மதுரை: கிராம ஊராட்சி செயலாளர்களை, கலெக்டர்கள் நியமிக்கும் அரசின் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்தது. கடையநல்லூர் புதுக்குடி ஊராட்சி தலைவர் கோபிராஜ் தாக்கல் செய்த மனு: ஊராட்சிகளில் செயலாளர்கள் (உதவியாளர்கள்) பணியிடம் உள்ளது. இவர்களை, 2006 ல் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுப்படி, ஊராட்சித் தலைவர்களே நியமிக்கலாம். குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். எங்கள் ஊராட்சியில், செயலாளர் பணி காலியாக இருந்தது. கனிராஜ் என்பவரை நியமிக்க, ஜூலை, 8 ல் தீர்மானம் நிறைவேற்றினாம். இதற்கு ஒப்புதல் வழங்கக்கோரி, கடையநல்லூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பரிந்துரைத்தோம்.
திருநெல்வேலி கலெக்டர் ஒரு நோட்டீஸ் அனுப்பினார். அதில், "தமிழக அரசு ஜூலை, 9 ல் பிறப்பித்த உத்தரவுப்படி கலெக்டரின் ஒப்புதலின்படி, ஊராட்சி செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம் கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. செயலாளர் நியமனம் தொடர்பான புதுக்குடி ஊராட்சி தீர்மானத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?' என, குறிப்பிட்டுள்ளார். ஊராட்சி தலைவருக்குரிய அதிகாரத்தை, கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு வழங்கியது சட்டவிரோதம். ஊராட்சி நிர்வாகம் பாதிக்கும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் தலைவர்களிடமே, நியமன அதிகாரம் இருக்க வேண்டும். புதிய உத்தரவு, ஊராட்சியின் அடிப்படை விதிகளுக்கு எதிரானது. கலெக்டரின் நோட்டீசுக்கு தடை மற்றும் அரசின் புதிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார். அரசின் புதிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, விசாரணையை, வரும், 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார். முதல்நிலை ஊராட்சிகளின் செயலாளர், திருநெல்வேலி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE