சென்னை : கே.கே.நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில், "ஆக்குபேஷனல் தெரபி' மருத்துவர் பணியிடம், கடந்த ஆறு மாதங்களாக நிரப்பப்படாததால், சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 1979ம் ஆண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கென கே.கே.நகரில் அரசு புனர்வாழ்வு மருத்துவமனை துவங்கப்பட்டது. இதில், நோயாளிகளுக்கு சிகிச்சையும், சமூகம் மற்றும் தொழில்பயிற்சி தொடர்பான உதவிகளும் வழங்கப்படுகின்றன. பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால், கை, கால் போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்த, நூற்றுக்கணக்கான நோயாளிகள் மாநிலம் முழுவதிலிருந்தும் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
வெளி நோயாளிகள், செயற்கை உடல் உறுப்புகள் ஆய்வகம், "பிசியோதெரபி' மற்றும், "ஆக்குபேஷனல் தெரபி' உள்ளிட்ட பத்து துறைகள் இந்த மருத்துவமனையில் உள்ளன. உடல் உறுப்புகள் செயல்பாட்டில் பாதிப்பு உடைய நோயாளிகள், "பிசியோதெரபி' பயிற்சி பெற இங்கு வருகின்றனர். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயிற்சி அளிக்க, நடைமுறை பயிற்சி எனப்படும், "ஆக்குபேஷனல் தெரபி' பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவில் பணியாற்றிய டாக்டர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். அதன்பின், அப்பணியிடம் நிரப்பப்படாததால், நடைமுறை பயிற்சி பெற முடியாமல் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டால், நோயால் பாதிக்கப்பட்ட கை மற்றும் கால் போன்ற உடல் உறுப்புகள் சரிவர இயங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. டாக்டர் இல்லாததால், தொடர் பயிற்சி மேற்கொள்ள முடியாத நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். "ஆக்குபேஷனல் தெரபி' பிரிவிற்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நோயாளிகள் விரும்பு கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE