தினம் தினம் புதுமைகளை புகுத்தி வாசகர்களுக்கு பல வசதிகளை அள்ளிக் கொடுத்து வரும் உங்கள் தினமலர் இணைய தளம் கோயில்களை 360 டிகிரி கோணத்தில் தரிசித்து மகிழ புதிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆன்மிக இணைய தளங்களில் உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த பகுதியை வாசகர்கள் குடும்பத்தோடு பார்த்து, கோயில்களுக்கு நேரில் சென்று சுற்றிப்பார்த்த இனிய அனுபவத்தை பெறலாம்.
மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய பகுதிகளை அறிமுகப்படுத்தி வாசகர்களை மகிழ்ச்சியடையச் செய்து வரும் தினமலர் இணைய தளம் இப்போது அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த புதிய பகுதியில் முதல் கட்டமாக 37 கோயில்களை 360 டிகிரி கோணத்தில் தரிசிக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களை நேரில் சென்று சுற்றிப்பார்த்த அனுபவத்தை தரும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு கோயிலின் சிறப்புகளையும், கோயிலில் இடம்பெற்றிருக்கும் சுவாமிகளின் சிறப்புகளையும் ஆடியோ மூலமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கோயிலில் எந்த கோபுரம் எந்த இடத்தில் இருக்கிறது, மூலவர் எந்த திசையை நோக்கி இருக்கிறது, அதன் சிறப்பு என்ன, எத்தனை பிரகாரங்கள் உள்ளன, பிரகாரங்களின் சிறப்பு என்ன, பிரகாரங்களில் உள்ள சிலைகள், மண்டபங்கள் என எல்லா தகவல்களையும் சுற்றுலா வழிகாட்டியைப் போல ஆடியோ மூலம் தெரிவிக்கப்படுகிறது.
கோயிலுக்குள் நுழைந்ததும் நம் கண் எதிரே இருக்கும் சுவாமி சிலையில் ஆரம்பித்து பிரகாரங்களை சுற்றுவது, கோபுர தரிசனம், கொடிமரம், மூலவர் அறை, உற்சவர் என அனைத்தையும் பார்க்கும் வசதி இந்த 360 டிகிரி கோணத்தின் மூலம் பார்த்து மகிழலாம்.
360 டிகிரி கோணம் பகுதி மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைந்தால், நுழைவு வாயில்கள், ஆடி வீதிகள், அம்மன் சன்னதி, சிவன் சன்னதி, ஆயிரங்கால் மண்டபம், சுழலும் லிங்கம், பொற்றாமரை குளம் என முழு கோயிலையும் சுற்றிப்பார்த்து தரிசித்த அனுபவத்தைப் பெறலாம். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்தால், பம்பா நதியில் தொடங்கி, 18 படிகள், கொடிமரம், கணபதி சன்னதி, சபரி பீடம், மஞ்சமாதா சன்னதி, கோயிலின் மேல் தோற்றம், வெளிப்புற தோற்றம் என சபரிமலைக்கே நேரில் சென்று வந்த ஆன்மிக அனுபவத்தை பெறலாம். இதேபோல இந்த பகுதியில் இடம்பெற்றிருக்கும் அனைத்து கோயில்களையும் வாசகர்கள் முழுமையாக தரிசிக்கலாம்.
தினமலர் இணைய தளத்தில் ஆன்மிக பகுதியில் 18 விநாயகர் திருத்தலங்கள், 116 அம்மன் கோயில்கள், படல் பெற்ற 274 சிவாலயங்கள், 217 இதர சிவாலயங்கள், முருகனின் 71 கோயில்கள், 134 பெருமாள் கோயில்கள், 108 திவ்ய தேசங்கள், ஐயப்பனின் திவ்ய தரிசனம், 150 பரிகார கோயில்கள், 27 நட்சத்தி கோயில்கள், 25க்கும் மேற்பட்ட கோயில்களின் வீடியோ காட்சிகள், தல புராணங்கள், கோயில்களின் சிறப்புகள், 25,690 கோயில்களின் முகவரிகள், ஆண்டிற்கான பஞ்சாங்க குறிப்புகள், இறைவனை வழிபடும் முறை, விரதங்கள் இருப்பதற்கான வழிமுறைகள், ஹோமம் நடத்துவதற்கான காரணங்கள், பிறமாநில, வெளிநாட்டு கோயில்களும் அவற்றின் சிறப்பம்சங்களும், பக்திகதைகள் என ஏராளமான ஆன்மிக தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இப்போது பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக 360 டிகிரி கோணத்தில் கோயில்களை தரிசிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கோயில்களை 360 டிகிரி கோணத்தில் தரிசிக்கும் வசதி விரைவில் இடம்பெறவுள்ளது.
வாசகர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் தங்களது கோயில்கள் மற்றும் தங்களுக்கு தெரிந்த கோயில்கள் பற்றிய விவரங்களையும் புகைப்படங்களுடன் தினமலர்இணைய தளம் ஆன்மிக பகுதியில் இடம்பெறச் செய்யலாம். இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் வாசகர்கள் temple@dinamalar.in என்ற இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
360 டிகிரி கோணத்தில் கோயில்களை வலம் வருவது எப்படி? :
ஒரே இடத்தில் நின்றபடி நமக்கு இடது புறம், வலது புறம், மேலே வானம், கீழே பூமி என அனைத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்து பார்ப்பதுதான் 360 டிகிரி கோணம். வெளிநாட்டில் வசிக்கும் நமது வாசகர்கள் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களை அங்கிருந்தபடியே சுற்றிப் பார்க்க வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் 360 டிகிரி கோணம் பகுதி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் நீங்கள் பார்க்கும் கோயிலை வலப்புறமாக சுற்றிப்பார்க்க படத்தின் வலதுபுறத்தில் மவுசை க்ளிக் செய்து வலப்புறமாக நகர்த்த வேண்டும். இடதுபுறமாக சுற்றி வர இடப்புறமாக மவுசை நகர்த்த வேண்டும்.
கம்ப்யூட்டரின் முழுத்திரையில் கோயிலை பார்த்து ரசிக்கவும் முடியும். படத்தின் நடுவில் இருக்கும் ஐகான்கள் மீது க்ளிக் செய்வதன் மூலம் படத்தை ஜூம் செய்தும் பார்க்கலாம். முழுத்திரையிலும் பார்க்கலாம்.
கோயில்களை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும்போது ஆடியோ வாயிலாக கொடுக்கப்படும் ஆன்மீக தகவல்களின் ஒலியை அதிகப்படுத்தவும், குறைக்கவும் வால்யூம் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.