தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இனாம் என்ற பெயரில் மாமூல் வசூலுக்கான பட்டியலை, அரசுத்துறை அதிகாரிகள் தயார் செய்து வருவது, வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், வசூலை கட்டுப்படுத்தவும், அவர்களின் வசூலுக்கு தடை போட, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆயுதப்பூஜை முடி வடையும் நிலையில், அரசுத்துறை அதிகாரிகள் முதல் அனைவரும் தீபாவளி இனாம் என்னும் பெயரில் கலெக்ஷனில் குதிப்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.இதில், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், அரசுத்துறை அதிகாரிகள், போலீஸார், சிறப்பு பிரிவு கேட்கும் தொகையை எவ்வித தயக்கம் இன்றி வழங்கி விடுகின்றனர்.அதே நேரத்தில், அரசு சலுகை, சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களிடம் தீபாவளி நேரத்தில் வழக்கமான தொகையுடன் கூடுதல் தொகையை சேர்த்து வாங்குவது வழக்கத்தில் உள்ளது. பொதுவாக தீபாவளி பண்டிகைக்கான வசூல், ஆயுதப்பூஜை முடியும் நிலையில், துவக்குவதை அதிகாரிகள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.இதில், அதிகாரிகள் சில இடங்களில் நேரடியாக களம் இறங்கினாலும், பல இடங்களில் தங்களின் டிரைவர்கள், அலுவலக பணியாளர்களை தங்களின் பினாமிகளாக நியமித்து வசூலில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அந்த வகையில்,அதிகாரிகளின் தங்களின் கடந்த ஆண்டு தீபாவளி இனாம் வசூல் நோட்டை தூசி தட்டி எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு வசூல் செய்யப்பட்ட தொகையில் இருந்து தற்போது கூடுதலாக, 25 சதவீதத்தை அதிகரிப்பு செய்து, "டார்க்கெட்' நிர்ணயம் செய்துள்ளனர்.
லஞ்சம் பெறுவதில் முதலிடத்தில் உள்ள போக்குவரத்து துறையில், தமிழகம் முழுவதும் செயல்படும், 70 வட்டார போக்குவரத்துக் கழக அலுவலகங்கள், 54 பகுதி நேர அலுவலகங்கள், 19 செக்போஸ்டுகள் என, மொத்தம், 143 அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் செயல்படும், டிரைவிங் ஸ்கூல்கள், தனியார், ஆம்னி பஸ் உரிமையாளர்களின் பட்டியல் உட்பட வழக்கான வாடிக்கையாளர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வசூலுக்கான வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறையினர் இப்படி என்றால், போலீஸார், லாட்டரி, கஞ்சா, விபச்சாரம், போதை பொருள், திருட்டு வி.சி.டி., ரேஷன் அரிசி கடத்துபவர்களின் பட்டியலை தயார் செய்து அவற்றுடன் களம் இறங்க தயாராகி வருகின்றனர்.இதில், லாட்டரி, திருட்டு சி.டி., விற்பனையாளர்களிடம் கடந்த ஆண்டுக்கான மாமூல் தொகையை விட தற்போது, 50 சதவீதம் அதிகரித்து வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளனர். இதே போல், டாஸ்மாக், போலீஸ், தீ அணைப்பு, வணிக வரி, வருவாய்த்துறை என, அனைத்து துறைகளிலும் பட்டியல் தயார் செய்துள்ளனர். இந்த பட்டியலுடன், அக்.,14 முதல் களம் இறங்குவர் எனத் தெரிகிறது.
தீபாவளி இனாம் வசூல் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவது குறித்து உளவுத்துறை அறிக்கையை தயார் செய்து அரசின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளது. அதை அடுத்து, வசூலை கட்டுப்படுத்தவும், வசூல் பேர்வளிகளை கண்காணித்து, கைது செய்யவும், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், லஞ்ச ஒழிப்புத்துறையினரும் தங்களின் கழுகு கண் பார்வையுடன் வலம் வரத்துவங்கி உள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறியதாவது:தீபாவளி நெருங்கும் நிலையில், அதாவது ஆயுதபூஜைக்கு பின்னர், வசூல் நோட்டுடன் அதிகாரிகளும், சில இடங்களில் அவர்களின் சார்பில் ஊழியர்களும் களம் இறங்குவது வாடிக்கையான ஒன்று தான். ஆனால், நடப்பாண்டு வசூல் தொகையை இரட்டிப்பு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாங்களும் கண்காணிப்பை தீவிரப்படுத்த துவங்கி உள்ளோம். எனவே, பொதுமக்கள் வசூல் அதிகாரிகள் குறித்த விபரங்களை எங்களின் தலைமை அலுவலகத்துக்கும், அந்தந்த மாவட்ட அலுவலகங்களுக்கும் தகவல் கொடுத்தால், வசூல் பேர்வழிகளை கைது செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். என்றார்.
--நமது சிறப்பு நிருபர்-