வளங்களை உருவாக்குவோம்!| Dinamalar

வளங்களை உருவாக்குவோம்!

Added : செப் 30, 2013 | கருத்துகள் (2)
Share
வளங்களை உருவாக்குவோம்!

1947க்கு பின், இந்தியாவின் தலைமை முற்றிலுமாகத் தவறாக வழிநடத்தப்பட்டு, சோஷலிச சிந்தனை எனும் தவறான திருப்பத்தை எடுத்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்த அதிகாரத்தை முழுதாக எடுத்துக்கொண்ட ஒரு விஷயத்தில்தான் இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் மிகச்சரியாக நடந்துகொண்டார்கள். ஆனால், நாட்டை உருவாக்கும் பணிக்கு நுணுக்கம் தேவைப்பட்ட பல துறைகளில், பெரும்பாலும் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இல்லை.
அந்த அரசியல் தலைவர்கள் பெரும் கூட்டங்களைக் கூட்டுவதில் வல்லவர்களாக இருந்தாலும், அந்தக் கூட்டங்களை நாட்டை உருவாக்கும் பணியில் கூட்டுறவோடு செயல்பட வைப்பது எப்படி என்பதைத் தெரிந்திருக்கவில்லை. நாட்டை உருவாக்கும் பணிக்கு ஒரு மாறுபட்ட திறன் தொகுப்பு வேண்டும். ஆனால் அவர்கள் விஷயத்தில் அது இல்லாமல் போனது. அந்த அரசியல்வாதிகள் தங்களிடம் தேவையான நிபுணத்துவம் இல்லை என்பதைக் கூட உணராமல் இருந்ததுதான் கொடுமையான விஷயம்.முன்னேற்றம் பாதிப்பு ஏன்:

சிலர் நல்ல நோக்கங்களால் தூண்டப்பட்டவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், வெறும் நல்ல எண்ணங்கள் இருப்பது மட்டும் போதுமானது அல்ல. குறிப்பாக, இந்தியா ஒரு பெரிய தேசம் என்பதால், கையிலெடுத்த காரியம் அதிக சிக்கலானது. சுதந்தரத்துக்கு பின்னர் இந்தியா விரைவாக ஏன் செழிப்பு அடையவில்லை என்பதை மோசமான தலைமை ஓரளவுக்கு நன்றாகவே விளக்குகிறது. அவர்கள் மோசமான திட்டங்களைத் தேர்வு செய்தது, இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுத்து வந்தது.


அதே காலக்கட்டத்தில் பிற நாடுகள் அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருந்தன. இந்தியத் தலைவர்கள் செய்திருக்க வேண்டியது இதுதான். எப்படி ஏனையோர் அவர்கள் முன்னேற்ற நிரலில் முன்னேறி வருகின்றனர் என்பதைக் கண்டு, அதிலிருந்து கற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நம் தலைவர்கள் அதைச் செய்ய மறுத்தனர். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உள்ள அளவுக்கு மீறிய இறுமாப்பும், அறியாமையும் ஒரு ஆற்றல் வாய்ந்த அழிவுக் கலவை; அது உறுதியான பேரழிவுக்கான செயல்முறை.'தன்னிறைவு' கொள்கை:

உண்மையிலேயே சோகமான விஷயம், அந்த இந்தியத் தலைவர்கள், இந்தியாவை வெளிநாட்டு வர்த்தகத்தில் இருந்து முழுமையாக அடைத்து வைத்ததுதான். அயல்நாட்டு வாணிபத்துக்கு எதிராக இருந்த இந்திய அரசாங்கத்தின் 'தன்னிறைவு' கொள்கை, கிழக்காசிய நாடுகளான தைவான், தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றின் திறந்த பொருளாதாரங்களில் இருந்து கூரிய முரண்பாடாக இருந்தது.


இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக, பொதுவாக விஷய ஞானம் அற்றவர்களாக இருந்ததால், தங்கள் தலைமை செய்த தவறுகளை சரியான முறையில் புரிந்துகொள்ளவில்லை. மக்கள் தங்கள் அரசியல் தலைவர்கள் மீது அபாரமான நம்பிக்கை வைத்து இருந்தனர்; அந்தத் தலைவர்களும், கேள்வியே கேட்காத மக்களின் நம்பிக்கையில் குளிர்காய்ந்து வந்தனர். மக்களும், அரசாங்கம் தங்களின் நலனைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுள்ள, தரும சிந்தனை வாய்ந்த அமைப்பு என்ற பொதுவான அனுமானத்தில் இருந்தனர். அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையேயான உறவு ஆள்பவருக்கும், ஆளப்படுவோருக்கும் இடையில் இருப்பதைப் போன்று இருந்தது.'அம்மா அப்பா' அரசாங்கம்:

அரசாங்கம் பலம் வாய்ந்ததாகவும், மானியங்கள், சலுகைகள் வழங்குவதாகவும் இருந்தது. அது ஒரு தந்தைவழி அரசாங்கம். அப்போது அரசாங்கத்தை விவரிக்க மக்கள் பயன்படுத்திய சொல்லகராதி, அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையே இருந்த உறவை விளக்குவதாக அமைந்தது. மக்கள், அரசாங்கத்தை 'அம்மா அப்பா' அரசாங்கம் என்றும், அதிகாரம் கொண்ட தலைவர்களை 'மாமா', 'பிதா' என்ற புனைப்பெயர்களைக் கொண்டும் அழைத்து வந்தனர்.


அரசாங்கம், தன் குடிமக்களைப் பொறுப்பற்ற, முதிர்ச்சி பெறாத குழந்தைகளைப் போல நடத்தி வந்தது. எதை, எப்போது செய்ய வேண்டும் என்று மக்கள் வழிநடத்தப்பட வேண்டியவர்கள் என்ற அளவில் வைத்து இருந்தது. பதிலுக்கு, மக்களும் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் சலுகைகளை எதிர்பார்த்துக் கையேந்தி நின்றனர். அரசாங்கத்திடம் இருந்து அதிக அளவில் சலுகைகள் பெறுவதற்கு, மக்கள் சாதி மத அடிப்படையில் குழுக்களை அமைத்து, உரிமைகளுக்காகப் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.ஓட்டு வங்கி சக்தி

: அந்த உறவுமுறை, ஜனநாயகத்தின் ஒரே காசான வாக்குச்சீட்டு என்பதைக் கொண்டு மத்தியஸ்தம் செய்யப்பட்டு வந்தது. ஒரு குழு எவ்வளவு பெரியது, எந்த அளவுக்குக் கூக்குரல் இடுகிறது என்பதைப் பொறுத்தே அரசாங்கம் அதற்கு முக்கியத்துவம் தந்தது. ஒரு குழுவின் சக்தி, அது எந்த அளவு ஒற்றுமையாகவும், எவ்வளவு கவனமாகவும் அதன் வாக்குகளைப் பயன்படுத்துகிறது என்பதன் நேரடி சம்பந்தமாக இருந்தது. எந்தக் குழு தனது வாக்கு வங்கியை ஒருமித்ததாகப் பயன்படுத்த சாமர்த்தியம் கொண்டதாக இருந்ததோ, அது அரசாங்கத்திடம் அதிகப்படியான உரிமைகளைப் பெற்று வந்தது.


அரசாங்கம் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் அது ஒரு ஒட்டுண்ணியாகவே இருந்தது. அது செல்வங்களை உருவாக்கவில்லை. மாறாக, வரியாக வசூலித்ததின் ஒரு பகுதியை தான் விழுங்கி, சிலவற்றைப் பொது விஷயங்களுக்கும், சிலவற்றை அரசியல் ஆதாயங்களுக்காக மறுவிநியோகம் செய்தும் வந்தது. கூடவே, கடுமையாகக் கடன் வாங்கி, பெரும் கடன் சுமைக்குள் வீழ்ந்து, இறுதியாக வரி செலுத்தும் மக்கள் அந்தக் கடன்களை அடைக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது.வரி போன இடம்:

அரசு வசூலித்த வரியின் ஒரு பகுதி, பல சாதி மதக் குழுக்களுக்கு, அந்தக் குழுக்கள் வாக்களிக்கும் விதத்தைப் பொறுத்து பிரித்துக் கொடுக்கப்பட்டு வந்தது. இப்படிப்பட்ட திட்டத்தைக் கடைபிடிக்கும்போது தொடரப்போகும் துயரம் புரிந்துகொள்ள எளிதானதே. பழமொழியில் சொல்வதைப் போல், 'ராமுவைக் கொள்ளையடித்து சோமுவுக்கு வழங்கும் அரசாங்கத்துக்கு சோமுவின் ஆதரவு என்றும் இருக்கும்.' எனவே ஒரு நாட்டில் சோமுக்கள் அதிகமாகவும், ராமுக்கள் குறைவாகவும் இருக்கும்போது, ஒருவரிடம் எடுத்து மற்றவர்களுக்குப் பிரித்து விநியோகிக்கும் அரசாங்கத்துக்கு, தேர்தல்களில் அவர்களின் ஆதரவு எப்போதும் இருக்கும்.


பொதுவாக, ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் பட்சத்தில், பிரித்து விநியோகம் செய்யும் கடமை அரசாங்கத்துக்கு உண்டு. ஆனால், வெறுமனே பிரித்து விநியோகம் செய்வதை மட்டும் தொழிலாகச் செய்து, வளங்களின் உருவாக்கத்துக்குத் தேவையான உதவியை உதாசீனப்படுத்தி, உழைத்துச் செலுத்தும் வரியின் பெரும் பகுதியை வேலை செய்யாமல் இருப்பவர்களுக்குத் தூக்கிக் கொடுப்பதாக அரசாங்கம் இருப்பதால், உழைப்புக்கு அவ்வளவாக பெரிய சன்மானம் ஒன்றும் இல்லை என்பதை மக்கள் காலப்போக்கில் கண்டுகொள்கின்றனர். இப்படி இருக்கும்போது, மக்களின் ஊக்கம் அரசாங்கத்திடம் இருந்து சலுகைகள் பெற அதிக முயற்சியாக செலவிடப்பட்டு, வளங்களை உருவாக்கத் தேவையான உழைப்புக்கு நேரம் குறைந்து போகிறது.நடுத்தர வர்க்கத்தின் நிலை:

உண்மையில், எல்லோரும் அரசின் சலுகைகளை நம்பி இருப்பதில்லை. நடுத்தர வர்க்கமே பெரும் சுமையைத் தூக்குகிறது, அதேபோல், எந்தப் பொருளாதாரத்திலும், நடுத்தர வர்க்கமே மாற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் முதன்மையான இயக்கு சக்தி. ஏனெனில், பெரும் செல்வந்தர்கள், இருக்கும் நிலையிலேயே நல்லபடியாக உள்ளனர். அதனால், மாற்றத்தைக் கொண்டு வருவதில் அவர்களுக்கு பெரிய ஆதாயம் ஒன்றும் இல்லை. தவிர, மாற்றத்துக்குப் பிறகு, முன்பை விட மேலும் சிறப்பாக இருக்க முடியுமா என்பதும் அவர்களுக்கு உறுதியான விஷயம் அல்ல. எனவே, சாதகமான விஷயத்தில் குழப்பம் கொண்டு வராமல் இருக்கும் புத்திசாலித்தனமான முடிவை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.


இன்னொரு பக்கத்தில் இருக்கும் ஏழைகள் கண்டிப்பாக மாற்றத்தை விரும்புவார்கள் என்றாலும், தினசரி வாழ்வுக்கு ஓயாது பாடுபட வேண்டிய நிலையில் உள்ளனர். அப்படி இருக்க, தொலைநோக்கில் தங்களுக்கு நன்மையைக் கொண்டுவரப்போகும் மாற்றத்தை ஏற்படுத்த அவர்களால் முடியாது. அன்றாட வாழ்க்கைகான போராட்டம் காரணமாக அவர்களால் குறுகிய நோக்கோடு மட்டும்தான் சிந்தித்துச் செயல்பட முடியும்.


நடுத்தர வர்க்கமே, மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான கல்வியையும், வழிமுறைகளையும் கொண்டது. அவர்களே அதிகமாக நசுக்கப்படுபர்கள். செயல்படாத அரசாங்கத்தின் அழுத்தத்தைக் கூர்மையாக உணர்பவர்கள். பெரும்பாலும் நல்ல மாற்றம் என்பது, கல்வியறிவு பெற்ற நடுத்தர வர்க்கம் மாற்றத்தைக் உருவாக்க வெளியே காலடி எடுத்துவைக்கும் போதுதான் நடக்கிறது.


( இதன் அடுத்த பகுதி 07/10/2013 வெளியாகும்)

இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-702-2.html

ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 09445901234 / 09445979797

நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னைAdvertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X