புதுடில்லி : வரவிருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் 2014 லோக்சபா தேர்தல் ஆகியவற்றில் ஓட்டுப்பதிவு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பாலிவுட் நட்சத்திரங்களையும், கிரிக்கெட் வீரர்களையும் விளம்பர தூதர்களாக களமிறக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேர்தல் ஆணையம் முடிவு :
இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் ஓட்டுப்போடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் விளம்பரங்களை தயாரித்து ஊடகங்கள் மூலம் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக பாலிவுட் நடிகை சோகா அலி கான், கிரிக்கெட் வீரர் விராத் கொஹ்லி ஆகியோரை விளம்பர தூதர்களாக நியமித்துள்ளது. ஊடகங்களின் தேர்தல் பிரச்சார விதிமுறைகளை அறிவித்த தேர்தல் ஆணையம் இதனை தெரிவித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த விளம்பர தூதர்கள் பிரிண்டிங் மற்றும் எலக்ட்ரானிக் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படுவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனக்கு இத்தகையதொரு வாய்ப்பு கிடைத்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை சோகா அலி கான் தெரிவித்துள்ளார்.
ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நகர்புற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நகரத்தை மட்டுமின்றி நாட்டையும் உயர்த்தும் செயல் எனவும் சோகா தெரிவித்துள்ளார். விராத் கொஹ்லி கூறுகையில், மைதானத்தில் எனது பேட் பேசும் அதே போல் தேர்தல் தினத்தன்று மக்களின் ஓட்டு பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வலைதளங்களுக்கு வழிகாட்டுதல்:
டுவிட்டர், பேஸ்புக், யூட்டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களும், தங்களின் விளம்பரங்கள் தணிக்கை செய்யப்பட்ட சான்றிதழ் பெற்ற பின்னரே வலைதளங்களில் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு விளம்பர செய்ய விரும்புவோர் அதற்கான தொகையை சம்மந்தப்பட்ட சமூக வலைதளம் அல்லது இளையதளத்திற்கு செலுத்த வேண்டும் எனவும், இந்த விளம்பரங்களுக்கான செலவுகளும் வேட்பாளர் அல்லது கட்சியின் தேர்தல் செலவில் கணக்கில் கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அனைத்து தேர்தல் விளம்பரங்களும் தணிக்கை குழுவின் ஆய்விற்கு பின்னரே வெளியிடப்படும் எனவும், மாநில மற்றும் மாவட்ட அளவு ஊடக மற்றும் கண்காணிப்பு குழுவால் கண்காணிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE