புதுடில்லி : 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உரிமை கோரும் உறுப்பினர்களில் இருந்து நம்பிக்கைகுரியவர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு நகரத்திலும் ஒரு குழுவை அமைத்து வருகிறது. இந்த குழு ரகசிய நம்பிக்கை ஓட்டெடுப்பு மூலம் போட்டியிட உரிமை கோருபவர்களில் இருந்து 3 பேரை தேர்வு செய்ய உள்ளது. குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் நம்பிக்கைக்குரிய 3 பேர் அடங்கிய பட்டியல் காங்கிரஸ் மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.
ராகுல் வேண்டுகோள் :
நாடு முழுவதும் மாவட்டம் மற்றும் நகரம்தோறும் குழு அமைத்து வேட்பாளராக போட்டியிட தகுதியான நபர்களின் பட்டியலை தயார் செய்யுமாறு காங்கிரஸ் நிர்வாகிகளை, கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார். தேர்வு குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் 3 பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் தேர்தல் குழு ஆய்வு செய்த பின் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடவும் ராகுல் தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரகசிய ஓட்டெடுப்பு முற்றிலும் ஜனநாயக முறையில் நடத்தப்படும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடுமையான தோல்வியை தழுவிய தொகுதிகளில் இந்த ரகசிய ஓட்டெடுப்பு முறை மூலம் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடத்தப்படும் எனவும் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
தேர்வுக் குழு :
வேட்பாளர் தேர்வு குழுவில் காங்கிரஸ் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியினர், அத்தொகுதியைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட 56 உறுப்பினர்கள் இடம்பெற உள்ளனர். போட்டியிட உரிமை கோரும் அனைத்து உறுப்பினர்களின் பெயர்களின் மீதும் ரகசிய ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது. மேலும் அவர்கள் பெறும் உத்தேச ஓட்டுக்களின் அடிப்படையில் ரகசிய ஓட்டெடுப்பில் வெற்றி பெறுபவர்களின் பெயர் வேட்பாளர் பரிந்துரைக்கான 3 பேர் பட்டியலில் இடம்பெற உள்ளது. சில தொகுதிகளில் தேர்வுக் குழுவால் வேட்பாளர்களை முறையாக தேர்ந்தெடுக்க முடியாததால் உட்கட்சி பூசல் ஏற்படுவதாகவும், அதனை தவிர்ப்பதற்காகவே இத்தகைய முறை கையாளப்பட உள்ளதாகவும் காங்கிரஸ் நிர்வாகி நீரஜ் போரா தெரிவித்துள்ளார். தேர்வுக் குழுவில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படும் எனவும், இந்த தேர்வுக் குழு உறுப்பினர்கள் குறித்து இன்று தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE