுகளில் தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்ற படுகிறது. தண்டனைகளும் கடுமையானது, உடனடியானது. இது போல் நம் நாட்டிலும் திருத்தபட்டால் குற்றங்கள் நிச்சயம் குறையும்.
Rate this:
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
29-செப்-201312:14:05 IST Report Abuse
Baskaran Kasimani இதற்க்கெல்லாம் தீர்வு பெண்களுக்கு சிறுவயதிலேயே தற்காப்புக்கலைகள் சொல்லிக்கொடுப்பது. அதை செய்ய நாம் தயங்கினோம் என்றால் பெண்ணை ஆணுக்கு சமமாக நடத்தவில்லை என்பது கசக்கும் உண்மை.
Rate this:
Cancel
Anandraj Aga - Chennai,இந்தியா
29-செப்-201308:46:06 IST Report Abuse
Anandraj Aga மனம்தான் மாற வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X