மதுரை- 2030: அதல பாதாளத்தை நோக்கி நிலத்தடி நீர்

Updated : அக் 08, 2013 | Added : அக் 07, 2013
Advertisement
மதுரை- 2030: அதல பாதாளத்தை நோக்கி நிலத்தடி நீர்

தமிழகத்தின் 2வது தலைநகரமாக திகழும் மதுரை, நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. மக்கள் தொகையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீர் உட்பட அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா?சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நகரின் விரிவாக்க பகுதிகளில், நாளுக்கு நாள் புதிய புதிய குடியிருப்புகள் முளைத்து வருகின்றன. அதற்கு ஏற்ப தண்ணீர் தேவையும் அதிகரித்து வருகிறது. தேவையை சமாளிக்கும் அளவுக்கு தண்ணீர் இருப்பு இல்லை. கடந்தாண்டு வரை, வீடுகளில் போர்வெல்கள் 200 அடி வரை அமைக்கப்பட்டு தண்ணீர் பெறப்பட்டது. தற்போது 900 அடி வரை ஆழ்குழாய் கிணறு அமைத்தும் கூட, சில இடங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை. அந்தளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது.
இதே நிலை நீடித்தால், இன்னும் சில ஆண்டுகள் கழித்து நிலைமை என்னவாகும்? 2030ல் மதுரை எப்படி இருக்க வேண்டும் என்று கனவு காணும் நாம், கட்டமைப்பு வசதிகள் மேம்பட வேண்டும் என ஆசை கொள்ளும் நாம், மதுரையின் நிலத்தடி நீர்மட்டம் என்னவாகும் என்று சிந்தித்தால் தலைசுற்றும். ஏனெனில் நாம் நமது நீர் ஆதாரங்களை இழந்து விட்டோம். மழை நீர் சேகரிப்பை மறந்து விட்டோம்.
எனவே எதிர்காலத்திற்காக, நிலத்தடி நீர் மட்டத்தை உடனடியாக காப்பாற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இருக்கும் நீர்ஆதாரங்களை காப்போம். மழைநீர் சேமிப்பை ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக்குவோம்.
குஜராத்தை பாருங்கள்!: ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அருணாச்சலம் கூறியதாவது: நீரின் தேவை அதிகரித்து வருகிறது. மழையின்மையால், மக்கள் நிலத்தடி நீரை மட்டும் நம்புகின்றனர். இதனால் தண்ணீரை போர்வெல்கள் மூலம் உறிஞ்சுகின்றனர். இதை கடடுப்படுத்தவோ, ஒழுங்குபடுத்தவோ, எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் அரசு சார்பில் கட்டப்படும் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் முழுமையாக முறையாக அமைக்கப்படுவதில்லை. இதனால் மழை காலங்களில், ஆறுகளில் வெள்ளம் வரும் போது, தண்ணீர் ஆற்றின் மூலம் கடலில் வீணாக கலக்கிறது. மழை நீரை பூமிக்குள் செலுத்துமளவுக்கு மழை நீர் சேமிப்பு அமைப்புகளை செய்வதில்லை.
மாநில அரசும் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்படுகிறது என அறிவித்தது. ஆனால் அதை கண்காணிக்கவில்லை. அரசு கட்டடங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு அமைப்பு கூட தற்போது செயல்பாட்டில் இல்லை. வீடுகளில் முறையாக பள்ளம்தோண்டி அதில் கூழாங்கற்களை கொட்டி வைப்பதில்லை. ஏர் லாக் வசதி செய்வதில்லை. பில்டர் டேங்க் அமைப்பதில்லை. இவற்றை முறையாக செய்தால் மட்டுமே மழை காலங்களில் தண்ணீரை பூமிக்கடியில் சேமிக்க முடியும்.
நம் நாட்டில் மற்ற மரங்களை காட்டிலும் கருவேல மரங்கள் அதிகம் உள்ளது. இவை காற்றில் உள்ள ஈரப்பதத்தை கூட உறிஞ்சி விடும். மரங்களை நடுவதன் மூலம் மழை பெற முடியும்.
மழை காலங்களில் கண்மாய், குளங்களில் நீரை சேமிக்கும் வகையில் முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும். நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்படாமல், முறையாக பராமரிக்கப்பட வேண்டும். குஜராத் மாநிலத்தில் அனைத்து நதிகளும் இணைக்கப்பட்டு விட்டதால், அங்கு தண்ணீர் பிரச்னையே இல்லை. மேலும் சூரியஒளியை பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்கின்றனர். இந்த இரண்டுக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
எனவே இதுவரை இல்லாவிட்டாலும் கூட வீட்டுக்கு வீடு மழைநீர் சேமிப்பை கட்டாயமாக்க வேண்டும். மரங்களை அதிகளவில் நட வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும். தண்ணீர் வீணாகாதளவு சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும், என்றார்.
இவரை 94433 39951ல் தொடர்பு கொள்ளலாம்.


மழைநீர் சேகரிப்பால் மாதம் ரூ.1 லட்சம் லாபம்


தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க, மழை நீர் சேமிப்பு திட்டம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் மழை நீருக்காக கட்டிய தொட்டிகள் பயன்படுத்தாமல் குப்பை தொட்டிகளாக மாறிப்போனது. இன்று, ஒரு சில வீடுகளில் மட்டுமே மழை நீர் சேமிப்பு திட்டம், சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எதிர்கால தண்ணீர் தேவையின் அவசியத்தை கருத்தில் கொண்டு, மழை நீர் சேமிப்பை வெற்றிகரமாக பயன்படுத்தி வருகின்றனர் மதுரை ஆத்திகுளம் பலாமி குடியிருப்பு மக்கள்.


குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் புருஷோத்தமன், திருநாவுக்கரசு,சந்திரகாந் கூறியதாவது:

160 வீடுகள் கொண்ட இக்குடியிருப்பில் மழை நீர் சேமிப்பு அமைக்கும் முன், நாள் ஒன்றுக்கு, 6 லாரிகளில் தண்ணீர் பெற்று தொட்டியில் நிரப்பி வந்தோம். இதற்காக ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் செலவானது. இப் பிரச்னைக்கு தீர்வாக, 80 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் மேல் தேங்கும் மழை நீரை சேமிக்க திட்டமிட்டு சேமிப்பு தொட்டியை அமைத்தோம். பத்தாயிμம் சதுரஅடி அளவுடைய மேற்பரப்பில், 20 குழாய்கள் மூலம் மழை நீர் சேமிக்கப்படுகிறது. 50,000 லிட்டர் கொள்ளவுடைய இத்தொட்டியில், கடந்த மாதம் பெய்த மழையில் 25000 லிட்டர் தண்ணீரை சேமித்துள்ளோம். நல்ல மழை பெய்தால் 8,82,000 லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இதே தண்ணீரை பில்டர்கள் கொண்டு வடிகட்டி குடிக்கவும் பயன்படுத்துகிறோம்.

ஏற்கனவே நாங்கள் அமைத்த 7 ஆழ்குழாய்களில், தற்போது 1 குழாயில் மட்டும் நீர் வருகிறது. உபரியாக வெளியேறும் மழை நீர் ஆழ்குழாய் பகுதியில் தேங்கவும் வழி செய்திருக்கிறோம். இதனால் நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.

இவ்வாறு தெரிவித்தனர்.

இவர்களை போல எல்லோரும் மழை நீரை சேமிக்க தொடங்கினால் தண்ணீர் பஞ்சம் வராதே!


நிலத்தடி நீரை 70 சதவீதம் செலவழித்து விட்டோம்

"இருக்கும் நிலத்தடி நீரில் 70 சதவீதத்தை இப்போதே செலவழித்து விட்டோம். இதனால் மிகப்பெரிய அளவில் தண்ணீர் பிரச்னை உருவாகும்,'' என்கிறார், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் டி.வேல்ராஜன்.

அவர் கூறியதாவது:


மக்கள்தொகையும், தொழில் வளர்ச்சியும் நாட்டில் அதிகரித்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ப தண்ணீர்த் தேவையும் அதிகரித்து விட்டது. தொழிற்சாலைகள், அதிகமான அளவு நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. முக்கியமான நீராதாரம், நிலத்தடி நீர்தான். ஆறு, குளம், ஏரியில் இருப்பதை விட, நிலத்தடியில் கிடைக்கும் நீரே அதிகம்.

நிலத்தின் அடியில், குறிப்பிட்ட அளவுதான் தண்ணீர் இருக்கும். 70 சதவீதத் தண்ணீரை, இப்போதே எடுத்து விட்டோம். இன்னும் 30 சதவீதம்தான் இருக்கிறது. தொடர்ந்து அதிகமாக எடுப்பதால், தண்ணீரின் தரமும் குறைகிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் தண்ணீரே, மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும்.

நிலத்தடி நீரை, இரண்டு முறைகளில் மீட்க முடியும். மறுபடி உற்பத்தி செய்வது, மறுசுழற்சி செய்வது. எடுக்கப்படும் தண்ணீரை மறுசுழற்சி செய்து, மீண்டும் நிலத்திற்கு அனுப்ப வேண்டும். உற்பத்தி செய்வது என்பது, மழைநீர் சேகரிப்புதான்.

2006ல் மழைநீர் சேகரிப்புத் தொட்டி, ஒவ்வொரு வீட்டுக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டது. மழைநீர் சேகரிப்பு தொட்டி இல்லாவிட்டால், புதிய கட்டடம் கட்ட முடியாதென, சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பின், நிலத்தடி நீர்மட்டம் கூடியது. அரசு சொல்லி, மக்கள் செய்தனர். ஆனால், மக்களுக்கே விழிப்புணர்வு வந்தால்தான், தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க முடியும்.

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், தொழிற்சாலை, வீடுகளில் நிலத்தடி நீரை சேகரிக்கும் வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். கூரையில் பெய்யும் மழைநீரை, நம் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். எங்கள் கல்லூரியில், ஒவ்வொரு கட்டடத்துக்கும் அருகில், ஜல்லி, மணல் சேர்த்து, ஆழமான குட்டை அமைத்து மழைநீரை சேகரிக்கிறோம். பழைய வீடுகளில் பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணற்றில், மழைநீரை சேகரிக்கலாம். இது நிலத்தடி நீரை அதிகப்படுத்தும் வழி.

இல்லாவிட்டால், பிளாஸ்டிக் தொட்டி அமைத்து, மேற்கூரையில் வழியும் மழைநீரை, வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தலாம். இதன்மூலம், நிலத்தடி நீர் செலவழிப்பதை குறைக்க முடியும். அடுத்த தலைமுறையினர், தண்ணீரின்றி தவிக்காமல் இருக்க... இப்போதிருந்தே மழைநீரை சேகரிப்பது தான் ஒரே வழி.

மேலும் அறிய: 94423 52361.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X