மாசில்லா மதுரை: பூச்சிகளைக் காணோம்; அதனால் மரங்களையும் காணோம்| Dinamalar

மாசில்லா மதுரை: பூச்சிகளைக் காணோம்; அதனால் மரங்களையும் காணோம்

Added : அக் 01, 2013
Advertisement
மாசில்லா மதுரை: பூச்சிகளைக் காணோம்; அதனால் மரங்களையும் காணோம்

காட்டில் அரிதாக வளரும் தாவரங்களை, வெறும் பந்தல் அலங்காரத்திற்காக, தோரணத்திற்காக அழிப்பதால், அவற்றின் சந்ததிப் பெருக்கம் குறைந்து வருகிறது. வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால், நன்மை பயக்கும் பூச்சிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்கின்றனர், மதுரைக் கல்லூரி தாவரவியல் துறைத் தலைவர் ராஜசேகர், பேராசிரியர் கருப்புசாமி.
தமிழக வனத்துறை சார்பில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அழியும் வகை தாவரங்களை ஆய்வு செய்வதற்காக, தமிழகத்தில் இருந்து 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தாவரங்களை வகைப்படுத்துவதில் நிபுணர்களான இவர்களை, மதுரையில் இருந்து, தேர்வு செய்துள்ளனர். ஆராய்ச்சி குறித்து கூறியதாவது:


தமிழகத்தில் அழியும் நிலையில் 50 வகை தாவரங்கள் உள்ளன. அதில் குறிப்பாக ரத்தின ஆபரண மலர்கள், பென்டிங்கியா எனப்படும் காட்டுப்பனை, ஜானக்கியா எனப்படும் ஆதிவாசி மருந்துச் செடி, சில் ஆர்கிட்ஸ் வகைகள் அழியும் நிலையில் உள்ளன. ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் இந்த வகைச் செடிகள் எத்தனை உள்ளன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தேடுதலின் போது, அரிதான தாவரங்களை தெரிந்து கொள்வது, அழிவிலிருந்து பாதுகாப்பது, ஆய்வகங்களில் மறுஉற்பத்தி செய்வது, பாதுகாப்பு முறைகளை தெரியப்படுத்துவது என்ற முறைகளில் ஆய்வு செய்கிறோம்.


"சைகஸ்' எனப்படும் காட்டுப்பனை பயன்தரக்கூடியது. ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பூங்கொத்து மட்டும் பூக்கும். இவற்றை வெட்டி எடுத்து கல்யாண வீட்டில் தோரணமாக கட்டுகின்றனர். பூக்கள் பத்து நாட்களானாலும் வாடாது. ஒற்றை பூங்கொத்தையும் வெட்டி எடுப்பதால், அவற்றின் உற்பத்தி தடைபடுகிறது. கேரியேட்டா காட்டுப் பனையின் இலை, மீன்வால் போன்றிருக்கும். ஒரு இலை உருவாவதற்கு ஓராண்டாகும். அவற்றை பறித்து மேடை அலங்காரம் செய்கிறோம். மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் வளரும் இவற்றை, சுயலாபம் கருதி எளிதாக வெட்டி விடுகின்றனர்.


காடுகளில் வனத்துறை நிலங்களை நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு விடும் போது, குத்தகை நிலத்தைத் தாண்டி, காட்டை கபளீகரம் செய்கின்றனர். அதில் டீ, காப்பிச் செடிகளை நடுகின்றனர். தற்போது தேனி மாவட்டத்தின் மேகமலை பகுதியில், இத்தகைய ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.


காட்டில் வளரும் மரம், செடி, கொடிகள், பூச்சிகளின் மூலமே அயல் மகரந்தச் சேர்க்கையால் சந்ததியைப் பெருக்குகின்றன. பூச்சிகள் இல்லாவிட்டால், செடிகள் மலடாகிவிடும். தரமான தாவர விதைகள் கிடைக்காது. யாரும் நடாமலேயே, காடுகளில் மரங்களின் பெருக்கத்திற்கு பூச்சிகள் உதவுகின்றன.


