மூணாறு: கொசுக்களை அழிக்கும், "ஸ்பார்தோடியா' மரங்களில், சிவப்பு நிறங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. நம்முடைய தூக்கத்தை கெடுக்கும் கொசுக்களை, விரட்டவும், அழிக்கவும் பல விதமான பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். எனினும், அவற்றை அழிக்க முடியவில்லை. இயற்கையால் கொசுக்களை அழிக்கலாம் என்பது, பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மூணாறில் உள்ள தேயிலைத் தோட்டங்களை, ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயர்கள் நிர்வகித்து வந்தனர். அப்போது, கொசுக்களால் மலேரியா காய்ச்சல் பரவி, ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
நோயை பரப்பும் கொசுக்களை அழிக்க, இங்கிலாந்து உட்பட வெளி நாடுகளில் இருந்து, "ஸ்பார்தோடியா' எனும் மரக் கன்றுகளை கொண்டு வந்து, மூணாறு, சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளிலும் நட்டனர்.
இந்த மரங்களில் பூக்கும் பூக்கள், கொசுக்களை ஈர்க்கும் தன்மை கொண்டவை. அவ்வாறு ஈர்க்கப்படும் கொசுக்கள், பூக்களில் சுரக்கும், ஒரு வித பசை போன்ற திரவத்தில் ஒட்டி அழிந்து விடும். இவ்வாறு
கொசுக்களை அழித்து, மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்தினர். தற்போது இந்த மரங்கள், "மலேரியா மரங்கள்' என அழைக்கப்படுகின்றன. இந்த மரங்களில், சிவப்பு நிறத்தில் பூக்கும் பூக்கள், பறவை போன்ற எழிலுடன் காணப்படும். தற்போது இவை மூணாறைச் சுற்றிலும் பல்வேறு பகுதிகளில் பூத்து குலுங்குகின்றன.
இந்த மரங்களின் சிறப்பு தன்மை குறித்து, தற்போதுள்ள சந்ததியினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அழிந்து வரும் ஸ்பார்தோடியா மரங்களை பாதுகாப்பது நம்முடைய கடமை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE