தகவல் தொழில்நுட்பப் புரட்சி

Added : அக் 07, 2013
Share
Advertisement
தகவல் தொழில்நுட்பப் புரட்சி

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பப் புரட்சி நடந்தேறிக் கொண்டிருந்தது. அதுவரை, அரசாங்கம் தான் பார்த்து, தன் குடிமக்களுக்கு அருளி வந்த தகவல்களை மட்டும் முனைப்பற்று நுகர்ந்து வந்தவர்களாக இருந்தனர். இந்த நிலை மெல்ல மாறியது. நடுத்தர வர்க்க மக்கள் உலகைப் பற்றிக் கற்பதற்கான ஆற்றல் பெற்று, மாற்றத்தை விளைவிக்கக் கூடிய தங்கள் ஆற்றலை உணர்ந்தனர்.
அதற்கு முந்தைய காலக்கட்டத்தில், தகவல் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இந்தியாவில் ஓரளவுக்குப் பத்திரிக்கை (தகவல் தரும்) சுதந்தரம் இருந்தாலும், அது பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிக்கும் இருந்ததே தவிர வானொலிக்கு இருக்கவில்லை. மேலும், பரவலான படிப்பின்மை காரணத்தால், பத்திரிகை சுதந்தரம் அர்த்தமற்ற விஷயமாக இருந்தது. தவிர, அரசாங்கம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதற்குப் பெரும் தொகையைச் செலவுச் செய்து வந்தது. அது அரசாங்கத்துக்கு பத்திரிகைகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பொருத்தமான நெம்புகோலாக பயன்பட்டது. அரசாங்கத்தின் தவறான பக்கங்களை அம்பலப்படுத்துவது, தங்கள் நிதி நிலைமையைக் காயப்படுத்தி, வாழ்வியல் அசௌகரியங்களை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தால் வெகுஜன ஊடகங்கள் அரசாங்கத்தின் அத்துமீறல்களை கடுமையாக எதிர்க்க முடியாமல் இருந்தன.


கருத்து சுதந்திரம்:

அதனால், பிரதான ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி மற்றும் செய்தி நாளிதழ்கள் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசாங்கத்தின் கட்டுக்குள் இருந்தன. அரசாங்கம் எதை விரும்பியதோ அதை மட்டுமே மக்கள் கேட்டும், பார்த்தும், படித்தும் வந்தனர். பத்திரிகைச் சுதந்தரம் மக்களுக்கு இருப்பதாக மக்களிடம் சொல்லப்பட்டன. கல்வித் துறையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது, ஆதலால் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அரசு குடிமக்களுக்கு என்ன தெரிவிக்க விரும்பியதோ அதுவே பாடமாகக் கற்றுக் கொடுக்கப்பட்டது. நீங்கள் என்ன தெரிந்து வைத்துள்ளீர்கள் என்பதே நீங்கள் எப்படி செயல்படுவீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது. அரசு சொன்னதை மட்டும் கேட்டு வந்த குடிமக்கள், கண்ணுக்குப் புலப்படாத, அதே சமயம் எங்கும் விரவியதாக இருந்த ஒருவிதமான மனச்சிறையில் சிக்கி இருந்தனர்.
அவை அனைத்தையும் இணையம் அடியோடு மாற்றிப் போட்டது. அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த வழிகளின் வாயிலாக மட்டும் சொல்லப்பட்டு வந்த தகவல், விடுதலைப் பெற்றது. மேலும், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், தகவல் உருவாக்கம், தகவல் சேமிப்பு, தகவல் ஒலி/ஒளிபரப்பு மற்றும் தகவல் பகிர்தல் அனைத்தும் கடுமையான விலையிறக்கம் கண்டன. தேவையான தகவல்கள் அனைத்தும் விரல் நுனியிலேயே கிடைப்பதாக அமைந்தது. அப்படி இருக்க, மாற்றத்துக்குத் தேவைபட்ட விஷயம், கிடைக்கும் தகவல்களை அறிவுப்புலமாக மாற்றி, அந்த ஞானத்தைக் கொண்டு செயலை உந்த வேண்டியது மட்டுமே.


இணையத்தின் பங்கு:

இணையம் புதுத் தலைவர்களைத் தோற்றுவித்தது. இன்று நம்மைச் சுற்றி நாம் காணும் மாற்றத்தைக் குடிமக்கள் தங்கள் பங்களிப்பின் மூலம் ஏற்படுத்திக் கொள்ள உதவி செய்ய இணையம் அந்த் தலைவர்களுக்கு சக்தியூட்டியது. தகவல் என்பது மக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதாவது, தகவல் சுதந்திரம் பெற்றது. அது, அரசாங்கத்தின் பக்கமாக அதிகம் சாய்ந்திருந்த அதிகாரத்தை, அது இருக்க வேண்டிய இடமான மக்களின் கைகளுக்குக் கொண்டுபோய் சேர்த்தது.
ஒவ்வொரு காலகட்டமும் அதற்குண்டான தலைவர்களைத் தனக்கத்தே பெற்றிருந்து. அந்தத் தலைவர்களின் இயல்பும் அவர்களின் அதிகாரத்துக்கான ஆதாரமும் அந்தந்த காலகட்டத்தால் வார்க்கப்படுகிறது. விவசாய யுகத்தில், தலைவர்கள் நிலங்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்து இருப்பவர்களாக இருந்தனர். தொழில் யுகத்தில், பெரும் தொழிலதிபர்கள் நாட்டின் விதியை வடிவமைக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருந்தனர். தொழில் யுகத்துக்குப் பின்னர் வந்த தலைவர்கள், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களின் ஆற்றலைப் புரிந்து கொண்டவர்களாக இருந்தனர்.


