மதுரை 2030- நெரிசலுக்குத் தீர்வு- ஸ்கை பஸ்; கோவாவில் முடியும் என்றால் மதுரையில் முடியாதா?| Dinamalar

மதுரை 2030- நெரிசலுக்குத் தீர்வு- ஸ்கை பஸ்; கோவாவில் முடியும் என்றால் மதுரையில் முடியாதா?

Added : அக் 14, 2013
Advertisement
மதுரை 2030- நெரிசலுக்குத் தீர்வு- ஸ்கை பஸ்; கோவாவில் முடியும் என்றால் மதுரையில் முடியாதா?

மதுரையின் போக்குவரத்து நெரிசலை, நம் கண் முன்னால் கொஞ்சம் ஓட விட்டால் தலையே சுற்றி விடும். கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார், தெற்குவாசல், பழங்காநத்தம், காளவாசல் பகுதிகளில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஏற்படும் நெரிசலில் தினமும் சிக்கி தவிக்கிறோம். வாகனங்களோடு போராடி தான் இந்த நெரிசலை கடந்து செல்ல வேண்டும்.


2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 30.38 லட்சம் மதுரையின் மக்கள் தொகை. 2021-2031ம் ஆண்டில் 34.46 லட்சமாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.


மாவட்டத்தில் உள்ள இவ்வளவு மக்களும் பயணிக்க அதிக வாகனங்கள் தேவைப்படும். இதனால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விடும். இன்றைய நெரிசலையே சமாளிக்க முடியவில்லை, எதிர்காலத்தில் ஏற்பட போகும் சிக்கலை எப்படி தீர்ப்பது? இதைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? விடை காண முடியாத கேள்வி தான் என்றாலும், அதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் "ஸ்கை பஸ்' போக்குவரத்து திட்டம். இது தொடர்பாக, மதுரை 2030 என்ற பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு, "தினமலர்' குறிப்பிட்டது. இதனைத் தொடர்ந்து, மதுரைக்கு "ஸ்கை பஸ்' கொண்டு வரலாம் என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.


"ஸ்கை பஸ்' அறிமுகம்: 1950ல் 36 நபர்கள் பயணிக்க கூடிய வகையில், "ஸ்கை ரைடிங் பஸ்' என்ற பெயரில் கனமான இரும்பு கம்பியில் இணைக்கப்பட்ட பஸ்கள், வெளிநாடுகளில் இயக்கப்பட்டு வந்தது. இதுவே ஸ்கை பஸ் உருவாக காரணமாக இருந்தது என்று கூறலாம். இந்திய ரயில்வே ஆராய்ச்சியாளர் மற்றும் கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் பொறியாளராகவும் பணியாற்றிய பி.ராஜாராம் என்பவரால், 1989ல் இத்தாலி நாட்டின் போலங்கே பல்கலைகழகத்தில் முதன் முதலாக "ஸ்கை பஸ் மெட்ரோ' திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் படி, நம் நாட்டில் கோவா நகரில் உலகின் முதல் "ஸ்கை பஸ்' 2 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஜதராபாத் நகரிலும், "ஸ்கை பஸ்' வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


"ஸ்கை பஸ்' அமைப்பு: சாதாரண பஸ்சின் தோற்றம் கொண்ட இந்த பஸ்சில், இரண்டு பெட்டிகள் இருக்கும். பஸ்சின் மேற்புறம் பெட்டிகளை தூக்கி சுமக்கும் சக்கரங்கள் பொருத்தப்பட்டு, தரையிலிருந்து 24 அடி உயரத்தில் கட்டப்பட்ட பாலத்தின் கீழ் பதிக்கப்பட்ட ரயில் டிராக்கில் இணைக்கப்பட்டிருக்கும். அதாவது "ரோப் கார்' எப்படி இயங்குகிறதோ, அதே போல் இது பாலத்தின் மேல் தொங்கி கொண்டு செல்லும். இரண்டு பெட்டிகளிலும் நிமிடத்திற்கு 300 பயணிகள் வீதம் ஒரு மணி நேரத்திற்கு, 18 ஆயிரம் பேர் பயணிக்க முடியும். தரையில் ரயில்வே ஸ்டேஷன் <உள்ளதை போல, 8 மீட்டர் உயரத்தில் "ஸ்கை ஸ்டேஷன்' அமைக்கப்பட்டிருக்கும். இதில் மக்கள் பயணிக்க, டிக்கெட்டாக "பிரீ பெய்டு' கார்டுகள் வழங்கப்படும். கார்டு மெஷினில் கார்டை தேய்த்த பின் தான் பஸ் கதவு திறக்கும். குறிப்பிட்ட நேரத்தில் ஸ்டேஷனில் நின்று, பயணிகள் ஏறியதை உறுதி செய்து மீண்டும் செல்லும் வகையில் "ஆட்டோமேட்டிக்' தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட டிரைவர் இல்லாத தானியங்கி வாகனம் இது. நாம் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்ததும், ஆடியோவாக ஸ்டேஷன் பெயர் ஒலிக்கும். அதன் பின் கதவை திறந்து இறங்கி செல்லலாம். ஏ.சி.,வசதி செய்யப்பட்ட இந்த பஸ், மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.


மேல்புறம் மின்சார கம்பியை உரசி செல்லும் "எலக்ட்ரிக்' ரயிலை போல, இந்த பஸ்சும் 3 பேஸ் ஏ.சி., மோட்டார் மூலம் டிராக்கின் மேல் உள்ள மின் கம்பிகளை தொட்டுச் செல்லும். வண்டி ஓடும் போதே, அதற்கு தேவையான மின்சாரத்தையும் தானாக தயாரித்து கொள்ளும் தொழில் நுட்பமும் இதில் உண்டு. பாலத்தின் வலது, இடது பக்கத்தில் "டிராக்' அமைக்கப்பட்டிருக்கும். அடுத்த வழித்தடத்தில் பஸ் இயங்க வேண்டுமென்றால், ஒரு டிராக்கிலிருந்து மற்றொரு டிராக்கிற்கு தானாக திரும்பி மாறிக் கொள்ளும் நெகிழ்வு தன்மையுடையது.நிலம் தேவையில்லை:

அருள்தாஸ் கந்தைய்யா, அறிவியல் விஞ்ஞானி, மதுரை. ஆந்திரா மாநிலம் கம்மம் ஊரில், நிலக்கரியை எடுத்து செல்ல 3.5 கி.மீ தூரத்திற்கு "ரோப் வே', செயல்பட்டு வருகிறது. இதன் அடுத்த நிலை தான் ஸ்கை பஸ். இது அமைப்பாதல் நிலம் கையகப்படுத்தவோ, காடுகளை அழித்து ரோடு அமைக்கவோ தேவையில்லை. இதில் பயணிகள் மட்டுமல்ல சரக்குகளையும் கொண்டு செல்ல "கன்டெய்னர்' பெட்டிகளை இணைத்து பயன்படுத்த முடியும்.


சரக்கு லாரிகளால் ஏற்படும் நெரிசலை குறைக்க, "ஸ்கை கார்கோ' திட்டம் சிறந்த வழி. மதுரையில் நகர எல்லையை விரிவாக்காமல் ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. நகர் புறங்களில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், அதை முறைப்படுத்தாமல் நெரிசலை குறைக்கலாம் என்று நினைத்து, அங்காங்கே பாலங்களை கட்டுவதால் மேலும் நெரிசல் தான் ஏற்படும். நகர்புற பகுதியில் முக்கிய அரசு அலுவலகங்கள், மார்க்கெட்டுகள் இயங்குவதால் நெரிசலை தீர்க்கவே முடியாது.


கிராமப்புறத்திலிருந்து நகர்புறங்களுக்கு மக்கள் அதிகம் குடியேறுகின்றனர். கிராமங்களில் சிறிய வீடானாலும் 5 பேர் வரை வசிக்கின்றனர். ஆனால், நகரத்தில் எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் 2 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இதனால் வீடுகளின் எண்ணிக்கை மற்றும் மின்சாரம், குடிநீர், வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து கொண்டேயிருக்கிறது. ஸ்கை பஸ் பயன்பாட்டிற்கு வந்தால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிடும்.


இந்த பஸ்சை போக்குவரத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல், ஸ்கை பஸ் பாலங்களின் மேல் "சோலார் பேனல்'களை அமைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். இந்த பாலம் தரையிலிருந்த உயரமாக அமைந்திருப்பதால் சூரிய ஒளி எந்த வித இடையூறும் இல்லாமல் நேரடியாக சோலார் பேனலில் விழுவதால் அதிக அளவில் மின்சாரம் கிடைக்கும்.மோடி வழி தனி வழி:

குஜராத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற, பல புதுமையான திட்டங்களை முதல்வர் நரேந்திர மோடி செயல்படுத்துகிறார். அதில் ஒன்று தான் "ஜன்மார்க் (மக்களின் வழி)' என்ற பஸ்களுக்கான தனி வழி.


மோடி பதவி ஏற்ற போது, குஜராத்திலுள்ள ஆமதாபாத், இந்தியாவில் மாசுபாடு நிறைந்த நகரங்களில், முதல் 10 இடத்திற்குள் இடம் பெற்றிருந்தது. போக்குவரத்தால் வரும் மாசுக்களே, அசுத்தத்தின் ஆணி வேர் என கண்டறிந்த மோடி, இப்பிரச்னைக்கு தீர்வு காண கையில் எடுத்தது, பி.ஆர்.டி.எஸ்., (பஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம்) எனும், பஸ்களுக்கான தனி வழித் திட்டம்.


இத்திட்டத்தின்படி, சாலையில் நடப்பவர்களுக்கு அமைக்கப்படும் நடைபாதை போல், பஸ்களுக்கு தனி பாதை அமைக்கப்பட்டது. இதற்காக சாலைகள் விரிவாக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டது. பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்தது.


இத்திட்டத்தை முதலில் தொடங்கிய டில்லி மற்றும் புனேயில் குறைந்த பட்ஜெட், உள்கட்டமைப்பு வசதியின்மை, திறமையற்ற தலைமையால், திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரவில்லை. இத்திட்டத்தை கையில் எடுத்த மோடி, 1000 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கி, இதற்கென தனி அமைப்பை உருவாக்கினார்.


2006ல் திட்டம் தொடங்கப்பட்டு, 3 ஆண்டுகளில் முதல் கட்டப் பணிகள் முடிந்தன. இத்திட்டத்திற்கு "ஜன்மார்க்' எனப் பெயரிடப்பட்டு, 2009ல் தொடங்கப்பட்டது. இது, இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட, முதல் பி.ஆர்.டி.. சிஸ்டம்.


மொத்தம் 71 கி.மீ., தூரம் அமைந்த இத்திட்டத்தில், தினமும் 127 பஸ்கள் இயக்கப்பட்டு, 1.4 லட்சம் மக்கள் பயணிக்கின்றனர். நெரிசல் நேரத்தில் 2 நிமிடத்திற்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. 2015ம் ஆண்டுக்குள், 135 கி.மீ., தூரம் இலக்கு நிர்ணயித்து, பணிகள் நடந்து வருகின்றது. இதற்காக, ஒரு கி.மீ.,க்கு 13.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


நிறுத்தத்திற்கு பஸ்கள் வந்தவுடன் ரேடியோ சென்சார் மூலம், தானாக இயங்கும் கதவுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மோடி, பல முறை மக்களோடு மக்களாக பஸ்களில் பயணம் செய்து திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.


மாணவர்களைக் கவர திட்டமிட்ட மோடி, இப்பஸ்களில் பயணம் செய்ய, ஸ்மார்ட் கார்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மாணவர்கள் ரூ.25 தந்து ஸ்மார்ட் கார்டை பெற்றுக் கொண்டால், அதன்பின் செய்யும் ஒவ்வொரு ரூ.100 ரீசார்ஜ்க்கும் ரூ.140 அக்கவுன்டில் ஏற்றப்படும். இத்தொகை முழுவதற்கும், மாணவர்கள் பயணம் செய்யலாம். இது அனைவரது மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


தென் ஆப்ரிக்காவில் பி.ஆர்.டி.. சிஸ்டத்தை, செயல்படுத்த எண்ணிய அந்நாட்டு அரசு, ஆமதாபாத்தில் ஆய்வை மேற்கொண்டது. "ஜன்மார்க்' திட்டம், தேசிய அளவில் 3 விருதுகளையும், உலக அளவில் 3 விருதுகளையும் பெற்றுள்ளது.


ஆமதாபாத், இந்தியாவில் தான் உள்ளது. அங்கு முடியும் என்றால் நமது மதுரையில் முடியாதா? எப்போது நடக்கும்? இது கனவு அல்ல. அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் மக்களை பற்றி சிந்தித்து, மதுரையின் எதிர்காலத்தை பற்றி சிந்தித்தால்,இதுபோன்ற புதுமை திட்டங்களை கொண்டு வருவார்கள். இப்போது உடனடியாக முடியாவிட்டாலும், 2030 ல் மதுரை இப்படி இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.ரோட்டிற்கு இடையூறு இல்லை:

வில்லியம்ஸ் ஜெய், பொறியாளர், தென்னக ரயில்வே: மோனோ ரயிலை, வெளிநாட்டிலிருந்து தான் வடிவமைத்து வாங்க முடியும். உத்தேசமாக 10 கி.மீ., மெட்ரோ ரயில் அமைக்க ரூ.120 கோடி செலவாகும். இதுவே ஸ்கை பஸ் அமைக்க ஆகும் செலவு ரூ.60 கோடி. இந்த பஸ்சை குறைந்த செலவில், நம் நாட்டிலேயே வடிவமைத்துவிடலாம். மதுரைக்கு ஸ்கை பஸ் வசதி வந்தால் போக்குவரத்து பிரச்னையை எளிதில் தீர்த்துவிடலாம். உதாரணமாக, கூடல் நகர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்த ஆனையூர், அய்யர்பங்களா, சர்வேயர் காலனி, மாட்டுத்தாவணி, கோர்ட், தமுக்கம், தெற்கு, கிழக்கு நுழைவாயிலை கடந்து பெரியார் பஸ் ஸ்டாண்ட், சிம்மக்கல் வரை ஒரு வழித்தடம். மீண்டும் தெற்கு நுழைவாயிலிருந்து டி.வி.எஸ் நகர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம், தெப்பகுளம், அனுப்பானடி, கிழக்கு நுழைவாயில் வரை மற்றொரு வழித்தடம் என ஸ்கை பஸ் திட்டத்தை செயல்படுத்தலாம்.


ஏற்கனவே ரோட்டில் கட்டப்பட்டிருக்கும், 2 மீட்டர் மீடியனை 3 மீட்டருக்கு விரிவாக்கி, ஒவ்வொரு 15 மீட்டருக்கும் இடையில் பில்லர்கள் கட்டி அதன் மேல் "ஸ்கை பஸ்' பாலம் அமைக்க முடியும்.


இதனால் ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாது. விரும்பிய இடங்களில் இறங்க, முக்கிய இடங்களில் ஸ்கை ஸ்டேஷன் அமைக்கப்பட்டிருக்கும். டிராக்கின் கீழ் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்து மானிட்டரில் கண்காணிப்பதால் பாதுகாப்பான பயணம் செய்ய ஏதுவாக இருக்கும்.


மதுரையின் நெரிசலை தீர்க்க, ஸ்கை பஸ் அமைப்பது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும்.சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லை
* ஒரு கிலோ மீட்டருக்கு 50 காசு மட்டுமே பயண செலவு.


* மின்சாரத்தில் இயங்குவதால் புகை, சப்தம் வராது. சுற்றுப்புறச் சூழலுக்கு பாதுகாப்பானது.


* பயண நேரம் குறைவதோடு, நகரில் நெரிசல் இருக்காது.


* வேகத்தை குறைக்க "டிஸ்க் பிரேக்' மற்றும் அவசர வழி உள்ளதால்,விபத்து ஏற்பட வாய்ப்பில்லை


* குறுகிய காலத்தில் "ஸ்கை பஸ்' திட்டத்தை செயல்படுத்திவிடலாம்.


* பாலம் அமைக்க 3 மீட்டர் அகல ரோடு போதும்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X