நெசவாளர் பானுமூர்த்திக்கு லட்சத்தைவிட மகிழ்ச்சி தருவது எது?| Dinamalar

நெசவாளர் பானுமூர்த்திக்கு லட்சத்தைவிட மகிழ்ச்சி தருவது எது?

Added : அக் 03, 2013 | கருத்துகள் (10) | |
புதிய கண்டுபிடிப்புகளுக்கான முதல் பரிசை பெறுபவர் வேலூர் மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள துருகம் பகுதியைச் சேர்ந்த நெசவாளி பானுமூர்த்தி என்று அறிவித்து ,ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய போது கோவை கொடீசியாவில் திரண்டிருந்த மொத்த கூட்டமும் எழுந்து நின்று ஆர்ப்பரித்து கைதட்டி மகிழ்ந்தது.யார் இந்த பானுமூர்த்தி, இவரது கண்டுபிடிப்புதான் என்ன.?கைத்தறி தொழிலும்,அந்த
நெசவாளர் பானுமூர்த்திக்கு லட்சத்தைவிட மகிழ்ச்சி தருவது எது?

புதிய கண்டுபிடிப்புகளுக்கான முதல் பரிசை பெறுபவர் வேலூர் மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள துருகம் பகுதியைச் சேர்ந்த நெசவாளி பானுமூர்த்தி என்று அறிவித்து ,ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய போது கோவை கொடீசியாவில் திரண்டிருந்த மொத்த கூட்டமும் எழுந்து நின்று ஆர்ப்பரித்து கைதட்டி மகிழ்ந்தது.
யார் இந்த பானுமூர்த்தி, இவரது கண்டுபிடிப்புதான் என்ன.?
கைத்தறி தொழிலும்,அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களும் செழிப்புடன் காணப்படும் துருகம் பகுதியைச் சேர்ந்தவர் பானுமூர்த்தி. பத்தாவது படிக்கும்போது எதிர்பாராதவிதமாக இவரது தாய் இறந்துவிட, பெரியவன் என்ற முறையில் குடும்ப பாரத்தை தந்தையுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு பதினான்கு வயதில் கைத்தறி தொழிலில் இறங்கினார்.
கொஞ்சம், கொஞ்சமாக இந்த தொழிலின் நுணுக்கத்தை கற்றுத் தேர்ந்தார். தறியில் நெய்த புடவைகளை கொண்டு போய் கொடுக்கப்போகும் போது, கொஞ்சம் புது டிசைனில் நெய்ய வேண்டும் ஆனா அது உங்களால முடியுமா? என்று சொல்லியிருக்கின்றனர். இவருக்கு "சுருக்'கென்று பட்டது . என்னால் நிச்சயமாக முடியும் என்று சொல்லி ஆர்டரை கேட்டு வாங்கி வந்து நெய்து கொடுத்துள்ளார். இதன் காரணமாக பாராட்டும், ஆர்டர்களும் குவிந்தன.
இதற்கு பிறகு மேலும் மேலும் தொழிலில் பல நுணுக்கங்களை கற்றவர் கடைசியாக ஒரு புதிய விஷயத்தை கண்டுபிடித்து இந்த கைத்தறி தொழிலில் புகுத்தினார்.
இந்த புதிய கண்டுபிடிப்பை தறியில் அமல்படுத்த சின்ன,சின்ன மாற்றங்கள் செய்தால் போதும், இதற்கு ஐநூறு ரூபாய் வரைமட்டுமே செலவாகும்.ஒரு அரைமணி நேர பயிற்சி வேண்டும். அவ்வளவுதான்.
இதன் மூலம் ஒருவர் இரண்டு மணிநேரம் நெய்வதை ஒரு மணி நேரத்தில் நெய்து விடலாம், இரண்டு ஆள் செய்வதை ஒரு ஆளே செய்துவிடலாம். நூலிழை கம்பிகளின் உறுதியும் ஐம்பது சதவீதம் அதிகரிக்கும். விருப்பப்பட்ட டிசைன்களை எளிதில் வடிவமைக்கலாம். குழந்தை தொழிலாளர் முறை அடியோடு ஒழியும்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் இவரது தொழில் பெருகியது. இதன் மூலம் இவர் மட்டுமே பயன்பெற விரும்பவில்லை, மாறாக தான் சார்ந்த நெசவாள சமுதாயமே பயன்பெற வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பத்தாவது படிப்பைக்கூட தாண்டாத என்னால் இந்த கண்டுபிடிப்பை எப்படி வெளியே கொண்டு செல்வது என்று நினைத்த போதுதான், தினமலர் செய்தியை பார்த்த சேவா தொண்டு நிறுவன விவேகானந்தன் என்பவர் முயற்சியால், கோவை கொடீசியாவில் நடைபெறும் ஐ3 எக்ஸ்போவில் எனது கண்டுபிடிப்பை இடம் பெறச்செய்யும் வாய்ப்பை பெற்றேன் என்கிறார் பானுமூர்த்தி.
அவர் மேலும் பேசுகையில் நெசவு தொழிலை நேசித்து செய்பவர்கள் வாழ்க்கையில் என்றும் வளம்தான். என்னுடன் மகன் சீனிவாசன், மகள் வனிதா ஆகியோர் இந்த நெசவு தொழில் செய்துவருவதை பெருமையாக கருதுகிறேன். என் தந்தையும் குருவுமான லட்சுமணன் 83 வயது வரை நெசவு செய்து ஆரோக்யமாக இருந்தார் என்று சந்தோஷத்துடன் குறிப்பிட்டார்.
கோவையின் சுற்றுப்புற பகுதியில் நிறைய நெசவாளர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நிச்சயம் இந்த கண்டுபிடிப்பு பயன்படும் என்ற நோக்கில்தான் நான் இங்கு அரங்கம் அமைத்தேன். கிட்டத்தட்ட ஐநூறு பேர் அரங்கம் அமைத்திருந்தும், சமுதாயத்திற்கு பயன்படக்கூடிய அருமையான கண்டுபிடிப்பு என்று, அறிஞர்கள் கூடி எனது கண்டுபிடிப்பை அங்கீகரித்து முதல் பரிசு வழங்கி கவுரவித்திருக்கிறார்கள், மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றவர், பரிசு பெறும் போது, " மேடையேறி பேசி பழக்கம் இல்லை இருந்தாலும் ஒரு வார்த்தை சொல்லிக் கொள்கிறேன், இந்த கண்டுபிடிப்பை கத்துக்கிட்டு ஓரு நூறு நெசவாளிகளாவது பயன் பெற்றார்கள் என்றால் அது இப்ப எனக்கு கிடைச்ச ஒரு லட்ச ரூபாய் பரிசைவிட மகிழ்ச்சிதரும்' என்றார்.
தனக்கு கிடைத்த பரிசு பணத்தை வைத்து தனது கண்டுபிடிப்பை எளிமையாக வீடியோ சி.டி போன்ற ஊடகங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு போக எண்ணியுள்ளார். நெய்யும் தொழிலை தெய்வமாக போற்றி அதில் தான் உயர்ந்தால் போதாது தன்னைப்போல பிறரும் உயர வேண்டும், வளர வேண்டும், நன்றாக வாழவேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ள அபூர்வ மனிதர் பானுமூர்த்தியுடன் தொடர்பு கொண்டு பேசுவதற்கான எண்: 99944 66498.

- எல்.முருகராஜ்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X