ஆனைமலை: பொள்ளாச்சி அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, 8.82 ஏக்கர் நத்தம் புறம்போக்கு நிலம் வருவாய்த்துறை அதிகாரிகளால், மீட்கப்பட்டது.
வருவாய்த்துறை அதிரடி:
பொள்ளாச்சி அடுத்துள்ள சின்னப்பம்பாளையம் கிராமத்தில் 1922 ல் பெரியம்மை தொற்றுநோய் பரவியது. அக்கிராம மக்கள் அங்கிருந்து வெளியேறி, அருகிலுள்ள கிராமங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இதனால், அங்கிருந்த நத்தம் புறம்போக்கு நிலம் பயன்பாடு இல்லாமல் கிடந்தது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு, 1948 ல் ஆவணத்தில், ஆதிகால சின்னப்பம்பாளையம் என்ற கிராம பெயரைக்கண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், சமீபத்தில் பிற தகவல்களை சேகரிக்கத் துவங்கினர்.
அப்போது, பெயர் மறைந்த கிராமத்தின் ஆவணங்களில், நத்தம் புறம்போக்கு நிலம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த இடத்திற்குச்சென்று ஆய்வு மேற்கொண்ட போது, தனியார் ஒருவர் ஆக்கிரமித்திருந்தது தெரியவந்தது. அவரிடம் நிலத்திற்குரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. 50 ஆண்டுக்கும் மேலாக தனது நிலம் எனக்கூறி வைத்துள்ளார். ஆனால், கிராம புல வரைபடத்தில், இவ்விடத்தில் ஒரு கோவிலும், கிணறும் உள்ளதாக காட்டப்பட்டது. அதை அடையாளமாகக்கொண்டு இவ்விடத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
8.82 ஏக்கர் நிலம் மீட்பு:
பொள்ளாச்சி தாசில்தார் சுமகுமாரி தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். ஆக்கிரமிப்பிலிருந்த 8.82 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, அவ்விடத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் என அறிவிப்புப்பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட மொத்த இடத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் ஆகும். ஆனைமலை அருகே பழமையான கிராமம் முற்றிலுமாக அழிந்ததும், அக்கிராமத்திற்குரிய நத்தம் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE