கிறிஸ்தவ மதபோதகரை கைது செய்ய கோரி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கிராம மக்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிறிஸ்தவ மதபோதகரை கைது செய்ய கோரி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கிராம மக்கள்

Added : அக் 09, 2013

தூத்துக்குடி : கிறிஸ்தவ மதபோதகரை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் அதிகமான மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கைது செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று நடுவக்குறிச்சி கிராம மக்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று நடுவக்குறிச்சியை சேர்ந்த கிராம மக்கள் பலர் தர்மகர்த்தா மகாராஜ் நாடார் தலைமையில் திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;
நாங்கள் ஸ்ரீவைகுண்டம் தாலுகா சாயர்புரத்தை அடுத்துள்ள நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள். எங்கள் ஊரில் கடந்த மாதம் 25ம் தேதி சக்தி விநாயகர் கோயிலில் வைத்து 17வது அன்னதானம் நடந்தது. இதனை ஒட்டி 24ம் தேதி விளக்குபூஜை நடந்தது.அந்த சமயத்தில் எங்கள் ஊர் சி.எஸ்.ஐ சர்ச்சில் வைத்து கிறிஸ்தவ மதபோதகர் சென்னையை சேர்ந்த தாயப்பன் நற்செய்தி
சொல்லிக் கொண்டிருந்தார். அவர் இந்து மதத்தை பற்றியும், இந்துக்கள் பற்றியும் மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்தார். இது சம்பந்தமாக நாங்கள் போலீசில் புகார் செய்தோம். அதன் அடிப்படையில் கடந்த 27ம் தேதி தாயப்பன் மீது சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எப்.ஐ.ஆர் போட்டனர். ஆனால் போலீசார் அவரை இன்னும் கைது செய்யவில்லை. இந்துக்களை இழிவாக பேசிய அவரை கைது செய்ய
வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. ஊர் பிரமுகர்கள் ராஜாமணி, தனபால், நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் மற்றும் பலர் பேசினர். மனுக் கொடுக்க வந்தவர்கள் கலெக்டர் அலுவலக வாயில் பகுதியில் திரண்டு நின்றதால் போலீசார் அவர்களை ஓரமாக நிற்குமாறு கூறினர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.கைது செய்ய வேண்டியவரை கைது செய்யாதீர்கள். மனுக் கொடுக்க வந்த அப்பாவி மக்களை மட்டும் அங்கு நிற்காதீர், இங்கு நிற்காதீர் என்று மிரட்டுவது எந்தவிதத்தில் நியாயம் என்று போலீசாரை பார்த்து பொதுமக்கள் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X