சென்னை : சென்னை மாநகராட்சியும், நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையும் இணைந்து, கூவம் ஆற்றின் கரையோரங்களில் சேர்ந்துள்ள குப்பை கூளங்களை ஒரே கட்டமாக அகற்றும் பணி நேற்று தொடங்கியது. மழைக் காலத்தில் கூவம் ஆற்றில் வெள்ளம் தடையின்றி செல்லவும், கொசு உற்பத்தியை தடுக்கும் வகையிலும், கரை ஓரம் உள்ள குப்பை கூளங்களை அகற்ற மாநகராட்சி திட்டமிட்டது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையுடன் இணைந்து கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம் மாநகராட்சி மண்டலங்களில் கூவம் ஆற்றின் ஓரம் வசிக்கும் மக்களிடையே, குப்பைகளை ஆற்றில் போட வேண்டாம் என்று விழிப்புணர்வு பிரசாரங்கள், லயோலா கல்லூரி மாணவர்கள் மூலம் நடத்தப்பட்டன.
கூவம் ஆற்றில், கீழ்ப்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட, பகுதிகளில் 550 மெட்ரிக் டன் குப்பை கூளங்களும், நுங்கம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 150 மெட்ரிக் டன்னும், திருவல்லிக்கேணி மண்டலத்திற் குட்பட்ட பகுதிகளில் 170 மெட்ரிக் டன் குப்பை கூளங்கள் தேங்கியிருப்பதாக கண்டறியப்பட்டது. அந்த குப்பை கூளங்களை ஒரே கட்டமாக அகற்றும் பணியை நேற்று சூளைமேடு நமச்சிவாயபுரத்தில், மேயர் சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். இதில், 300க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
குப்பைகளை அகற்றும் பணியை தொடங்கி வைத்து மேயர் கூறியதாவது: கூவம் ஆற்றங்கரையில் டேம்ஸ் சாலை, லாங்ஸ் கார்டன் சாலை, சிவானந்தா சாலைகளின் ஓரங்களில் மாநகராட்சி பூங்காக்களை அமைத்துள்ளது. நீர்வழித் தடங்களில் குப்பைகளை கொட்டக் கூடாது என்று லயோலா கல்லூரி மாணவர்கள் கூவம் கரையோரம் வசிப்பவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர். கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி மண்டலங்களில் கூவம் ஆற்றில் 16 கி.மீ., நீளத்திற்கு இரு புறங்களிலும் தேங்கியுள்ள குப்பை கூளங்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்குள் இரு புறத்திலும் உள்ள குப்பை கூளங்கள் அகற்றப்படும்.
கூவம், பக்கிங்காம் கால்வாய் போன்று, நகரில் உள்ள நீர்வழித் தடங்களில் குப்பைகளை பொது மக்கள் போடக் கூடாது. பொதுமக்கள் குப்பைகளை வீட்டிலேயே தரம் பிரித்து தெருக்களில் வரும், குப்பை வண்டிகளில் போட வேண்டும். இவ்வாறு மேயர் கூறினார். மேயருடன் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் - செயலர் பனிந்தர் ரெட்டி, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE