மதுரை: மதுரையில், ஒரு வயது குழந்தையை கடத்தி, நரபலி கொடுத்த வழக்கில், கீழ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து, ஐகோர்ட் கிளையில், கணவன், மனைவி மேல்முறையீடு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் முத்தையாபுரத்தை சேர்ந்தனர் அப்துல்கபூர்,30. இவர் ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் தர்காவில், சமையல்காரராக இருந்தார். அங்கிருந்த ரமீலா பீவிக்கும், 32, அப்துல்கபூருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்தனர்.
"தலைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையை நரபலி கொடுத்து, பூஜை செய்தால், முன்னேற்றம் அடையலாம்' என, சிலர் கூறியதை நம்பி, தலைப்பிரசவ குழந்தையைத் தேடி, மதுரை வந்தனர்.
மதுரை எஸ்.ஆலங்குளம் கவுகர்பாட்ஷா. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி சிரின் பாத்திமா, தன் ஒரு வயது குழந்தை காதர்யூசுப் மற்றும் தாய் சுல்தான் பீவி ஆகியோருடன், நேர்த்திக்கடன் செலுத்த, 2010 ஜூலை 1ல், கோரிப்பாளையம் தர்காவில் தங்கினர். மறுநாள் இரவு, மூன்று பேரும் அங்கு தூங்கிக் கொண்டிருந்தனர். காதர்யூசுப்பை கடத்திய அப்துல்கபூரும், ரமீலாபீவியும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கொண்டு சென்றனர். அங்கு ஒரு விடுதி குளியலறையில், காதர்யூசுப்பின் கழுத்தை அறுத்து, ரத்தத்தை வாளியில் பிடித்தனர். தலை, உடல்களை தனித்தனியாக வெட்டி, பூஜை செய்து, குழந்தையின் உடலை புதைத்தனர். தலையை திருச்செந்தூர் அருகே கடற்கரையில் புதைத்தனர். ரத்தத்தை கடலில் வீசியதாக, தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மதுரை 6 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, 2012 ஆக.,3 ல் அப்துல்கபூர், ரமீலாவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். இதை ரத்து செய்யக்கோரி, இருவரும் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்க, போலீசார் அடையாள அணிவகுப்பு நடத்தவில்லை. தர்காவில் பலர் தங்கியிருந்த நிலையில், குழந்தையை கடத்த வாய்ப்பில்லை. எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
நேற்று, இவ்வழக்கு பட்டியலில் இடம் பெற்றது. விசாரிக்கப்படவில்லை.