வாஷிங்டன்: அமெரிக்காவில், பொருளாதார நெருக்கடி காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்ட, ராணுவ வீரர்களின் இறுதி சடங்குக்கான நிதியை அனுமதிக்க, அதிபர் ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார்.அமெரிக்க அதிபரின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பார்லிமென்டில் போதுமான ஆதரவு கிடைக்காததால், 17 ஆண்டுகளுக்குப் பின், அந்நாட்டில் அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க பார்லிமென்டில், ஒபாமா, அடுத்த ஆண்டுக்கான, பட்ஜெட் தாக்கல் செய்த போது, எதிர்க் கட்சியினரின் ஆதரவு இல்லாததால், அந்த பட்ஜெட்டை நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, பெரும்பாலான அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன. அமெரிக்க அரசின் இந்த முடிவால், 8 லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள் தற்காலிகமாக வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்திலும், பொருளாதார நெருக்ககடி, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, அமெரிக்க வீரர்கள், நான்கு பேர், தலிபான்களின் தாக்குதலில், கடந்த வாரம், பலியாயினர். இவர்களது இறுதி சடங்குக்கான தொகை, மற்றும் போரில், உயிரிழந்ததற்கான இழப்பீட்டு தொகை தலா, 60 லட்சம் ரூபாய், ஆகியவை அளிக்கப்பட வேண்டும். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு, ஓராண்டுக்கு, வீட்டு வசதி படி அளிக்கப்பட வேண்டும். ஆனால், பொருளாதார நெருக்கடி காரணமாக, மேற்கண்ட நிதி அளிக்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் வெகுவாக பாதிக்கப்பட்டனர். பொருளாதார நெருக்கடிக்கு பின், அமெரிக்காவில், 29 வீரர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். அரசு கரூவூலத்திலிருந்து இவர்களுக்கு நிதியளிக்க முடியாத காரணத்தால், தனியார் தொண்டு நிறுவனம் மூலம், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே, ராணுவ வீரர்களின் இறப்புக்கு அளிக்கப்படும் நிவாரண நிதி ஒப்புதல் மசோதா, அமெரிக்க பார்லிமென்ட்டில், நேற்று, நிறைவேற்றப்பட்டது. "குடியரசு கட்சியினரின் செயல்பாட்டால், நிதி நெருக்கடி ஏற்பட்டு, அமெரிக்க மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இறுதி சடங்குக்கான நிவாரணத்தொகை அளிக்க முடியாத அவல நிலை நிலவுகிறது' என, ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், இந்த மசோதாவின் போது, ஆவேசமாக பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE