உலக அளவில் முதல், 200 இடங்களில், இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்று கூட இல்லை என, சமீபத்தில் ஜனாதிபதி வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். தமிழகத்தில், 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றின் கீழ், கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.இத்தனை இருந்தும், உலகத் தர வரிசையில், இந்திய பல்கலைக் கழகங்கள் இடம் பெறாதது பற்றி சிந்திப்பது அவசியம்.
இந்திய அளவில் ராணுவத்துக்கு அடுத்தபடியாக, கல்விக்காகத் தான், அதிக பணம் செலவழிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ஆசிரியர்கள் தேர்வும், பணியாற்றும் விதமும், அவர்கள் தயாரிக்கும் பாடத் திட்டங்களும், பயிற்றுவிக்கும் முறையும், அடிப்படை வசதிகளும், கல்வி மேம்பட எடுக்கும் முயற்சிகளும் போதுமானவையாக இல்லை. இதனால், தர வரிசைப் பட்டியலில் இடம் பிடிக்கத் தவறி விடுகிறோம்.பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பணியாற்றும் ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலான ஆசிரியர்கள், உலகத் தரத்தை எட்டும் படியாக எதையும் எழுதுவது இல்லை; ஆசிரியர் மாணவர் உறவைப் பேணுவதும் இல்லை; வகுப்பு நேரங்களில் வகுப்புகளுக்குச் செல்வதும் இல்லை; துறைதோறும் ஆராய்ச்சிகள் நிகழ்வதும் இல்லை.கண்டுபிடித்த ஆய்வு முடிவுகளை வெளியிட, தரமிக்க ஆய்வு இதழ்களும் இல்லை; பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் தகுதியுடையோராய் இல்லை; பயிற்றுவிக்கப்படும் பாடத் திட்டங்களும் உலகத் தரமோ, தகுதியோ உடையதாக இல்லை. கல்வியோடு சம்பந்தப்பட்ட எதற்கும், இல்லை என்ற பதிலே கிடைத்தால், உலகத் தர வரிசையில் எப்படி இடம் பிடிக்க முடியும்.
கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர, 'நெட்' அல்லது 'சிலெட்' தேர்வு மட்டுமே போதுமானது. ஆனால், நெட், சிலெட், பிஎச்.டி., என்பனவற்றுள் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என, தகுதிப்பாடு வைக்கப் போய், அனைவரின் கவனமும், பிஎச்.டி., பக்கம் திரும்பியுள்ளது. மற்ற இரண்டையும் விட, பிஎச்.டி., இலகுவானது.ஏனெனில், பிஎச்.டி., ஆய்வேட்டை எழுதிக் கொடுத்து சம்பாதிக்க, பலர் தமிழகத்தில் உண்டு. அதில், சில கல்லூரிப் பேராசிரியர்களும், அடக்கம் என்பது வேதனைக்குரியது. கல்லூரிகளில் ஆசிரியராகப் பணி நியமனம் பெற, நெட் அல்லது சிலெட் மட்டுமே இருக்கலாம் என, அரசு அறிவிக்குமெனில் தகுதிஉடையோர் நியமனம் பெறுவர்.சில பல்கலைக்கழகத் துறைகளில் ஆசிரியராகப் பணி நியமனம் பெற, சிபாரிசு மட்டும் இருந்தால் போதும். சில நேரங்களில் ஜாதி, மதம், அரசியல் இவை எல்லாம் கூட கை கொடுக்கும். பின் எப்படி பல்கலைக்கழகங்களில் தரத்தை எதிர்பார்க்க முடியும்.
பல்கலைக்கழகத்தில், கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியமர்ந்த பின், தன்னைத் தகவமைத்துக் கொள்ள, பலர் தவறி விடுகின்றனர். ஆய்வில் ஈடுபடுவதிலும், ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும், ஆய்வு நூல் எழுதி வெளியிடுவதிலும், ஆய்வுக் கருத்தரங்குகள், பயிலரங்குகளில் பங்கேற்பதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.
சம்பளமாக அதிகப் பணம் கிடைத்தும், வேறு பல வழிகளில் அதிகம் சம்பாதிக்கவே ஆசைப்படுகின்றனர். பதவியில் அமர்த்தப்பட்டவர்களின் பதவி உயர்வுக்கு, பணிமூப்பு என்பதைக் கருத்தி்ல் கொள்வதோடு, தகுதி மேம்பாட்டையும் அரசு கவனத்தில் கொள்ள முன்வர வேண்டும்.பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமனம் ஆகிய இரண்டும், கற்பித்தல் செயல்பாடுகளுக்கான குறியீடு அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இதற்கான சட்டத் திருத்தத்தைப் பல்கலைக்கழக மானியக் குழு வெளியி்ட்டுள்ளது. இந்த மதிப்பெண் தகுதியுடன் நேர்முகத் தேர்வின் போது, நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் வகுப்புகளை நடத்த வைத்தும், வெளிப்படையான முறையில், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என, பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளதை நடைமுறைப்படுத்த அரசு முன் வர வேண்டும்.
மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்ட, தரமான பாடத் திட்ட உருவாக்கமும் அமைதல் வேண்டும். அதற்கான பாடத் திட்டக் குழு உறுப்பினர் நியமனமும் சீர் செய்யப்பட வேண்டும்.உயிரியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிப்போர்க்கு, முன்பு செய்முறைப் பயிற்சிகள் இருந்தன. இப்பொழுது உயிர் வதைத் தடுப்புச் சட்டத்தைக் காரணம் காட்டி, செய்முறைப் பயிற்சியே இல்லாமல் செய்து விட்டனர். ஆசிரியர்களால் கற்றுக் கொடுக்க இயலவில்லை என்றால், அந்தப் பாடத்தையே, பாடத் திட்டத்தில் இருந்து எடுத்துவிடும் போக்கு உள்ளது.சான்றாக, மொழியை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிப்போர்க்கு மொழியியல் அறிவு, மிக மிகத் தேவை. மொழியியல் மிகவும் கடினம் எனக் கருதி, அதைப் படிப்பது மாணவருக்குப் பயனுடையதாக இருந்தும், ஆசிரியர்களுக்குப் புரியாமல் போனதால், பாடத் திட்டத்திலிருந்தே எடுத்துவிடும் போக்கும் நடைமுறையில் உள்ளது.பல்கலைக்கழகத் தேர்வுக் கண்காணிப்புத் துறையும், மாணவரின் சிந்தனைத் திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பிழையின்றி கேள்வித் தாள்களைத் முன் கூட்டியே தயாரிக்க வேண்டும். கேள்வித்தாள் தயாரிக்கும் நபரிடமே குறிப்புகளையும் கேட்டுப் பெற்று வைத்திருந்தால், விடைத்தாள்களைத் திருத்தம் செய்யும் போது குழப்பங்கள் எழாது.
பல்கலைக்கழக, கல்லூரிகளின் தரத்தை நிர்ணயிக்கும் தர நிர்ணயக் குழு (நாக்) வரும்போது மட்டும், வளாகத்தைச் செப்பனிடுவதும், வகுப்பறைகளைச் சுத்தம் செய்வதும், துறைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதும், ஆய்வுக்கூடங்களைச் செப்பனிடுவதும் தவிர்த்து, கல்வியாண்டின் எல்லா நாட்களிலும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற, நிர்வாகங்கள் முன்வர வேண்டும். இவை அனைத்தும் நிகழ்ந்தால், உலகத் தர வரிசையில் இந்தியப் பல்கலைக் கழகங்களும் இடம் பிடிக்கும். இந்திய அரசின் கல்விக்கான செலவழிப்பிலும் அர்த்தம் இருக்கும்.
tamilsreekumar@gmil.com
முனைவர் எஸ்.ஸ்ரீகுமார் பேராசிரியர், சமூக ஆர்வலர்