தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கான சிமென்ட் விலை வரலாறு காணாத வகையில், ஒரு மூட்டை, 370 ரூபாயாக உயர்ந்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சவால் விடும் வகையில், உற்பத்தியாளர்களின் செயல்பாடு அமைந்துள்ளதாக, கட்டுமானத் துறையினர் தெரிவித்தனர். தமிழகத்தில் நடைபெறும், அரசு மற்றும் தனியார் திட்ட கட்டுமான பணிகளுக்கு ஆண்டுக்கு, 5 கோடி டன் சிமென்ட் தேவைபடுகிறது. ஆனால், இங்குள்ள, 10 பெரிய சிமென்ட் ஆலைகள் மூலம் ஆண்டு, 4.8 கோடி டன் தான், சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.
விலை உயர்வு:
இந்நிலையில், கடந்த, 2007ம் ஆண்டு துவக்கத்தில், ஒரு மூட்டை, 180 ரூபாயாக இருந்த சிமென்ட் விலை, படிப்படியாக உயர்ந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 310 ரூபாயாகவும், செப்டம்பர் மாதத்தில், 350 ரூபாயாகவும் உயர்ந்தது. தற்போது, 370 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெரிய கட்டுமான நிறுவனங்கள், தங்கள் திட்டங்களுக்கு, ஆண்டு சிமென்ட் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தியாளர்களிடம், ஒப்பந்த அடிப்படையில் மொத்த விலையில் பெறுவதால், விலை உயர்வு அவர்களை பாதிப்பதில்லை.சில்லரை விலையில் சிமென்ட் வாங்கி, குறைந்த பரப்பளவில் வீடு கட்டும் நடுத்தர வருவாய் பிரிவினர் தான், விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வால், நடுத்தர வருவாய் பிரிவினர் பலரும், புதிதாக வீடு கட்டும் திட்டத்தை கைவிடும் அல்லது ஒத்திப்போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அரசுக்கு சவால்:
சிமென்ட் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்தும், இதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் தலைமையில், உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் கடந்த மாதம் நடந்தது. அதில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, அதிகாரிகள் சிமென்ட் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை திரட்டி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, சிமென்ட் நிறுவனங்களுக்கு, நெருக்கடி கொடுக்கும் வகையில், சுண்ணாம்புக்கல் கிடைக்கும் குவாரிகளை அரசுடைமையாக்குவது குறித்தும், ஆலோசனை நடந்து வருகிறது.இந்நிலையில், அரசுக்கு சவால் விடும் வகையில், விலையை உயர்த்தி வருவதாக, கட்டுமானத் துறையினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.தெலுங்கானா பிரச்னை காரணமாக ஆந்திராவில் இருந்து சிமென்ட் வரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலை பயன்படுத்தி, லாபம் பார்க்கும் விதத்தில், சிமென்ட் விலையை உற்பத்தியாளர்கள் உயர்த்தி வருகின்றனர்.
செலவு என்ன?
இதுகுறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க தென்னக மைய மூத்த நிர்வாகி மூர்த்தி கூறியதாவது:தற்போதைய நிலவரப்படி, ஒரு டன் சிமென்ட் (20 மூட்டை) தயாரிக்க சராசரியாக, 2,100 ரூபாய் மட்டுமே செலவாகிறது. இதன் மேல் போக்குவரத்து, வரிகள் என்ற வகையில், ஒரு மூட்டைக்கு, 30 ரூபாய் மட்டுமே கூடுதல் செலவாகிறது. இந்த அடிப்படையில், ஒரு மூட்டை சிமென்ட் விலை, 250 ரூபாய்க்கு மேல் செல்ல வாய்ப்பில்லை.கர்நாடக மாநிலத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம், சிமென்ட் விற்பனை செய்வதால், அங்கு மக்களுக்கு ஒரு மூட்டை, 240 ரூபாய் விலையில் கிடைக்கிறது. தமிழகத்தில் இந்த நடைமுறை இல்லாததால் சிமென்ட் உற்பத்தி யாளர்களின் ஆதிக்கம் தொடர்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
நமது நிருபர்