சென்னை : ""நாணயத்திற்கும், நம்பிக்கைக்கும் மறு பெயர் ஆர்.எம்.வீ.,தான், எனது அரசியல் படலத்துக்கு குத்துவிளக்கு ஏற்றி வைத்தவரும் அவர்தான்,'' என அமைச்சர் துரைமுருகன் பேசினார். எம்.ஜி.ஆர்., கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் 85வது பிறந்த நாள் விழா, ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் இலக்கிய விழாவாக சென்னையில் கொண்டாடப்பட்டது. அண்ணாமலை பல்கலை இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி தலைமை வகித்தார். விழாவில், தமிழ் அறிஞர்கள் மறைமலை இலக்குவனார், ராணி மைந்தன், தாமரை பெருஞ்சித்திரனார், டாக்டர் பெரு.மதியழகன், பள்ளத்தூர் பழனியப்பன் ஆகிய ஐந்து பேரும் பாராட்டப்பட்டனர்.
அவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகளை வழங்கி அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: ஆர்.எம்.வீ., அடக்கமான அரசியல் வாதி; தழும்பாத நிறைகுடம். நாணயத் திற்கும், நம்பிக்கைக்கும் மறுபெயர் ஆர்.எம்.வீ.,தான். எம்.ஜி.ஆரிடம் கணக்குகளைப் பார்க்க படித்த ஆடிட் டர்கள் எல்லாம் போட்டி போட்டபோதும், கடைசி வரை ஆர்.எம்.வீ.,யைத் தான் நம்பினார். அவர் மீது அவ்வளவு பெரிய நம்பிக்கை எம்.ஜி.ஆருக்கு. எனது அரசியல் அறிமுகப்படலத்தில் குத்துவிளக்கு ஏறறி வைத்தவர் இவர்தான். சட்டசபையில் அவரிடம் பெரும் சண்டை போட்டவனும் நான்தான்; என்றாலும், அவர் மீதான மரியாதை மட்டும் என்றும் குன்றியது இல்லை. அவரது அனுபவத்திற்கு, விளம்பர பிரியராக இருந்திருந்தால் அரசியலில் மினுமினுத்திருக்க முடியும். அதை விரும்பாலாமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என சேவை செய்து வரும் மாமனிதர் அவர். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.
ஓய்வுபெற்ற நீதிபதி கோகுலகிருஷ்ணன் பேசும்போது, ""உழைப்பு, அன்பு, பண்போடும் நடந்து கொள்பவரிடத்தில்தான் இறைவன் இருப்பார் என உணர்ந்தவர். ஈ.வெ.ரா., அண்ணாதுரை முதல், எம்.ஜி.ஆர்., கருணாநிதி என நம் கால தலைவர்கள் வரை பழகியிருக்கிறார். அவரது உயர்ந்த தன்மையால் அருளாளராக உள்ளார். இவரால் உயர்ந்தர்கள் ஏராளம். ஆர்.எம்.வீ., போன்றோர் தவறுகளை தைரியமாக தட்டிக்கேட்கவேண்டும். அப்போதுதான் இளைஞர்களிடடையே தட்டிக்கேட்கும் எண்ணம் வரும்,'' என்றார்.
தலைமை வகித்து பேசிய எம்.ஏ.எம்.ராமசாமி பேசும்போது, ""எளிமையவர். அறநிலையத்துறையில் இவர் செய்த பணிகள் ஏராளம். கோவில்கள் தோறும் இவர் பெயர் இல்லாமல் இல்லை. கடவுள் அருள் உள்ளவர். அவர் 105 ஆண்டுகள் வரை இருந்து தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்,'' என்றார். மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வரவேற்றுப் பேசும்போது,""தமிழக வரலாற்றில் அறநிலையத்துறை புரட்சியை ஏற்படுத்தியவர். வாழ்நாள் முழுவதும் எம்.ஜி.ஆர்.,நினைத்து வாழ்ந்தவர். எம்.ஜி.ஆர்., பெயரைச் சொல்ல இவரை விட்டால், வேறு ஒருவருக்கும் தகுதியில்லை. எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து இருக்கும் வரை, ஆர்.எம்.வீ., என்ற மூன்றெழுத்தும் நிலைத்திருக்கும்,'' என்றார். விழாவில், "யாதுமாகி நின்றாய்' என்ற தலைப்பில் சுதா சேஷய்யன் பேசினார்.