புதுடில்லி : சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களில் நடத்தப்பட்ட தேர்தல் கருத்துகணிப்பின்படி நாட்டின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை விட, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கே அதிகமாக உள்ளது என தெரிய வந்துள்ளது.
கருத்துக்கணிப்பு விவரம் :
மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், டில்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. மிசோரத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்படவில்லை. 5 மாநில சட்டமன்ற தேர்தல் 2014 லோக்சபா தேர்தலின் முன்னோட்டமாக இருக்கும் என கருதப்படுவதால் இந்த மாநிலங்களில் பெறும் வெற்றியின் அடிப்படையில் நாட்டின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம் எனவும் ஆய்வு நடத்தப்பட்டது.
யார் பெயரையும் குறிப்பிட்டு கேட்காமல் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம் என மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் அளித்த பதிலில், முதலில் நரேந்திர மோடி. 2வது ராகுலின் பெயரும், 3வது சோனியாவின் பெயரும் கூறப்பட்டுள்ளது.
மோடிக்கு 35 சதவீத வாக்காளர்கள் ஆதரவும், ராகுலுக்கு 17 சதவீதம் பேரும், சோனியாவிற்கு 5 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சோனியாவையும், தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும் சமமாக கருதப்படுவதால் இந்த 5 சதவீத ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயாவதிக்கு 2 சதவீதம் பேரும், அத்வானிக்கு ஒரு சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ராகுலை முந்தும் மோடி:
தலைநகர் டில்லியில் மட்டும் மோடிக்கு 42 சதவீதம் பேரும், ராகுலுக்கு 15 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானில் மோடிக்கு 40 சதவீதம் பேரும், ராகுலுக்க 19 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கரில் ஏறக்குறைய இருவரும் சமநிலையிலேயே ஆதரவு பெற்றுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் மோடிக்கு 31 சதவீதமும், ராகுலுக்கு 25 சதவீதமும் ஆதரவு கூறப்பட்டுள்ளது. சட்டீஸ்கரில் மோடிக்கு 15 சதவீதமும், ராகுலுக்கு 10 சதவீதமும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 4 மாநிலங்களிலும் மோடிக்கு ஆதரவு பெருகி உள்ளது. ஜூலை மாதத்தில் அவர் பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளராக அறிக்கப்படாத போதும் 26 சதவீதம் பேரும் அவர் பிரதமராக வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் ராகுலுக்கு 2 சதவீதமே ஆதரவு அதிகரித்துள்ளது.
ஆதரவு யாருக்கு :
4 மாநிலங்களிலும் மோடிக்கு 45 சதவீதம் பேரும், ராகுலுக்கு 29 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயம் 26 சதவீதம் பேர் இருவரையுமே புறக்கணித்துள்ளனர். இந்த 4 மாநிலங்களிலும் 20 சதவீதம் பேர் மன்மோகன் சிங்கே நல்ல பிரதமர் என கருதுகின்றனர். பா.ஜ.,வை பொறுத்தவரை மோடிக்கு 48 சதவீதம் பேரும், அத்வானிக்கு 7 சதவீதம் பேரும், சுஷ்மா சுவராஜிற்கு 4 சதவீதம் பேரும், சிவராஜ் சிங் சவ்கானுக்கு 5 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் பிரதமராகும் வாய்ப்பு மோடிக்கே அதிகம் எனவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராகுலே பிரதமராக வாய்ப்பு அதிகம் எனவும் தெரிகிறது.
நாட்டின் அடுத்த பிரதமர் நேர்மையானவராக இருக்க வேண்டும் என 26 சதவீதம் பேரும், திடமானவராக இருக்க வேண்டும் என 15 சதவீதம் பேரும் கருத்துகணிப்பில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE