மதுரை: "கண்டனம் என்ற சிறிய தண்டனைக்காக, டி.எஸ்.பி.,க்கு பதவி உயர்வை நிறுத்தி வைக்கக் கூடாது. சம்பள உயர்வை நிறுத்திய, டி.ஜி.பி., உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
தஞ்சாவூர் அல்மாஸ் அலி தாக்கல் செய்த மனு: காவல்துறையில் 1979 ல் எஸ்.ஐ., ஆக பணியில் சேர்ந்தேன். டி.எஸ்.பி.,யாக 2005 ல் பதவி உயர்வு பெற்றேன். காவல்துறையின் சிறந்த பணிக்காக, முதல்வர் பதக்கம் பெற்றுள்ளேன். டி.எஸ்.பி.,களுக்கான பதவி உயர்வு பட்டியலை அரசு, 2012 ல் வெளியிட்டது. அதில், என் பெயர், 68 வது இடத்தில் இருந்தது. நான், 2012 ஜூலை, 9 முதல், 2013 மே, 14 வரை முன் அனுமதியின்றி மருத்துவ விடுப்பில் சென்றதாகவும், எனக்குரிய சம்பள உயர்வை நிறுத்தி வைப்பதாகவும் டி.ஜி.பி., உத்தரவிட்டார். உள்துறை செயலாளர், 2013 செப்.,29 ல் ஏ.டி.எஸ்.பி., பதவி உயர்வு பட்டியலை வெளியிட்டார். அதில், என் பெயர் இல்லை. நான் விசாரித்த போது," உங்கள் மீது குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளதால், பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை' என, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை விதிகள்படி, டி.எஸ்.பி.,பதவியில் இருப்பவர் முன் அனுமதி பெற்று, விடுப்பில் செல்ல வேண்டிய அவசியமில்லை. நான் மருத்துவச் சான்று சமர்ப்பித்துள்ளேன். துறை ரீதியான நடவடிக்கை அல்லது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பதவி உயர்வை நிறுத்தி வைக்கலாம். டி.ஜி.பி.,உத்தரவை ரத்து செய்து, எனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதி எஸ்.நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ரவி சண்முகம் ஆஜரானார்.
நீதிபதி: மனுதாரருக்கு கண்டனம் என்ற சிறிய தண்டனையை காரணமாகக் கொண்டு, பதவி உயர்வை நிறுத்தி வைக்கக்கூடாது. அவர், நவ.,30 ல் ஓய்வு பெறுகிறார். டி.ஜி.பி., உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு, நான்கு வாரங்களுக்குள், ஏ.டி.எஸ்.பி.,பதவி உயர்வு வழங்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE