நகரி: ஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே புத்தூரில் பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். இவர்களை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சண்டை நடத்தினர். இதில் தமிழக போலீசார் 2 பேர் காயமுற்றனர். தொடர்ந்து 12 மணி நேரம் நடந்த போராட்டத்த்திற்கு பின்னர் மதியம் 2 மணியளவில் ஒரு பெண்ணும், 3 குழந்தைகளும் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர். மதியம் 2. 30 மணியளவில் வீ்ட்டினுள் இருந்த பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில், ஆகிய இருவரும் போலீசாரிடம் சரண் அடைந்தனர். இதனையடுத்து 12 மணி நேர ஆப்ரேஷன் முடிவுற்றதாக டி.ஜி.பி நரேந்திர பால்சிங் தெரிவித்தார். இன்றைய ஆப்ரேஷன் மூலம் நீண்ட ஆண்டு காலமாக தேடப்பட்டு வந்த 2 பேரும் இன்று போலீசாரிடம் சிக்கினர். 2 பேரையும் போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்றனர். சென்னைக்கு கொண்டு செல்வதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்த்தார்.
மீட்கப்பட்ட பெண் ஹசீனா பானு ( பிலால் மனைவி) என்றும், இவருடன் 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் இருந்ததாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் பா,ஜ.,பிரமுகர்கள் பலர் குறிவைத்து கொல்லப்பட்டனர். இவர்களில், வேலூரில் வெள்ளையன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என டில்லியில் உள்ள அனைத்து பா.ஜ., நிர்வாகிகளும் வலியுறுத்தினர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெ., வை சந்தித்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் நேற்று சென்னையில் பதுங்கியிருந்த போலீஸ் பக்ரூதின் என்பவனை கைது செய்தனர். இவன் கொடுத்த தகவலின்படி இன்று காலையில் சென்னை அருகே ஆந்திர எல்லையான புத்தூரில் பிலால் மாலிக் , பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் துப்பாக்கிகளுடன் முற்றுகையிட்டனர். இங்கு போலீசார் வருவதை அறிந்த பயங்கரவாதிகள் போலீசார் நோக்கி சுட்டனர். கதவை தட்டியபோது 2 போலீசாரை அரிவாளால் வெட்டினர், இதில் இருவரும் படுகாயமுற்றனர். இதனையடுத்து போலீசாருக்கும் , பயங்கரவாதிகள் இடையேயும் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது . இதனால் இந்த பகுதியில் பதட்டம் நிலவியது.
மத்திய அரசின் ஆக்டோபஸ் என்ற படையும், தமிழக, ஆந்திர போலீஸ் படையும் இணைந்து இந்த ஆப்ரேஷனை நடத்தினர். இந்த துப்பாக்கிச்சண்டையில் தமிழக போலீஸ்காரர் 2 பேர் காயமுற்றனர். முன்னதாக போலீசார் இறந்ததாக கூறப்பட்டது.
"அல்முஜாகிதீன் படை' :
மதுரை, நெல்பேட்டையைச் சேர்ந்த பிலால் மாலிக்கும், "போலீஸ்' பக்ருதீனும், "அல்முஜாகிதீன் படை' இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என, போலீசார் தெரிவிக்கின்றனர். இதன் உறுப்பினர்கள், "தியாகப்படை' என்றும் அழைக்கப்படுகின்றனர். பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கம், மதுரையில் செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த, 2005ல், மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி, காளிதாஸ் கொலையில், 17 வயதாக இருந்த, பிலால் மாலிக் சேர்க்கப்பட்டான். அதன் பின், பூசாரி கங்காதரன் கொலை, அத்வானி யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்குகளில் தேடப்பட்டு வருகிறான்.
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருபவன் மாலிக். இவனை கண்டு பிடித்து தருபவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று போலீசார் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.
மற்ற குடும்பங்கள் எங்கே?
அல் உம்மா பயங்கரவாதி பிலால்மாலிக், இரண்டு மாதத்திற்கு முன்னர் தான் தற்போது குடியிருக்கும் வீட்டை, அங்குள்ள நண்பர் உதவியுடன் வாடகைக்கு பிடித்துள்ளான். குடியேறியபோது அவனுடன் நான்கு குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் மற்றவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். பிலால்மாலிக்கின் குடும்பத்தினருடன் மேலும் சிலர் மட்டும் தற்போது அங்கு தங்கி உள்ளனர். இந்த தகவலை தொடர்ந்து, பிலால்மாலிக்குடன் தங்கியிருந்தவர்கள் குறித்த விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர்.
மருத்துவமனையில் பன்னா இஸ்மாயில் :
போலீசாரிடம் சரணடைந்த பயங்கரவாதி பன்னா இஸ்மாயில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசாருடன் நடந்த சண்டையில் வயிற்றில் பாய்ந்த குண்டை அகற்ற இஸ்மாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அரசு மருத்துவமனையில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வெடிகுண்டு பறிமுதல்:
பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 500 ஜெலட்டின் குச்சிகள், 3 வெடிகுண்டுகள் மற்றும் குண்டு தயாரிக்கும் பெட்டியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சரணடைந்த பயங்கரவாதிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீஸ் பக்ருதீனுக்கு போலீஸ் காவல்:
இந்து இயக்க தலைவர்கள் கொலையில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீனை வரும் அக்டோபர் 11ம் தேதி வரை சி.பி.சி.ஐ.டி., போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேலூர் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
மைனராக இருந்தபோதே குற்றவாளி:
பிலால் மாலிக் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவன் ஆவான். மைனராக இருந்த நேரத்தில் இவனது மீதான குற்றம் தனியாக விசாரிக்கப்பட்டது. அவ்வப்போது கைது ஆவதும் பின்னர் ஜாமினில் வெளியே வருவதும், சில வருடங்களாக தலைமறைவாவதும் இவனுக்கு வாடிக்கை. நீண்ட காலமாக போலீசாருக்கு பெரும் சவாலாகவே இவனது நடவடிக்கை இருந்து வந்தது. இன்றைய பிலால் கைது போலீசாருக்கு பல்வேறு வழக்குகளை துரிதப்படுத்த துணையாக இருக்கும் .