சென்னை : ""ஆதிதிராவிட மக்கள் மீதான விரோதப்போக்கை அரசு வெளிப்படுத்தி வருகிறது. அரசுப் பணிகளில் பொறுப்பு வகிக்கும் அச்சமுதாய அதிகாரி களும் தாக்கப்படுகின்றனர்; பழி தீர்க்கப்படுகின்றனர்,'' என, சமூக சமத்துவப்படை நிறுவனத் தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்., குற்றம் சாட்டினார். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பழிவாங்கும் போக்கு மற்றும் நெல்லை துணைவேந்தர் தாக்கப்பட்ட சம்பவங்களில் அரசின் நடவடிக்கையை கண்டித்து மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் சார்பில், சென்னை மெமோரியல் ஹால் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ம.தி.மு.க., சமூக சமத்துவப் படை உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், சமூக சமத்துவப் படை நிறுவனத்தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேசியதாவது: உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., பாதிக்கப்பட்டபோது, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுத்திருப்பது புதிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஆதிதிராவிட மக்கள் மீதான அரசின் அடக்குமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்கப்பட்டு, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அது அவர்களுக்கு வாழ்வாதாரமாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும். ஆதி திராவிட மக்கள் மீதான விரோதப் போக்கை அரசு வெளிப்படுத்தி வருகிறது. அரசுப்பணிகளில் பொறுப்பு வகிக்கும் அச்சமுதாய அதிகாரிகளும் தாக்கப்படுகின்றனர்; பழி தீர்க்கப்படுகின்றனர்.
சட்டத்தை யார் வேண்டுமானாலும், கையில் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 2,000 பேர், தகுந்த நடவடிக்கை இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சிவகாமி பேசினார்.
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: அரசு கேபிள் "டிவி' தொடர்பான ஊழலை எதிர்த்த நேர்மையான ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் பழிவாங்கப்பட்டுள்ளார். அதன் மூலம் அவரது மதிப்பிற்கும், மரியாதைக்கும் ஏற்பட்ட இழப்பை இந்த அரசு ஈடு செய்யுமா? அவருக்கு ஏற்பட்ட இழப்பீட்டு முழுப்பொறுப்பும் தமிழக முதல்வரையே சேரும். நேர்மையான அதிகாரி மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்வது, அதிகார வர்க்கத்தின் பழி தீர்க்கும் செயல். துணை வேந்தர் என்றால் நெஞ்சிலே வைத்து பூஜிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் இன்று நெல்லை துணைவேந்தர் காளியப்பனை அவரது அலுவலக அறையிலேயே, ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ., அடியாட்களுடன் சேர்ந்து சென்று காட்டுமிராண்டித்தனமாக தாக்கினார். அந்த சட்டமன்ற உறுப்பினர் மீது உரிய நடவடிக்கை இல்லை. இவ்வாறு வைகோ பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE