திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான கோசாலையில், உணவு வழங்காததால் பசுக்களும், கன்றுகளும் இறந்தது, பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும், இப்பிரச்னைக்கு முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்தர்கள் கொதிப்பு:சமீபத்தில், திருவண்ணாமலைஅக்னீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான கோசாலையில், உண்ண உணவின்றி, பசு, கன்றுகள் இறந்தது, நாடு முழுக்க உள்ள, பக்தர்களை கொதிப்படைச் செய்துள்ளது.
இது குறித்து, இந்து முன்னணிமாவட்ட அமைப்பாளர், சங்கர் கூறியதாவது: கோசாலையில், 130க்கும் மேற்பட்ட பசுக்கள் இருந்தன. இவை பல, மாதங்களாக ஒருவேளை உணவுக்கு கூட வழியின்றி தவித்து வருவதாக, எங்களுக்கு தகவல் வந்தது.நேரில் பார்த்ததில் அதில் உண்மை என, தெரிய வந்தது. அதற்காக போராட்டம் நடத்தினோம். அதற்குள், ஐந்து பசுக்களும், மூன்று பச்சிளம் கன்றுகளும் இறந்து விட்டன.பிரேத பரிசோதனையில், அனைத்து மாடுகளும், உண்ண உணவின்றி, பிளாஸ்டிக் பைகளை தின்றதால் இறந்தன என்பது, தெரிய வந்தது. இதன் மூலம், அறநிலையத் துறை, பசியால் பசுக்கள் சாவதை வேடிக்கை பார்த்தது என்பது, வெட்ட வெளிச்சமாகி உள்ளன.இதே போல், சில ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சொந்தமான மாடுகள் விற்பனை செய்யப்படுவதாக
புகார் எழுந்த போது,
உயர்நீதிமன்றம், பல்வேறு விதிமுறைகளுக்கு கோசாலைகளுக்கு விதித்தது. அதில்,
ஒன்றை கூட, அறநிலையத்துறை நடைமுறைபடுத்துவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
'கடமை' அளவில்...:பசுக்கள்
இறந்ததன் எதிரொலியாக, திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர், பரஞ்சோதி, கட்டாய
விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். சென்னை மண்டல இணை ஆணையர் திருமகள்,
திருவண்ணாமலை மண்டல இணை ஆணையராக, கூடுதல் பொறுப்பு வகிப்பார் என,
கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அனைத்து கோவில்களுக்கும் கோசாலை,
நடத்துவதற்கான விதிமுறைகளை, அறநிலையத்துறை அனுப்பி உள்ளது.ஒவ்வொரு ஆண்டும்,
இது போன்ற சம்பவங்கள் எழும் போது, செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்புவதோடு, பிரச்னை முடிந்து விட்டதாக, அறநிலையத்துறை எண்ணுகிறது. ஆனால், பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை.தமிழக முதல்வர், இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை.கோவில் தரப்பினர், 'இம்மாவட்டத்தில், போதிய அளவில் புல் கிடைக்கவில்லை. இருந்தாலும், முறையாக, வைக்கோல் வைக்கப்படுகிறது. பசுக்கள், கன்றுகள் இறந்ததற்கு காரணம், அவற்றுக்கு உடல்நிலை சரியில்லை' என்றனர்.
பசுக்கள் மாயமானபோதே நடவடிக்கை எடுத்திருக்கலாமே!'திருச்செந்துார்
சுப்பிரமணியசாமி கோவிலுக்கு காணிக்கையாக
பெறப்பட்ட, கால்நடைகளில் இருந்து,
தனியார் கோசாலைகளுக்கு வழங்கப்பட்ட, 5,389 பசுக்கள் மாயமாகி உள்ளன' என,
தணிக்கைத் துறை ஆய்வில் தெரியவந்தது. அப்பசுக்கள், கசாப்பு கடைகளில்
விற்கப்பட்டிருக்கலாம் என, பக்தர்கள் கருதினர்.இது குறித்து விரிவான
செய்தி, 'தினமலர்' நாளிதழில், கடந்த ஆண்டு, நவம்பர், 29ல், வெளியானது.இது
குறித்து, விளக்கம் கேட்டு, 30.12.12 தேதியில், இந்து சமய அறநிலையத்துறை
ஆணையர் தனபால், இணை ஆணையருக்கு கடிதம், எழுதினார். இதன் தொடர்ச்சியாக, தல
ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், கோவிலுக்குச் சொந்தமான, 1,3,5,6 ஆகிய எண்
கொண்ட, கோசாலைகளில்முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது.மேலும், இக்கோசாலைகள், தங்களிடம் பதிவு பெற்ற, பிற கோசாலைகளுக்கு தாங்கள் பெற்ற, கால்நடைகளை பகிர்ந்து வழங்குவதில், தடை செய்யும் வகையில், சட்ட நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் ஏதும் நடைமுறையில் இல்லாததாலும், இக்கோசாலைகளிடம் இருந்து கால்நடைகளை பெறும், பிற கோசாலைகள், பல மாவட்டங்களில் உள்ளதாலும், இக்கோசாலைகளின் நடவடிக்கையை, கண்காணிக்க முடியவில்லை என, இணை ஆணையர் தரப்பு ஒதுங்கிக் கொண்டது.இதுநாள் வரை, அறநிலையத்துறை தவறு இழைத்த அதிகாரிகள் மீதோ, கோசாலை நிர்வாகத்தையோ தண்டிக்கவில்லை. கடந்த ஆண்டே, அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இந்நிலை வந்திருக்காது. எனவே, முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பக்தர்களின் கோரிக்கை.
- நமது நிருபர் -