மதுரை 2030: இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்ன| Dinamalar

மதுரை 2030: இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்ன

Added : செப் 30, 2013 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மதுரை 2030: இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்ன

2030ல் மதுரை எப்படியிருக்க வேண்டும் என, கல்லூரி மாணவர்களிடம் கேட்ட போது, மதுரைப் பற்றிய தங்கள் எதிர்கால கனவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அவர்கள் கூறிய கருத்துகள் சில.


மெட்ரோ சிட்டி மதுரை :


ஜுலி மார்கோ, ஆசிரியை, பைபாஸ் ரோடு: தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 14.62 லட்சம் மக்கள் தொகையுடன், 148 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. மதுரையின் இதயப்பகுதியான மீனாட்சி கோயில் மற்றும் புராதன இடங்களின் அருகில் போக்குவரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். கிழக்கே தெப்பக்குளம் முதல் காளவாசல் வரை மற்றும் தெற்கே திருப்பரங்குன்றத்திலிருந்து புதூர் வரை உள்ள ரோடுகளில் கடைகளின் ஆக்கிரமிப்பும், வாகன ஓட்டிகள் முறையற்று வாகனங்களை "பார்க்' செய்வதும் அதிகரித்துள்ளது. போக்குவரத்து விதிகளை யாரும் பெரிதாக மதிப்பதேயில்லை. "பிரீ லெப்ட்' பகுதியில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாதபடி முன் வந்த வாகனங்கள் அடைத்துக் கொண்டு நிற்கின்றன. முக்கிய சந்திப்புகளில் தற்காலிகமாக போக்குவரத்து விதிகளை ரோடுகளில் ஏற்படுத்திட வேண்டும். மக்கள் நினைத்த இடத்தில் ரோட்டை கடக்க முயற்சிக்கின்றனர், இது எந்த அளவிற்கு ஆபத்து என்பதை, அவர்களுக்கு உணர்த்துவது யார்? அதிக நெரிசல் ரோடுகளில் பாதசாரிகள் செல்ல சுரங்கப் பாதை அவசியம் அமைக்க வேண்டும். தரமில்லாத பாலங்கள், ரோட்டின் குறுக்கேயுள்ள மின் கம்பங்கள், விளம்பர போர்டுகள் அகற்றப்பட வேண்டும். சென்னையில் உள்ளது போல் மெட்ரோ ரயில் அல்லது மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால், 2030ல் மதுரை "மெட்ரோ
சிட்டியாக' வளர்ந்துவிடும்.


2030ல் விபத்தில்லா மதுரை


யோகீஸ்வரி,குடும்பத் தலைவி, வில்லாபுரம்.2030ல் மதுரை அழகான தோற்றம் பெற்றிட, முதலில் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சாலை விதிகளை மதித்து, அதன் படி வாகன போக்குவரத்தை முறைப்படுத்திட வேண்டும். பிளாட்பாரங்களை ஆக்கிரமித்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்கி கொடுத்து, நடை பாதைகளை மக்கள் நடப்பதற்கு பயன்படுத்தும் வகையில் அவ்வப்போது சீரமைக்கலாம். பின்னால் வரும் வாகனங்களை கவனிக்காமல் நினைத்த இடத்தில் அதிரடி பிரேக் போட்டு விபத்து ஏற்படுத்தும் வாகனங்களுக்கும், போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும். சிக்னலுக்கு காத்திருக்கும் நேரத்தில், விரைவில் மக்கள் சாலையை கடந்து செல்ல, "ஜீபிரா கிராஸிங்' அமைக்க வேண்டும். முக்கிய இடங்களில் பாலங்கள் கட்டுவது நல்லது, ஆனால் அதை குறுகிய காலத்தில் தரமானதாக கட்டுவது மிக அவசியமாகும். மதுரையில் பெரிய மாற்றத்தை கொண்டு வர போக்குவரத்தை சீர் செய்து விபத்தை குறைத்தாலே போதும்.


ஈரடுக்குத் தீர்வு:


இரா.கல்யாண சுந்தரம்,அனுப்பானடி:
மதுரை தெற்கு வாசல் பாலத்தின் நெருக்கடிக்கு தீர்வு காண, ஈரடுக்குப் பாலம் அமைப்பதை தவிர வேறு வழியில்லை. ஆனால், மேலடுக்கு உருவாக்க கீழே பூமியிலிருந்து தான் தூண்களை எழுப்ப வேண்டும். முதலாவதாக வலுவான அகலமான தூண்களை பாலத்தின் இருபுறமும் தற்போதைய பாலத்தின் உயரத்திற்கு எழுப்பி, கிழக்கு-மேற்கில் தலா 7 அடி அகலப்பாதையை உண்டாக்க வேண்டும். இரு புறமும் 3 அடி நடைபாதை, 4 அடி சைக்கிள் செல்லும் வழியாக இருக்க வேண்டும். அதன் பிறகு தூணை மேலெப்பி மேலடுக்குப் பாலத்தை அமைக்க வேண்டும். மேலும் கீழுள்ள பாலங்கள் ஒரு வழிப்பாதையாக அமைக்க வேண்டும். இதைத் தவிர, இந்த நெருக்கடிக்கு இன்னொரு தீர்வாக தாழ்நிலை கர்டர் பாலம் அமைக்கலாம். அப்படி கர்டர் பாலம் அமைத்தால் அதில் பாதசாரிகளும், இரு சக்கர வாகனங்களும் மட்டும் செல்ல வசதியாக இருக்கும். பாலம் அமைக்க, இடங்களை ஆர்ஜிதம் செய்ய முடியாவிட்டால், ஈரடுக்கு பாலம் கட்டுவதை தவிர வேறு வழியில்லை.


நான்கு வழிச் சாலை வேண்டும்


ஜோதி, மதுரை மருத்துவ கல்லூரி.மதுரையில் சமீப காலமாக ஆடு,மாடு, நாய் தொல்லை அதிகரித்துள்ளது. வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் ரோட்டில் திரிந்தால் மதுரை எப்படி வளரும். இது போன்ற செயல்கள் நடக்க காரணமாக இருப்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். டூவீலர், ஆட்டோ, பஸ், கார் செல்ல தனி தனி ரோடுகளாக பிரித்து நகருக்குள் நான்கு வழி சாலை அமைக்கலாம். படித்த இளைஞர்கள் வெளி ஊர்களுக்கு வேலை தேடி செல்கின்றனர், நம் ஊரிலேயே பெரிய கம்பெனிகள், ஐ.டி., நிறுவனங்களை துவங்கிட வழி செய்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தி, பொருளாதார வளர்ச்சி பெற செய்யலாம். குடிநீர் குழாய்கள், குப்பை தொட்டிகள், மின் விளக்குகள் மாதம் ஒரு முறை பழுது பார்த்து குறையில்லாத மாநகரமாக உருவாக்கிட முயற்சி செய்ய வேண்டும்.


நகர எல்லையை விரிவாக்கலாம்


ராக்கேஷ்,மெப்கோ பொறியியல் கல்லூரி:பல ஆண்டுகளாக தென் மாவட்டங்களில் மின்சார பாற்றாக்குறை இருந்து வந்தது. அதில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று மதுரை. மின்சாரத்தை நம்பியுள்ள சிறு தொழில் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மின்சாரத்தை உற்பத்தி செய்திட, "சோலார் பிளான்ட் அமைக்கலாம். பெட்ரோல் விலைஉயர்வு மற்றும் சுற்றுப்புற தூய்மையை கருத்தில் கொண்டு, அருகில் உள்ள இடங்களுக்கு சைக்கிளில் சென்றால், உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும். நகரத்தின் அனைத்து பகுதிகளையும் இனணக்கும் வகையில் போக்குவரத்து வசதி செய்யலாம். நகர எல்லையை விரிவாக்கி தொடர் பேருந்து, மாடி பேருந்துகளை இயக்கலாம். போஸ்டர் ஒட்டுவது, பொது இடங்களில் புகைப்பது, எச்சில் துப்புவதை நிறுத்த வேண்டும்.


நகரமா கிராமமா?


பிரீத்தி, மதுரை காமராஜர் பல்கலைகழகம்:மதுரையை மற்ற நகரங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால், இன்னும் வளர்ச்சியடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அன்று, கிராமமாக இருந்த மதுரை இன்று, சிறியளவில் வளர்ச்சி பெற்று நகரத்திலும் சேராமல், கிராமத்திலும் சேராமல் நடுத்தரமாக இருக்கிறது. கே.கே. நகர், அண்ணா நகர், பை பாஸ் ரோடு இந்த ஒரு சில பகுதிகள் தான் பார்க்க ஹை-டெக் தோற்றத்தை தருகிறது. இருப்பினும் ரோடுகளை முறைப்படி பராமரிப்பதில்லை. நாம் வாழும் ஊரை, நாம் எப்படி வைத்து கொள்ள வேண்டும் என, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மதுரையை சுற்றியுள்ள ஊர்களுக்கு மின்சார ரயில் வசதி ஏற்படுத்தினால் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். சாக்கடை, சாலை வசதிகள் போன்ற அடிப்படை வளர்ச்சி பணிகளை முறைப்படி செய்து வந்தால், வளர்ந்து வரும் நகரமான மதுரை 2030ல் வளர்ந்த நகரமாகிவிடும்.