வாழை மற்றும் இலவ மரங்களுக்கு, வவ்வால் தான் அயல் மகரந்தச் சேர்க்கை செய்யும் முக்கிய காரணிகள். இவற்றின் மூலம் விதைகள் மலட்டுத் தன்மையின்றி, மண்ணில் தழைக்கின்றன.


ஆர்கிட்ஸ் மலர்கள் வண்ணத்துப்பூச்சிகள் இல்லாவிட்டால், மலடாகி விடும். மாம்பழ வண்டுகள், பூவாக இருக்கும் போதே உள்ளே சென்று தங்கிவிடும். கனியாகும் போது, அதற்குள்ளேயே முட்டையிட்டு, பழுத்தபின் வண்டாக வெளியேறும். மீண்டும் அடுத்த பூக்களில் சென்று மகரந்தச் சேர்க்கை செய்கிறது. பூ காயாகி, கனியாவதற்கும், வண்டு இனப்பெருக்கம் செய்வதற்கும் ஒரே கால இடைவெளி தான்.


ஆலமரம் பூக்காது, அத்திப் பூக்காது என்று சொல்வதுண்டு. ஆல், அரசு, அத்தி மரங்களும் பூக்கின்றன. இதற்கென்றே சில பூச்சிகள் உள்ளன. மரம் எப்போது பூக்குமென, அவற்றுக்குத் தெரியும். பழத்தை திறந்து பார்த்தால், அதில் புழுக்கள் நெளிவதை பார்க்கலாம். இவையெல்லாம் இயற்கையின் அற்புதங்கள்.


தேனீக்கள் அனைத்துப் பூவிலும் தேன் எடுக்கும். அனைத்தையும் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்தும். வயல்களில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள், இந்தவகை பூச்சியினங்களையும் அழித்து விடுகின்றன.


காடுகள் வளம் பெற... பூச்சிகளை வாழவிடுங்கள், மரங்களை வாழ விடுங்கள் என்றனர்.


இவர்களிடம் பேச:94867 73173.


தோட்டமாக மாறிய குப்பைக் கிடங்கு


உரப்பூங்கா அமைத்து வழிகாட்டுகிறது எழுமலை பேரூராட்சி. மதுரை மாவட்டம் எழுமலை பேரூராட்சி நிர்வாகம், குப்பைக் கிடங்கை காய்கறி தோட்டமாக மாற்றி சாதனை படைத்துள்ளது. எழுமலை பேரூராட்சிக்குட்பட்ட 18.33 சதுர கி.மீ., பரப்பளவு பகுதியில் நாளொன்றுக்கு ஒன்றரை


டன் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. வாசிமலையான் கோயில் செல்லும் வழியில், ரூ.35 லட்சம் மதிப்பில், ஒரு ஏக்கர் 40 சென்ட் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள உரப்பூங்காவில், இக்குப்பை கொட்டப்படுகிறது. இங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பை பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகளை தொட்டியில் இட்டு இ.எம். சொலுசன் ஊற்றி மக்கச் செய்து, கலவை உரமாகவும் மண்புழு உரமாகவும் மாற்றப்படுகிறது.


பேரூராட்சி தலைவர் சித்ரா, செயல் அலுவலர் ராஜேந்திரன் கூறியதாவது: இப்பேரூராட்சியில் 16 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு ஒரு நாளைக்கு சேகரிக்கப்படும் குப்பைகளை எங்கு கொட்டுவது, எப்படி அழிப்பது என்று தெரியாமல் திகைத்த போது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பேரூராட்சிகள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்ற அரசின் உத்தரவு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இதன்படி வாசி மலையான் கோயில் செல்லும் வழியில், ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு உரப்பூங்கா அமைக்கப்பட்டு, குப்பை கொட்டப்படுகிறது. இங்கு குப்பைகள் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. மீதமுள்ள இடத்தில் விவசாய தோட்டம் அமைக்கப்பட்டு வாழை, அகத்தி கீரை, கத்தரி, வெண்டை, தக்காளி போன்றவை பயிரிடப்பட்டுள்ளன. காய்கறிகள், மண்புழு உரத்தை கேட்பவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம். இதன்மூலம் பேரூராட்சிக்கு வருமானம் கிடைக் கிறது. பிளாஸ்டிக் பொருட்களை மண், தூசி இல்லாமல் சுத்தம் செய்யவும் (பிளாஸ்டிக் வேஸ்ட் டஸ்ட் கிளீனிங் மிஷின்), பின்னர் அதை சிறிய அளவில் துண்டாக்கவும் (பிளாஸ்டிக் ஸ்கேர்ன் கிரைண்டர்) இரு மிஷின்களை இப்பூங்காவில் தனி அறையில் நிறுவியுள்ளோம். இந்த பிளாஸ்டிக் துண்டுகள், பிளாஸ்டிக் ரோடு அமைக்க பயன்படுத்தப்படுகிறது. வரும் நாட்களில் இந்த இடத்தை விரிவுபடுத்தி பெரிய அளவில், பொது மக்களுக்கு பெரிதும் பயன்படும் அளவில் விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


ஓய்வூதியர்களைக் கொண்ட மரங்களை வளர்க்கலாம்


மதுரை கோ.புதூர் அரசு ஓய்வூதியர் ஆர்.மோகன்ராஜ்: தமிழகத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களில் பலர் சமூக ஆர்வலராகவும், தொண்டு புரிவோராகவும் உள்ளனர். அவர்களை இதுபோன்ற பணிகளுக்கு அரசு பயன்படுத்தலாம். மரம் நட, அரசு பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிட்டும், அந்தளவு மரங்கள் வளர்ந்துள்ளனவா? இல்லை. சில நாட்களில் அல்லது சில மாதங்களில் அவை போதிய பராமரிப்பு இன்றியும், தண்ணீர் இல்லாமலும், ஆடுமாடு மேய்ந்தும், மனிதர்களாலும் அழிக்கப்பட்டு விடுகின்றன. பின்வரும் கருத்துக்களை அரசு பரிசீலித்தால் நல்லது


*மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க சமூக ஆர்வம் கொண்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை பயன்படுத்தலாம்.


*ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தனியாகவோ, குழுக்களாகவோ சாலை மற்றும் தெருக்களை


தத்து எடுத்து மரம் வளர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.


*அவர்களுக்கு தேவையான உபகரணங்கள், கன்றுகளை இலவசமாக வழங்கி, நல்லபடியாக பராமரிக்க ஊக்குவிக்கலாம்.


*10 பேர் கொண்ட குழுக்களுக்கு ஒரு கி.மீ., நீளமுள்ள சாலையும், 5 பேர் கொண்ட குழுவிற்கு பெரிய வீதிகள், தனிநபர் எனில் சிறிய குடியிருப்பு பகுதிகளையும் ஒதுக்கலாம்.


*எந்தக்குழு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகிறதோ, அவர்களுக்கு பென்ஷனுடன், ஊக்கத்தொகையாக நபர் ஒருவருக்கு ரூ. ஆயிரம் வழங்க வேண்டும்.


*சாலை முழுவதையும் தத்து எடுத்து மரங்களை உருவாக்கித் தரும் பெரிய தனியார் நிறுவனங்களுக்கு வரிவிதிப்பில் விலக்கு அளிக்கலாம். பல கோடி ரூபாய் செலவு செய்து, திட்டங்கள் பயனற்று போவதைவிட, இதுபோன்ற ஓய்வு ஊழியர்களை பயன்படுத்தி, திட்டத்தை பயனுள்ளதாக்கலாம். இதனால் மதுரை மட்டுமின்றி, மாநிலமும் பசுமைமயமாகும்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X