மணல் குவாரிகள் முறைகேடு விவகாரத்தில் அரசு அதிரடியால் அதிகாரிகள் கலக்கம்| Kanchipuram collector suspended | Dinamalar

மணல் குவாரிகள் முறைகேடு விவகாரத்தில் அரசு அதிரடியால் அதிகாரிகள் கலக்கம்

Updated : அக் 14, 2013 | Added : அக் 12, 2013 | கருத்துகள் (17) | |
சென்னை:காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனுமதியின்றி மணல் குவாரிகள் செயல்பட்ட விவகாரத்தில், மாவட்ட கலெக்டரைத் தொடர்ந்து, இரண்டு மண்டல துணை தாசில்தார், இரண்டு பொதுப்பணித் துறை உதவிப்பொறியாளர், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்பட்டியல் நீளும் என, தகவல் வெளியாகி உள்ளதால், அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.சென்னையை அடுத்துள்ளது,
மணல் குவாரி, அரசு,அதிகாரிகள், கலக்கம்,Kanchipuram, collector, suspended

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனுமதியின்றி மணல் குவாரிகள் செயல்பட்ட விவகாரத்தில், மாவட்ட கலெக்டரைத் தொடர்ந்து, இரண்டு மண்டல துணை தாசில்தார், இரண்டு பொதுப்பணித் துறை உதவிப்பொறியாளர், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்பட்டியல் நீளும் என, தகவல் வெளியாகி உள்ளதால், அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சென்னையை அடுத்துள்ளது, காஞ்சிபுரம் மாவட்டம். கர்நாடகாவில் உற்பத்தியாகி, ஆந்திரா வழியாக, தமிழகம் வரும் பாலாறு, வேலூர் மாவட்டத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக சென்று, கடலில் கலக்கிறது.இது, காஞ்சிபுரம், சென்னை மாவட்ட மக்களின், குடிநீர் ஆதாரமாக திகழ்வதுடன், விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது.கடந்த, 10 ஆண்டுகளில், பாலாற்றில் இருந்த மணல் முழுவதும் அள்ளப்பட்டு, பெரும்பாலான இடங்கள், கட்டாந்தரையாக காட்சி அளிக்கின்றன.


விதிமீறல்:

அரசு மணல் குவாரிகளில், விதிகளுக்கு புறம்பாக, 10 அடி ஆழத்திற்கும் அதிகமாக மணல் எடுக்கப்பட்டது. இது தவிர, அனுமதியின்றி மணல் கொள்ளை, அமோகமாக நடந்து வந்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், கட்டுமானப் பணிகள் அதிகரித்து வருவதால், மணல் தேவையும் அதிகரித்தது.இது மணல் கொள்ளையர்களுக்கு, பெரிதும் உதவியாக இருந்தது. அரசியல்வாதிகள், ரவுடிகள், தொழில் அதிபர்கள் என, பலரும் மணல் கொள்ளையில் ஈடுபட்டனர். இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது; விவசாயம் பாதிக்கப்பட்டது; குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.மணல் எடுப்பதை தடுக்கக் கோரி, ஆற்றங்கரையோர மக்கள், பல்வேறு விதமான போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை. நீதிமன்றத்தை நாடியும் பயன் இல்லாமல் இருந்தது.போலீஸ், வருவாய், பொதுப்பணித் துறை, கனிமவளத் துறை என, அனைத்து துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், மணல் கொள்ளை அமோகமாக நடந்து வந்தது.


வழக்கு:

தடுக்க முயன்ற அதிகாரிகள் கொலை செய்யப்படுவதும், இடமாற்றம் செய்யப்படுவதும் தொடர்ந்தது; அரசும் கண்டும் காணாமல் இருந்தது. இச்சூழலில், 'கோயம்புத்தூரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர், காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம், கள்ளபிரான்புரம் ஆகிய கிராமங்களில், 44 ஆயிரம் லாரி லோடு மணலை குவித்து வைத்து, சட்ட விரோதமாக விற்பனை செய்கிறார். உரிமம் இல்லாமல், இவர் மணல் விற்பனை செய்ய, அதிகாரிகளும் உடந்தை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், பூந்தமல்லி வட்டார ஆற்று மணல் லாரி உரிமையாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது.இவ்வழக்கில், தொழில் துறை செயலர், பொதுப்பணித் துறை செயலர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், பழனிச்சாமி ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.விசாரணையின்போது, 'காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏழு இடங்களில், மணலை சேமித்து வைத்து, விற்பனை செய்ய, அனுமதி கேட்டுள்ளனர். இம்மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை' என, காஞ்சிபுரம் கலெக்டர் சித்ரசேனன் தெரிவித்தார்.


உத்தரவு:

இவ்வழக்கில், நீதிபதி மணிக்குமார், கடந்த மாதம், 19ம் தேதி, ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில் கூறியிருந்ததாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெருமளவு ஆற்று மணல் கொள்ளை, நீண்ட காலமாக நடந்து வருகிறது. இதுகுறித்து, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரண்டு கிராமங்களில், சட்ட விரோதமாக, மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள, ஆற்று மணல் விவரம், அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் போனது? எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்துள்ள, ஆற்று மணல் கொள்ளை குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். 2011ல் இருந்து, இன்று வரை பணியாற்றி வரும் அதிகாரிகள் குறித்து விசாரிக்க வேண்டும்.இவர்களின் நடவடிக்கையால், அரசுக்கு எவ்வளவு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்பதை மதிப்பீடு செய்து, தலைமைச் செயலருக்கு, அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


நடவடிக்கை:

அதைத் தொடர்ந்து, தொழில் துறை செயலர் மாற்றப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, காஞ்சி மாவட்ட கலெக்டர் சித்ரசேனன், தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் பொறுப்புகளை, மாவட்ட வருவாய் அலுவலர் சம்பத்குமாரிடம் ஒப்படைத்தார்.கலெக்டர் பொறுப்பை ஏற்ற சம்பத்குமார், நேற்று, வருவாய் துறையில், வாலாஜாபாத் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், மதுராந்தகம் வட்டம், கருங்குழி மண்டல துணை தாசில்தார் ராஜேந்திரன், ஆகியோரை, தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.பொதுப்பணித் துறையில், உதவி செயற்பொறியாளர்கள் இருவர், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள், நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த, தனியார் மணல் கிடங்கு அமைந்திருந்த பகுதியில், பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பட்டியல் தயாரிப்பு:

நீதிமன்ற உத்தரவின்படி, மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகளுக்கு, 2011ல் இருந்து, துணை போன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குறித்த விவரங்களை, சேகரிக்கும் பணியை, அரசு துவக்கி உள்ளது.தற்போது பணிபுரிவோரில், மேலும் பலர், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், தற்போது பணியில் உள்ளோர், ஏற்கனவே பணிபுரிந்தோரில் கறைபடிந்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.பொதுப்பணித் துறையில், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், சமீபத்தில் பொறுப்பேற்றவர்கள். முறைகேட்டிலே ஊறிப்போனோர் பலர் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


உத்தரவு நேரில் ஒப்படைப்பு:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சித்ரசேனன், தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவு, நேரில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தலைமைச் செயலகத்தில் இருந்து சென்ற ஊழியர்கள், நேற்று முன்தினம் இரவு, அவரை நேரில் சந்தித்து, அரசு உத்தரவை வழங்கி உள்ளனர்.அதேபோல், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட, வருவாய் துறை மற்றும் பொதுப்பணித் துறை ஊழியர்களிடமும், தற்காலிக பணிநீக்க உத்தரவு, நேரில் வழங்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X