நெரிசல் தீர ஸ்கை பஸ் பிளான்:


ராஜாமணி, இந்திய பொறியாளர் சங்கத் தலைவர், மதுரை: மதுரையில் நிலவும் நெரிசலுக்கு காரணம் குறுகிய ரோடுகளும், ஆக்கிரமிப்புகளும் தான். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில், பிளைஓவர் பாலங்களை அமைத்து மோனோ ரயில் விடலாம். ரயில்வே பொறியாளர்கள் சார்பில், சில ஆண்டுகளுக்கு முன்பு, நகர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒரு திட்டம் ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டது. ரோட்டில் பில்லர்கள் எழுப்பி, அதன் மீதான பாலங்களில் டிராக் அமைத்து, இரு பெட்டிகள் கொண்ட டிராம் போன்ற ஸ்கைபஸ்களை இயக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு திட்டம் தற்போது ஐதராபாத்தில் பரிசீலிக்கப்படுகிறது. மேலூர், மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார் பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம், திருநகர், திருமங்கலம் வரை ஸ்கை பஸ்களை இயக்கினால், நகருக்குள் நெரிசல் தவிரும். இன்னொரு திட்டத்தையும் பரிசீலக்கலாம். மதுரையை சுற்றியுள்ள மேலூர், சிலைமான், அவனியாபுரம், திருமங்கலம், நாகமலை, விளாங்குடி, கூடல்நகர், அய்யர்பங்களா, மாட்டுத்தாவணி பகுதிகளை இணைக்கும் வகையில் புதிதாக ரயில் பாதை அமைத்து "டெமு' ரயில்களை இயக்கலாம். தற்போது ஒரு கி.மீ.,க்கு அகல ரயில் பாதை அமைக்க, நில ஆர்ஜிதத்தையும் சேர்த்து ரூ.ஏழு கோடியாகும் என மதிப்பீடப்படுகிறது. இதன் மூலம் புறநகர்பகுதியினர் நகருக்குள் வசிக்க வருவதை தவிர்க்க முடியும். மத்திய, மாநில அரசுகள் இணைத்து நிதி ஒதுக்கினால் இத்திட்டங்கள் சாத்தியமே. மதுரை வைகையாற்றின் இரு கரைகளிலும் அமைந்துள்ள ரோட்டை விரிவுப்படுத்தி, இரு வழிச்சாலையாக மாற்றி, வழிநெடுகிலும் ஆற்றையொட்டி பூங்கா, ரோட்டின் நடுவில் ஹைமாஸ் விளக்குகள், அமைத்து (மாடல் ரோடு) வாகன போக்குவரத்தை திருப்பி விடலாம். இடையிடையே இரு கரை ரோடுகளையும் இணைக்க தரைமட்ட அல்லது உயர்மட்ட பாலங்களை அமைக்கலாம். டெலிபோன், மின்சார, கேபிள் வயர்களை அண்டர்கிரவுன்டில் கொண்டு செல்ல வேண்டும். தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப, பாதாள சாக்கடை திட்டத்தில் ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும். "அண்டர்கிரவுன்டில்' வயர்கள், சாக்கடை, காஸ் இணைப்பு போன்றவைகளை கொண்டு சென்றால், ரோடுகளில் வாகன போக்குவரத்திற்கு சிரமம் இருக்காது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mkarthikbrave - chennai,இந்தியா
30-செப்-201318:25:40 IST Report Abuse
mkarthikbrave mudhal la double railway track podanum athai sollave illa
Rate this:
Share this comment
Cancel
jayaraman - coimbatore,இந்தியா
30-செப்-201311:16:59 IST Report Abuse
jayaraman எதிர்காலத்தில் மதுரை இப்படி இருக்குமோ இருக்காதோ ......முதலில் சுத்தமான காற்றும் உணவும் இருக்குமா என்று யூகித்து பாருங்கள் ........புரிந்தவன் ஞானி புரியாதவன் வெறும் கோணி .................
Rate this:
Share this comment
Cancel
Hm Join - Chennai,இந்தியா
30-செப்-201310:33:22 IST Report Abuse
Hm Join தனி மனித ஒழுக்கம் தன்னிறைவு பெற்றால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X