பிசையும் மண்ணில் இசைஐ.நா.,வில் இசைத்த மானாமதுரை கடம்| Dinamalar

பிசையும் மண்ணில் இசைஐ.நா.,வில் இசைத்த மானாமதுரை கடம்

Added : நவ 04, 2013 | |
மானாமதுரை:மரம் அசைந்தால் ஓசை வரும், மண்ணை பிசைந்தால் இசை வருமா... வருமே, நம்ம மானாமதுரையில். ஆம்; இங்கு தயாராகும், கர்நாடக இசைக்கருவி கடத்திலிருந்து எழும் இசைக்கு நிகர் வேறில்லை. கடம் வித்வான் "விக்கு' விநாயக்ராம் மூலம் ஐ.நா., சபையில் இசைத்து,நம் இந்திய மண்ணுக்கு பெருமை சேர்த்தது மானாமதுரை கடம் தானே. கடம் மூலம் தடம் பதித்த மானாமதுரை, இசை உலகில், இ(வ)டம் பிடிக்க இது ஒன்று
பிசையும் மண்ணில் இசைஐ.நா.,வில் இசைத்த மானாமதுரை கடம்

மானாமதுரை:மரம் அசைந்தால் ஓசை வரும், மண்ணை பிசைந்தால் இசை வருமா... வருமே, நம்ம மானாமதுரையில். ஆம்; இங்கு தயாராகும், கர்நாடக இசைக்கருவி கடத்திலிருந்து எழும் இசைக்கு நிகர் வேறில்லை.

கடம் வித்வான் "விக்கு' விநாயக்ராம் மூலம் ஐ.நா., சபையில் இசைத்து,நம் இந்திய மண்ணுக்கு பெருமை சேர்த்தது மானாமதுரை கடம் தானே. கடம் மூலம் தடம் பதித்த மானாமதுரை, இசை உலகில், இ(வ)டம் பிடிக்க இது ஒன்று போதுமே. மண்ணால் ஆன இசைக்கருவிகளே முதலில் தோன்றியதாக வரலாறு உண்டு. பானை தாளம், வில்லடி பானை, கதைப்பானை, கடம் என ஆதிதாளம் அனைத்தும் மண்ணிலிருந்தே துவங்கி, தோல் கருவிகளாக மத்தளம், மேளம், மிருதங்கம், தபேலா மூலம் தாளம் உருவானதாக இசை உலகம் சொல்கிறது. சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற "குடமுழவு' எனும் இசைக்கருவியே நாளடைவில் மருவி "கடம்' ஆனதாகவும் இசைத்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஆதியில் பக்க வாத்தியமாக இருந்த கடம், வித்வான்களின் இசை முயற்சியால், தனித்து இசைக்கும் பக்கா வாத்தியமாக உருவெடுத்துள்ளது.


கடத்தில் கை பட்டால் இசை வருவதுபோல், மண்ணை பிசையும்போதே இசை ந(ல)யத்தோடு கடம் தயாரிப்பதே மானாமதுரையின் சிறப்பு. வைகை ஆற்றங்கரையோரம் மானாமதுரை குலாலர் தெருவில் மண்பாண்டங்கள் தயாரிப்பில் பல தலைமுறை குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். "கஞ்சிக்கலயம் முதல் கலையம்சம் பொருந்திய கடம்' வரை தயாரிப்பது மற்றொரு சிறப்பு. ஆனால், இசைக்கருவியான கடத்தை ஒரு குடும்பத்தினர் மட்டுமே பரம்பரையாக தயாரிக்கின்றனர்.


"நிலத்தில்' கிடைக்கும் களிமண்ணோடு பல்வகை மண் கலந்து, வெண்கல நாதத்திற்கு உலோகம் கலந்து, "நீர்' சேர்த்து முதல் நாள் ஊற வைக்கின்றனர். அடுத்த நாள் மண் நொதித்தவுடன், நடராஜர் நடனமாடுவதுபோல் காலால் மிதித்து குழைத்து, பிசைந்த மண்ணை பிடித்து இஞ்ச வைக்கின்றனர். அடுத்து சக்கரத்தில் வைத்து வழக்கம்போல்,பானையாகத்தான் தயாரிக்கின்றனர். அந்த பானையை பக்குவமாய் மரச்சட்டத்தில் தட்டித் தட்டியே, மண்ணை இறுகச்செய்து, தகடுகளை நெளிவு எடுப்பதுபோல் 2 ஆயிரம் முறைக்குமேல் தட்டிக்கொடுத்தே நெளிவுசுளிவின்றி சீராக்கி உருவம் கொடுக்கின்றனர். பின் நிழலில் "காற்றில்' காயவைக்கின்றனர். 15 நாட்களுக்குப்பிறகு சூளையில் வைத்து "நெருப்பில்' சுடுவதிலும் ஸ்ருதி சுத்தமாக தீ எரித்து, கடத்தை மீட்டு எடுக்கின்றனர். கடத்தில் வெற்றிடமாக ஆகாயம் உள்ளது. இப்படி, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களின் கலவையாக "கடம்' இருப்பதால் தான், மனதை பிசையும் இசை பிறக்கிறது.


மானாமதுரை பகுதி செய்களத்தூர், உடைகுளம், சுந்தரநடப்பு, நத்தபுரக்கி, பணிக்கனேந்தல் கிராம கண்மாய் களிமண், பல வகை மண்ணில் தயாராகும் கடம், எடை குறைவாகவும், ஸ்ருதி சுத்தமாக இருப்பதால், கர்நாடக இசை வித்வான்கள் விரும்பி வருகின்றனர். இசைஞானி முதல் இசைப்புயல் குழுவில் இடம் பெற்ற "விக்கு' விநாயக்ராம், பெண் கடம் வித்வான் சுகன்யா ராம்கோபால் (தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் கொள்ளுப்பேத்தி), கடம் வித்வான் கதிர்வேல், பல மாநில வித்வான்கள் மானாமதுரையை தேடி வருகின்றனர். பல மாநில வானொலி நிலையங்கள், இசை கல்லூரிகளில் மானாமதுரை கடம் உள்ளது. கடல் கடந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, நெதர்லாந்து என வெளிநாடுகளிலும் நமது தடம் பதித்துள்ளது.


நான்காம் தலைமுறை கடம் தயாரிப்பாளர் ரமேஷ் கூறுகையில், ""பல தலைமுறையாக, ஸ்ருதி சுத்தமாக கடம் தயாரிக்கிறோம். இசைக்கலைஞர்களை பாராட்டி விருது வழங்கப்படுகிறது. இசைக்கருவியை உருவாக்கும் எனக்கு சங்கீத சபா சார்பில் பல விருதுகள் வழங்கப்பட்டன. அரசும் எங்களை கவுரவிக்கவேண்டும்,'' என்றார். மானாமதுரை மண்பாண்டத்திற்கு மட்டுமின்றி, மனதை வசமாக்கும் இசைக்கருவியான கடம் மூலம் நம் மண்ணின் பெருமையை உலகுக்கு இசைக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X