காமன்வெல்த்: நீதிக்காக நிராகரிப்போம் -எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி-| Uratha sindanai | Dinamalar

காமன்வெல்த்: நீதிக்காக நிராகரிப்போம் -எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி-

Updated : நவ 17, 2013 | Added : நவ 02, 2013 | கருத்துகள் (10)
Share
உரத்த சிந்தனை,Uratha sindanai,எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி-

'காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது' என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதனால் என்ன தான் நடந்துவிடும்.கடந்த, 2008ல் இருந்தே, இலங்கையில் இறுதி போர் துவங்கி விட்டது. தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். உலக நாடுகள் ஊமையாகவே இருந்தன.

ஐ.நா.,வின் உலக உணவு ஸ்தாபனம், இலங்கை போர் பகுதியில், 4.2 லட்சம் தமிழ் மக்கள் உள்ளதாக செப்டம்பர், 2008ல் கூறியது. ஆனால், இலங்கை அரசோ, போர் பகுதியில் ஒரு லட்சம் பேர் மட்டும் உள்ளதாக கூறியது.எனவே, 4.2 லட்சம் மக்களுக்கு பதிலாக, சரியாக ஒரு லட்சம் மக்களுக்கு மட்டுமே உணவு எடுத்துச் செல்ல, இலங்கை அரசு அனுமதித்தது. ஒருவர் பெறும் உணவை நான்கு பேர் உண்டு உயிர் வாழ வேண்டிய அவலம், தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது.மே, 13, 2009, போர் பகுதியில், ஒரு லட்சம் பேர் உள்ளதாக, ஐ.நா., கூறியது. ஆனால், 10 ஆயிரம் பேர் உள்ளதாக, இலங்கை கூறியது. ஒருவர் பெறும் உணவை, பத்து பேர் உண்டு பசியாற்ற வேண்டிய அவலம் ஏற்பட்டது.'போரில்லாத பகுதி' என, அறிவித்து விட்டு, மக்கள் வந்த பின், அங்கேயும் குண்டு போட்டது இலங்கை ராணுவம்.சென்னையில் காலையில் துவங்கிய உண்ணாவிரதத்தால், கடற்கரை சாலை பரபரப்பானது. மதியம் போர் நிறுத்தப்பட்டு விட்டது. மாலையில் மறந்து விட்டனர். மந்திரிகள் பதவியில் அமர்ந்து இருந்தனர்.முடிவில், முள்ளிவாய்க்காலில் முள்வேலி முகாமில் மூன்று லட்சம் தமிழர்கள் முடக்கப்பட்டனர். அவர்களின் முனங்கல் கூட மெதுவாக இருந்ததால், அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழு காதில் விழவில்லை. தமிழர்கள் நலமாய் உள்ளதாக கூறி, நட்புடன் வந்தனர்.

ஐ.நா., செப்டம்பர், 2008ல், கூறிய 4.2 லட்சம் பேரில் மூன்று லட்சம் பேர் முள்வேலி முகாமில். மீதி, 1.2 லட்சம். இதில், 4 லட்சம் பேர் வரை ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.
கடந்த, 2009 போரில் நடைபெற்ற அவல நிலையை கண்டறிய, ஐ.நா., தலைவர் பான்-கி-மூன், ஜூன், 2010ல் (போர் முடிந்து ஓராண்டிற்கு பின்) மூன்று நபர் குழுவை நியமித்தார்.
முதலில், ஐ.நா., உறுப்பினர்களையே இலங்கையை விட்டு வெளியேற சொன்ன இலங்கை, பின் ஐ.நா., குழுவை அனுமதித்தது. மூன்று நபர் குழு, தன் அறிக்கையை மார்ச், 31, 2011ல் பான்-கி-மூனிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை ஏப்ரல், 18ம் தேதி வரை, பான்-கி-மூன் வெளியிடாமல் பார்த்துக் கொண்டார் விஜய் நம்பியார். காரணம், ஏப்ரல், 13ல் நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விடும் என்று டில்லி அழுத்தம் தந்ததால் தான் என்று, சொல்லப்பட்டது. தமிழக தேர்தல் முடிந்த பின் ஏப்ரல், 18ல் பான்-கி-மூன் அறிக்கையை வெளியிட்டார். அதனால் ஒன்றும் பெரிதாக நடந்துவிடவில்லை.ஜெனீவாவில் மனித உரிமை கூட்டம், கடந்த மார்ச்சில் நடைபெற்றபோது, பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணப் படம், உலகையே உலுக்கியது. ஆனால், இலங்கைக்கு எதிராக ஒன்றும் பேசாமல், உலக நாடுகள் ஊமையானது.ஐ.நா.,வின் மனித உரிமை கழகத் தலைவர் நவநீதம் பிள்ளை, தன் ஈழப் பயணத்தை முடித்து திரும்பும்போது, அவருக்கு சரியான ஒத்துழைப்பை தர இலங்கை மறுத்தது. அவர் மீது அவதுாறை அள்ளி வீசியது.உலக நாடுகள் எல்லாம், மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று போராடும்போது, அதற்கு ஆதரவு தெரிவிக்கும் பான்-கி-மூன், இலங்கை படுகொலையை கண்டிக்கவில்லை. ஐ.நா., சரியான நேரத்தில் பேசியிருந்தால், படுகொலை தவிர்க்கப்பட்டு இருக்கும். தற்போது பான்-கி-மூன் வருத்தப்பட்டுள்ளார் என்பதால் என்ன செய்ய முடியும்.உலக நாடுகளையே தன் குடையின் கீழ் வைத்துள்ள, உலக அமைதியின் தேவதுாதன் என எண்ணப்பட்ட, ஐ.நா.,வால் ஒன்றுமே செய்ய முடியாத செயலை, 'காமன்வெல்த்' நாடுகள் அமைப்பா செய்துவிடும்?

இரண்டாம் எலிசபெத் ராணியை தலைவராக கொண்டு, 53 நாடுகள், உள்ள அமைப்பு காமன்வெல்த். இதில் உள்ள உறுப்பு நாடுகள் என்பது, வெறும் கவுரவம் தானே தவிர, வேறு ஒன்றுமில்லை. காமன்வெல்த் அமைப்பு இதுவரை உருப்படியாக எதையும் செய்யவும் இல்லை. அப்படி செய்யப்பட்டாலும், அதை யாரும் மதிப்பதில்லை.கடந்த, 1983ல், இந்தியாவில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது. அன்றைய பிரதமர் இந்திரா, காமன்வெல்த் அமைப்பின் தலைவராக இருந்தார்.தற்போதைய, 2013ல் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறும் என்று, 2009ம் ஆண்டிலேயே முடிவு செய்யப்பட்டு விட்டது. 'ஆண்டி மடம் கட்டியது' போல் அனைவரும் ஒன்று கூடி, பின் போய் விடுவர். 2013 மாநாட்டில் ஓர் சிறப்பு என்னவென்றால், மகாராணி எலிசபெத்துக்கு வயதாகி விட்டதால், அவர் மகன் சார்லஸ் பங்கேற்பார் என்று தெரிகிறது.

*கென் சரோ - வைவாவை துாக்கிலிட்டதற்காக, நைஜீரியா, நவம்பர், 11, 1995 முதல் மே, 29, 1999 வரை காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டது.
*முஷாரப், ராணுவ புரட்சி செய்ததால், பாகிஸ்தான், அக்டோபர், 18, 1999 முதல், மே, 22, 2004 வரை காமன்வெல்த் அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது.
*முஷாரப், அவசர நிலை பிரகடனப்படுத்தியதால், மீண்டும் பாகிஸ்தான், நவம்பர், 22, 2007ல் ஆறு மாதத்திற்கு இரண்டாம் முறையாக, இடை நீக்கம் செய்யப்பட்டது.
*ராபட் முகாபே அரசின், தேர்தல் மற்றும் நிலச்சீர்திருத்த கொள்கைக்காக ஜிம்பாவே, 2002ல் இடை நீக்கம் செய்யப்பட்டது. ஆனால், 2003ல் ஜிம்பாவே, காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலகி கொண்டது.
*ஜூன், 6, 2000 முதல் டிசம்பர், 20, 2001 வரை ராணுவ புரட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிஜி தீவு, காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. மீண்டும் டிசம்பர், 2006ல் இடைநீக்கம் செய்யப்பட்டு 'பிஜி'யின் இடை நீக்கம் இன்றும் தொடர்கிறது. ஆனால், 'பிஜி' இன்றும் காமன்வெல்த் உறுப்பு நாடு தான். காமன்வெல்த் மாநாடு, காமன்வெல்த் விளையாட்டில் மட்டும், 'பிஜி' பங்கேற்க முடியாது.
*வங்கதேசத்தை காமன்வெல்த் உறுப்பு நாடாக சேர்த்துக் கொண்டதற்கு, பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து, ஜனவரி, 30, 1972ல் காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலகியது. பின், ஆகஸ்ட், 2, 1989ல் காமன்வெல்த் அமைப்பில் பாகிஸ்தான் சேர்ந்து கொண்டது.

இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்தால், அது காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது.டில்லிக்கு பெருமை சேர்த்த, காமன்வெல்த் விளையாட்டு போட்டி, 2010ல் டில்லியில் நடைபெற்றது. 2014ல் ஸ்காட்லாந்திலும், 2018 ஆஸ்திரேலியாவிலும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். இதில் இலங்கை பதக்க வேட்டை நடத்த முடியாது. அவ்வளவு தான்.எந்த காரணத்திற்காக பல நாடுகள் காமன்வெல்த் அமைப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது அல்லது நீக்கம் செய்யப்பட்டது என்று பார்த்தால், ஆட்சி தான் காரணம் என்று புரியும். ஆனால், இனப்படுகொலை செய்த இலங்கை, இன்னும் காமன்வெல்த் அமைப்பில் தொடர காரணம். அதற்கு பின்னால் சீனா என்ற பெரிய நாடு உள்ளது.கச்சத் தீவை தாரை வார்த்த பின், இதுவரை, 600 இந்திய மீனவர்கள் தான் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். புத்தரை விட காந்தி பொறுமையுடையவர் என்பதை தான், இது காட்டுகிறது.'கிழக்கு பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும். இல்லையேல் மேற்கு வங்காளத்தின் போலீசை அனுப்புவேன்' என்று அன்று, சித்தார்த்த சங்கர் ரே சொன்னது போல், வலுவான குரல் தமிழக தலைவர்களிடமிருந்து வர வேண்டும்.தமிழக பிரதிநிதிகள், உலக தலைவர்களை சந்தித்து, ஈழ தமிழர் பிரச்னை பற்றி எடுத்துக்கூற வேண்டும். அதற்கான ஓர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.இல்லையேல், பல தீர்மானங்கள் போல், இதுவும் காகிதமாகத்தான் உறங்கப் போகிறது.தீர்மானத்தால் பலன் இலங்கை தமிழனுக்கா, இல்லை 2014 தேர்தலை சந்திக்கும் தமிழக தலைவர்களுக்கா என்பதை காண, காத்திருக்க வேண்டும்.
asussusi@gmail.com

-எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி-வழக்கறிஞர்

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X