பேரூர்: தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக நாடகமாடிய, பா.ஜ., நிர்வாகியை,போலீசார் நேற்று கைது செய்தனர்.
கோவை, வடவள்ளி அருகே, சோமையம்பாளையம் தாயுமானவர் வீதியில், வாடகை வீட்டில், முதல் தளத்தில் வசிப்பவர் ராமநாதன். இவர்,பா.ஜ.,வின், வேலாண்டிபாளையம் மண்டல பகுதி முன்னாள் செயலர். தன் வீட்டில், யாரோ மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டு வீசியதாக, வடவள்ளி போலீசில், புகார் கொடுத்தார். ஏற்கனவே, இவருக்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக புகார் கூறியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ராமநாதன், வேண்டுமென்றே, தவறான புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், ஜே.எம்., 6 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.