தொழில் நுட்ப புரட்சி:

இந்த நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் இருந்த இந்தியாவின் புதிய தலைவர்கள், தகவல் தொழில்நுட்ப யுகத்தின் குழந்தைகள். அவர்கள் தகவலின் உருமாற்ற சக்தியைப் புரிந்து இருந்தனர். தகவல்கள் சரியான முறையில் மக்களைச் சென்றடையும் போது, மக்கள் என்ன தெரிந்து வைத்துள்ளார்கள் என்பதில் வரும் மாற்றத்தையும் அதனால் அவர்களின் குணநலன்கள் எப்படி பாதிக்கப்படும் என்பதையும் தெரிந்துவைத்திருந்தனர். இந்திய அதிசயம், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப புரட்சியால் விளைந்த, மாபெரும் பொருளாதார புரட்சியின் மகத்தான உதாரணம்.
இந்திய அதிசயத்தில், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் எப்படி ஒரு முக்கிய கருவியாக இருந்தது என்பதை நாம் உணர்வது மிக முக்கியம். முதலில், அது ஒரு மாபெரும் பொதுக்கல்விப் பிரச்சாரத்துக்கான கருவியாக இருந்தது. இலக்கு நோக்கிய செயல் என்பது எப்போதுமே, நாம் என்ன தெரிந்து வைத்துள்ளோம் என்பதிலேயே அடங்கியிருக்கிறது.
புதிய தகவல்களை, அதுவும் மக்கள் தாங்கள் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர வைக்கக்கூடியத் தகவல்களைக் கொடுக்கும்போது மக்கள் மாற்றத்தை உருவாக்க உந்தப்படுகிறார்கள். உங்கள் அண்டை வீட்டுக்காரர், உங்கள் வீடு பற்றி எரிகிறது என்று உங்களைக் கூப்பிட்டுச் சொல்லும் வரை, பிற்பகல் முழுவதையும் பூங்காவில் கழிப்பதில் நீங்கள் மனநிறைவோடு இருக்கக்கூடும். ஆனால், அந்தப் புதுத் தகவல், நீங்கள் செயல்பட வேண்டிய அவசியத்தை உருவாக்குகிறது.


மக்களின் அலட்சியம்:

காலங்காலமாகத் தனக்கு இணக்கமான, உடந்தையான ஊடகங்களின் வாயிலாக அரசாங்கம், இந்தியா ஒன்றும் அவ்வளவு மோசமான நிலையில் இல்லை என்று நடுத்தர வர்க்கத்தை நம்பவைத்து வந்தது. 1991க்குப் பின்னால் துளியளவில் ஏற்பட்ட பொருளாதாரத் தளைநீக்கம், சில மக்களின் வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றங்களைக் கொண்டுவந்தது.
ஆனால், தாங்கள் அடைந்த முன்னேற்றம், உண்மையில் சாத்தியப்படக் கூடியதோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவானது என்பதை மக்கள் தெரிந்திருக்கவில்லை. . அதற்கும் மேலாக, ஏன் இந்தியா இத்தனைக் காலமாகத் தேக்கம் கண்டு இருந்தது என்பதையும் மக்கள் தெரிந்திருக்கவில்லை. இந்தியா எப்போதுமே இப்படி ஏழைமையான ஒரு நாடுதான் என்பதை, மாற்றியமைக்க முடியாத இயற்கை விதியாக, பருவங்களைப் போல் பாவித்து, அது அப்படித்தான் என்று அவர்கள் இருந்தனர்.
பொதுமக்களின் விழிப்புணர்வு, கல்வி ஆகியவை மேற்கண்ட அனைத்தையும் மாற்றின. இந்தியாவின் வறுமையும், பொருளாதார வளர்ச்சியின்மையும், முன்னேற்றமின்மையும், தங்களின் மதிப்புமிக்கத் தலைவர்கள் தேர்ந்தெடுத்த, மோசமான பொதுநலக் கொள்கைகளின் விளைவுகளே எனபதை மக்கள் புரிந்துகொண்டனர். மேலும், தாங்கள் சிக்கிக் கொண்டிருந்த அதளபாதாளத்திலிருந்து வெளியே வர வழி உண்டு என்பதையும் புரிந்துக் கொள்ளத் தொடங்கினர். 'இந்தியா முன்னேறிய நாடாக ஆவதற்குத் தேவையானதைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது' என்ற குரலை முழங்கக்கூடிய ஒரு புதிய தலைமை தோன்றியது. செயலாற்ற வேண்டிய அழைப்பு விடுக்கப்பட்டபோது, நெருப்பு பற்றி எரியும் வீடு என்ற உதாரணத்தைப் போல், மக்கள் உடனடியாக செயலில் இறங்க முற்பட்டனர்.
இந்தியாவுக்குப் புதிய தலைவர்களைக் கொடுத்த செயல்முறை, 2010ம் ஆண்டுவாக்கில் மெதுவாகத் தொடங்கி, வெகு விரைவிலேயே உத்வேகம் பெற்றது. 2012ம் ஆண்டுவாக்கில் அர்ப்பணிப்புள்ள சுமார் ஒரு டஜன் மக்களைக் கொண்ட ஒரு சிறிய குழுவாக ஆரம்பித்தது, இந்தியா முழுவதில் இருந்தும் பலதரப்பட்ட பின்னணிகளிலிருந்து பல்வேறு வகையான ஆற்றல்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான மக்களாக வளர்ந்தது. அந்தக் குழு 'முழுமையான சுதந்தரத்துக்கான இந்தியர்கள்' என்று அழைக்கப்பட்டது. அவர்கள் நடுத்தர வர்க்கத்தை ஒன்று திரட்டினர்.
( இதன் அடுத்த பகுதி 14/10/2013 வெளியாகும்)

இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-702-2.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 09445901234 / 09445979797

நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X