ராமேஸ்வரம்: தனுஷ்கோடி வந்த, சட்டசபை மதிப்பீட்டு குழுவில் இடம் பெற்றிருந்த, ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., தங்க தமிழ்செல்வன், டீ கடையில் பஜ்ஜி சுட்டு கொடுக்க, பிற எம்.எல்.ஏ.,க்கள் ருசித்து சாப்பிட்டனர். தமிழக சட்டசபை மதிப்பீட்டு குழு தலைவர், பாப்பா சுந்தரம் தலைமையில், ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள், கடந்த, 4ம் தேதி, ராமேஸ்வரம் வந்தனர். நேற்று காலை, ராமேஸ்வரம் அரசு பள்ளி, மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். பின், 1964ல், புயலில் சேதமடைந்த தனுஷ்கோடி சர்ச், தபால் அலுவலகம், ரயில் நிலையத்தை, பார்த்து ரசித்தனர். பின், அங்குள்ள, டீ கடையை பார்த்தவுடன், "டீ குடிப்போம் வாங்க' என ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., தங்க தமிழ்செல்வன் அழைக்க, மற்ற எம்.எல்.ஏ.,க்களும் பின்தொடர்ந்தனர். அங்கு பஜ்ஜி சுட்டு கொண்டிருந்த, டீ கடைக்காரரிடம், கரண்டியை வாங்கிய ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., பஜ்ஜிகளை கருகாமல் சுட்டு எடுத்தார். பஜ்ஜிகளை ருசித்த எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள், "பேஷ்... பேஷ்...' எனக்கூறி, டீயும் குடித்தனர். கலகலப்பாக இருந்த அவர்களை பார்த்த மீனவர்கள், "ஆய்வு பணிக்கு வந்தார்களா?, சுற்றுலா வந்தார்களா?' என, முணுமுணுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE