உரத்த சிந்தனை: காவு கேட்கும் கல்விக்கூடங்கள் - இரா.ஆஞ்சலா ராஜம்

Updated : அக் 27, 2013 | Added : அக் 26, 2013 | கருத்துகள் (7) | |
Advertisement
'ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை; தேர்வில் தோல்வி அடைந்ததால், மாணவி தற்கொலை' போன்ற செய்திகளையே, சில ஆண்டுகளாக கேட்டுப் பழகியிருந்த நமக்கு, புதுவரவாக, ஆசிரியரை மாணவர்கள் கொலை செய்யும் செய்திகளும் வரத் துவங்கி விட்டன.கடந்த ஆண்டு, சென்னையில், ஆசிரியை ஒருவரை, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலை செய்த சம்பவத்தை, யாரும் மறந்திருக்க முடியாது. அதன் தொடர்ச்சியாக, தற்போது,
Uratha sindanai,உரத்த சிந்தனை, இரா.ஆஞ்சலா ராஜம்

'ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை; தேர்வில் தோல்வி அடைந்ததால், மாணவி தற்கொலை' போன்ற செய்திகளையே, சில ஆண்டுகளாக கேட்டுப் பழகியிருந்த நமக்கு, புதுவரவாக, ஆசிரியரை மாணவர்கள் கொலை செய்யும் செய்திகளும் வரத் துவங்கி விட்டன.

கடந்த ஆண்டு, சென்னையில், ஆசிரியை ஒருவரை, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலை செய்த சம்பவத்தை, யாரும் மறந்திருக்க முடியாது. அதன் தொடர்ச்சியாக, தற்போது, இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் ஒருவரை, மாணவர்கள், 'போட்டு'த் தள்ளி விட்டனர்!இதில் வேடிக்கை என்னவென்றால், ஆசிரியர், மாணவனைத் தாக்கினாலும்; மாணவன், ஆசிரியரைத் தாக்கினாலும், பழி என்னவோ, ஆசிரியர்கள் மீது தான். 'இன்றைய ஆசிரியர்களின், அணுகுமுறை சரியில்லை' என, ஆவேசப்படுவோர், ஒன்றை மறந்து விடுகின்றனர்... இன்றைய கல்வி முறை, அன்று போல் இல்லை என்பதை.அன்று, ஒழுக்கத்திற்கே முக்கியத்துவம் தந்தனர். ஆனால் இன்று? கல்வி வியாபாரமாக்கப்பட்டு விட்டது. அதனால், பள்ளியானாலும், கல்லூரியானாலும், நல்ல மதிப்பெண் எடுப்பவனுக்கே முக்கியத்துவம்; அவனே, 'ஹீரோ!' அதுவே, அவன் எத்தனை நல்லவனாக இருந்தாலும், சரியாக படிக்கவில்லை என்றால், 'ஜீரோ!'ஆக, மதிப்பெண் ஒன்று தான், கல்வியின் குறிக்கோளாக இருக்கிறது. படிப்பு வரவில்லை என்றால், விட்டு விட வேண்டியது தானே... ஒருவனுக்கு படிப்பில் ஆர்வம் இருந்தால், இன்னொருவனுக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கும்; வேறொருவனுக்கு, தொழிற்கல்வியில் ஆர்வம் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும்.அதை விடுத்து, அடுத்த வீட்டுப் பையனும், எதிர் வீட்டுப் பையனும் மதிப்பெண் பெறுகையில், நம் வீட்டுப் பையனோ, பெண்ணோ நன்றாக படிக்கவில்லையே என்ற பெற்றோரின் கவலை, பின், அவர்களது, தன்மானப் பிரச்னையாகி விடுகிறது.

இவர்கள் பள்ளியில் முறையிட, நிர்வாகம், ஆசிரியரிடம் கட்டளையிட, அங்கே உருவாகிறது பிரச்னை. ஆசிரியர் என்ன மந்திர ஜால வித்தை செய்பவரா, 'ஜீபூம்பா' சொல்லி, நிமிஷத்தில், எல்லாவற்றையும் மாற்ற...இப்படி, பெற்றோர், மாணவன், நிர்வாகம் என, ஆளாளுக்கு பாடாப் படுத்தினால், பாவம், ஆசிரியர்கள் தான் என்ன செய்வர்? அதற்காக, அத்தனை ஆசிரியர்களையும், நல்லவர்கள், வல்லவர்கள் என, போற்றிப் புகழவில்லை.மற்ற தொழில்களைப் போல, பணம் ஈட்டும் ஒரு தொழிலாகவே இதை நினைத்து, பணியில் சேரும் ஆசிரியர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். உண்மையை சொல்லப் போனால், மேற்குறிப்பிட்ட அசம்பாவிதங்கள் அதிகளவில் நிகழ்வதற்கும், இவர்கள் தான், முக்கிய காரணமாக இருப்பர். அதற்காக, ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் குறை கூறுவது, நியாயம் தானா என்பது தான் கேள்வி.வகுப்பறைக்குள் நுழைந்தவுடன், 'ஹோம் ஒர்க் செய்தீங்களா.... ஒன்பதாவது, 'லெசன்' எடுங்க... ' என, பாடங்கள் நடத்தத் தயாராகி விடுகின்றனர், ஆசிரியர்கள். முன்பு, ஆசிரியர் - மாணவன் உறவு என்பது, தந்தை - மகன் உறவாகவே இருந்தது. ஆசிரியர்கள், மாணவனை, தன் குடும்பத்தில் ஒருவராகவே பாவித்தனர். அன்பு, கண்டிப்பு, கவனிப்பு என, பெற்றோர் போல, பார்த்துக் கொண்டனர். கல்வி சார்ந்த விஷயங்கள் மட்டுமின்றி, அறிவு சார்ந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.ஆனால், இன்று, தேர்வில் மதிப்பெண் குறைந்தால், பள்ளி நிர்வாகத்திற்கு பதில் கூற வேண்டுமே என்ற கவலையால், 'சிலபஸ்' தவிர, நாட்டு நடப்பு, நல்லது கெட்டது என, எதைப் பற்றியும், ஆசிரியர்கள் வாய் திறப்பதில்லை; அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமுமில்லை.

பாடம், தேர்வு, மதிப்பெண் இதுவே அவர்களது கவலை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம்; இன்றைய கல்வியின் தாரக மந்திரமும் அது தான்!இப்படி, ஆசிரியர்-மாணவன் இடையே, நல்லுறவு இல்லாததால், அன்பு கலந்த கண்டிப்பு இல்லாமல் கொடுக்கும் தண்டனைகளே, இது போன்ற வன்முறை சம்பவங்களுக்கு காரணமாகின்றன. விளைவு, ஆசிரியர்கள் மாணவர்களையும், மாணவர்கள் ஆசிரியரையும் மாறி மாறி குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.மாணவனின் தேர்ச்சி மட்டும் முக்கியமல்ல; ஒழுக்கம், அறிவு, வளர்ச்சி என, அனைத்தும் தான், நாளைய தலைவனுக்கு தேவை என்பதை உணர்ந்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்வித் துறையோ, கைகட்டி, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.அப்படியானால், இது மட்டும் தான் பிரச்னையா... வேறெதுவும் இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணமில்லையா என்றால், ஏன் இல்லை...காணாமல் போன மாலை நேர விளையாட்டுகள், தனிக்குடித்தன வரவால் தொலைந்து போன உறவுகள், 'வீட்டுக்கு ஒரு குழந்தை' என்றாகிப் போனதால், உடன்பிறப்பு இல்லாததால் வாட்டும் தனிமை, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், பள்ளி விட்டு வீட்டுக்கு வந்ததும், பேசக் கூட நாதியில்லாத வாழ்க்கை என, பல்வேறு காரணிகளால், இன்றைய மாணவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும், உளவியல் ரீதியான பிரச்னைகள் எண்ணிலடங்கா.இவை ஒரு புறம் என்றால், தொலை தொடர்பு சாதனங்கள், 'தொல்லை' தொடர்பு சாதனங்களாகி, மாணவர்களை, பல வகையில் சீரழித்துக் கொண்டிருக்கின்றன.இவை அனைத்தின் பாதிப்பே, மாணவர் தற்கொலைகளும், கொலை பாதக செயல்களும்...

இதற்கு தீர்வு தான் என்ன?உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு வடிகாலாக, கல்விக் கூடங்கள் இருக்க வேண்டியது, காலத்தின் கட்டாயம். பாடத் திட்டத்தை மட்டும் கற்றுக் கொடுக்காமல், கற்பவரை நெறிப்படுத்தி, ஒழுக்கத்தை கற்றுத் தருவதோடு, மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், மனத் திடத்தையும் கொடுக்கக் கூடியதாக, கல்வி அமைய வேண்டும்.நன்னெறிகள், நீதி போதனைகள், வாழ்க்கைக் கல்வி என்றெல்லாம் சொல்லப்படும், நல்லொழுக்கக் கல்வி தொடர்பான வகுப்புகள், தவறாமல் இடம் பெற வேண்டும். மாணவர்கள் உடல் நலம் பேணக் கூடிய, உடற்பயிற்சி வகுப்புகள், விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு, பெயரளவிற்கு இருக்காமல், இருவரது கருத்துகளும் பரிமாறப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும், கவுன்சிலிங் வகுப்புகள் இடம் பெற வேண்டும்.குறிப்பாக, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வாரம் இரு முறையாவது, கவுன்சிலிங் பாட வேளை அமைய வேண்டும். தற்போதைய சூழலில், மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும், கவுன்சிலிங் வகுப்புகள் நடத்த வேண்டியது அவசியம். இவற்றில் எல்லாம் கல்வித்துறையும், அரசும் கவனம் செலுத்த வேண்டும்.அதோடு, ஆசிரியர்களும், தம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள குழந்தைகளை, தம் குழந்தைகளாக பாவித்து, நடத்த வேண்டும். மாணவர்களை, வார்த்தைகளால் குத்திக் குதறினால், ஒன்று, அவர்கள் குப்பைகளாவர் அல்லது குமுறி எழுந்து, இதுபோன்ற வன்முறை கொடுமைக்காரர்களாவர். நம்மிடம் கொடுக்கப்பட்ட பிள்ளைகளின் வாழ்க்கை தடம் மாற, நாமே காரணமாகலாமா என்பதை உணர்ந்து, நடக்க வேண்டும்.'ஒரு நல்ல ஞானாசிரியனால் தான், நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்' என்ற, விவேகானந்தரின் கூற்றை மனதில் பதித்து, ஒவ்வொருவரும், நல்ல ஞானாசிரியராக செயல்பட்டால், இன்னொரு சம்பவம் இது போன்று நடக்காது.
anjalarajam@gmail.com

இரா.ஆஞ்சலா ராஜம் -சமூக நல விரும்பி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (7)

Sami - Tirupur,இந்தியா
01-நவ-201308:18:09 IST Report Abuse
Sami நல்ல ஒரு கட்டுரை. என்னதான் அழுது புரண்டாலும் மாற்றம் வருவது என்பது நம்மில் இருந்து தொடங்காதவரை என்றும் வாராது. கல்வி பணம் சம்பாரிக்க ஒரு வழி என்பதாலேயே அது ரொம்ப வலியாக மாறிவிட்டது. நடப்பது நடக்கட்டும்.
Rate this:
Cancel
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
27-அக்-201319:41:57 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA எல்லாருக்கும் கல்வி என்ற நிலை தான், கண்ட கண்ட கழிசடைகள் அரைகுறையாய் படித்து ( 10 தடவை பெயில் 11வது ஜஸ்ட் பாஸ் ) லஞ்சம் கொடுத்து ஆசிரியர் வேலைக்கு வந்தால் இந்த நிலைமை தான்.. திறமைக்கு மதிப்பில்லா த நா/இந்திய என்றும் உருப்படாது..
Rate this:
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
27-அக்-201315:08:48 IST Report Abuse
JALRA JAYRAMAN 'ஆசிரியர் அவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சலோ அதை விட மாணவனுக்கு அதிகமாக உள்ளது மாணவர்க்கு, இதில் பெற்றோர்கள் வேறு தங்கள் அடையமுடியாத குறிகோள்களை எல்லாம் மகன், மகள் மூலம் அடையலாம் என்று நினைகிறார்கள், எப்போது ஒரு மனிதனின் செல்வாக்கு அவன் இடம் உள்ள பணம் சொத்தை வைத்து தான் என்று சமூகத்தில் ஆனதோ அன்றே கேடு காலம் ஆரம்பித்து விட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X