ஏற்காடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: களமிறங்க தி.மு.க.,வினர் ஆர்வம்| DMK workers interest in contest in Yercade bypoll | Dinamalar

ஏற்காடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: களமிறங்க தி.மு.க.,வினர் ஆர்வம்

Updated : அக் 06, 2013 | Added : அக் 04, 2013 | கருத்துகள் (44) | |
ஏற்காடு சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல், டிசம்பர் 4ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டதும், தமிழகத்தில், இடைத் தேர்தல் பற்றிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க., போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த தொகுதியில், 2011 தேர்தலில், அ.தி.மு.க.,
ஏற்காடு இடைத்தேர்தல், தி.மு.க.,DMK, Yercade bypoll

ஏற்காடு சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல், டிசம்பர் 4ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டதும், தமிழகத்தில், இடைத் தேர்தல் பற்றிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க., போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த தொகுதியில், 2011 தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பெருமாள், 37,592 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க.,வின் தமிழ்செல்வன், 66,639 ஓட்டுக்கள் பெற்று தோல்வி அடைந்தார். இந்நிலையில், ஜூலை, 18ம் தேதி, திடீர் மாரடைப்பு காரணமாக, பெருமாள் மரணம் அடைந்தார். காலியான ஏற்காடு தொகுதிக்கு, இப்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இருந்தது. இப்போது, இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக திசை மாறியுள்ளன. அதனால், ஏற்காடு இடைத் தேர்தலில், அ.தி.மு.க.,வை எதிர்த்து களம் இறங்க, தே.மு.தி.க., தயாராக உள்ளது.

ஆளும் அ.தி.மு.க.,வை பொறுத்தவரையில், இந்த தொகுதியை தக்க வைக்க ஏற்கனவே நடவடிக்கைகள் துவங்கி விட்டன. தொகுதி முழுவதும், அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு விட்டன. தேர்தல் பணிகளை கவனிக்க, கட்சியினருக்கும் உத்தரவிடப்பட்டு, முழுவீச்சில் வேலை நடந்து வருகிறது.இந்த தேர்தலை புறக்கணிக்கும் முடிவில், தி.மு.க., இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே, அந்த கட்சியின் ஓட்டுக்கள் அனைத்தும், கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், தே.மு.தி.க., ஆர்வத்தோடு களம் இறங்குகிறது. தே.மு.தி.க.,வுக்கென இந்த தொகுதியில் பெரிய அளவில் செல்வாக்கு எதுவும் இல்லை. அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டாலே போதும், எளிதான வெற்றியை பெற்று விடலாம் என்று, அரசுக்கு உளவுத்துறை அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அ.தி.மு.க., மிகுந்த உற்சாகத்துடன், ஏற்காட்டில் தேர்தல் பணிகளை செய்து வருகிறது. இப்பின்னணியில், தி.மு.க., ஏற்காட்டில் களம் இறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்துவதற்காக, இடைத்தேர்தலை புறக்கணிக்கலாம் என்ற நிலை, அக்கட்சி வட்டாரத்தில் காணப்படுகிறது.ஆனால், தலைமையின் அந்த முடிவுக்கு, தி.மு.க.,வில் ஒரு தரப்பினர் கடும் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். இடைத் தேர்தல் களத்தை புறக்கணிக்கக் கூடாது என்பதற்கு, அவர்கள் சொல்லும் காரணங்கள், தி.மு.க., தலைமையை யோசிக்க வைத்துள்ளதாக தெரிகிறது.

தொடர்ந்து தோல்வியை தழுவினாலும், எந்த இடைத்தேர்தலிலும், தே.மு.தி.க., நிற்க தவறுவதில்லை. மக்கள் மத்தியில், தாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்ற உணர்வை ஏற்படுத்தும் நோக்கமே, அதற்கு காரணம். எனவே, தெரிந்தோ தெரியாமலோ, அதற்கு தி.மு.க., இடம் அளிக்கக் கூடாது. கட்சி களமிறங்கினால் தான், பிரதான எதிர்க்கட்சி தி.மு.க., என்பதை உறுதிப்படுத்த முடியும் என்பது, அவர்கள் கூறும் முதல் காரணம்.இந்த இடைத்தேர்தலை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, தே.மு.தி.க.,வை, தி.மு.க., அணிக்கு இழுக்க முயற்சிக்க வேண்டும். தி.மு.க., தே.மு.தி.க., கூட்டு சேர்ந்து போட்டியிட்டால், அ.தி.மு.க.,வுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க முடியும் என்பது இரண்டாவது காரணம்.

மிக முக்கியமாக, அடுத்து வரும் லோக்சபா தேர்தலில், ஆளும் அ.தி.மு.க., அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தான், தி.மு.க., பிரசார திட்டம் அமையும். அதற்கு எந்தளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பதை, ஏற்காட்டில் களமிறங்குவதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். மேலும், அதுபோன்ற பிரசாரத்தின் தாக்கம், லோக்சபா தேர்தலுக்கும் கை கொடுக்கலாம் என்பது மூன்றாவது காரணம்.பழங்குடியினருக்கான தொகுதியாக இருந்தாலும், இதற்கு உட்பட்ட கல்வராயன் மலை, பேளூர், வாழப்பாடி போன்ற பகுதிகளில் வன்னியர் இனத்தவர் அதிகம். அந்த சமூகத்தில் செல்வாக்கு பெறற செல்வகணபதி, ராஜேந்திரன் போன்ற பிரமுகர்கள் உள்ளனர்.அவர்கள் மூலமாக, கணிசமான ஓட்டுக்களை பெற முடியும். எனவே களமிறங்க தி.மு.க., தயங்கக் கூடாது என்பது, அவர்கள் கூறும் முக்கிய காரணம்.இடைத்தேர்தலில் என்ன முடிவெடுப்பது என்பது குறித்து விவாதிக்க, விரைவில் அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அதில், இந்த கருத்துக்களை வலியுறுத்த, இவர்கள்திட்டமிட்டுள்ளனர்.


மனுத்தாக்கல் நவ., 9ல் துவக்கம் :

ஏற்காடுத் தொகுதியில், நவ., 9ம் தேதி, வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர், நவ., 16ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள், நவ., 18ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெற விரும்புவோர், நவ., 20ம் தேதிக்குள், வாபஸ் பெறலாம். அன்று மாலை, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஓட்டுப்பதிவு டிச., 4ம் தேதி நடைபெறும். பதிவான ஓட்டுகள், டிசம்பர், 8ம் தேதி எண்ணப்படும்.

நமது சிறப்பு நிருபர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X