அன்பும் அரவணைப்பும் வேலைவாய்பபுமே உண்மையான தேவைகள்

Added : நவ 07, 2013 | கருத்துகள் (7) | |
Advertisement
மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை அன்பும், சமுதாயத்தின் அரவணைப்பும், அரசாங்கத்தின் வேலை வாய்ப்பும்தான் என்கிறார் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே அமைதி குடிகொண்டுள்ள ஆய்க்குடி கிராமத்தில் அமைந்துள்ள அமர் சேவா சங்கத்தின் தலைவர்ஆய்க்குடி ராமகிருஷ்ணன்.இவர் நான்காம் வருட பொறியாளர் படிப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது கடற்படை அதிகாரிக்கான வேலையில் ஈர்ப்பு
அன்பும் அரவணைப்பும் வேலைவாய்பபுமே உண்மையான தேவைகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை அன்பும், சமுதாயத்தின் அரவணைப்பும், அரசாங்கத்தின் வேலை வாய்ப்பும்தான் என்கிறார் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே அமைதி குடிகொண்டுள்ள ஆய்க்குடி கிராமத்தில் அமைந்துள்ள அமர் சேவா சங்கத்தின் தலைவர்ஆய்க்குடி ராமகிருஷ்ணன்.
இவர் நான்காம் வருட பொறியாளர் படிப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது கடற்படை அதிகாரிக்கான வேலையில் ஈர்ப்பு ஏற்பட்டு அங்கு சென்றார். படிப்படியாக அனைத்து தேர்வுகளையும் முடித்தவர் கடைசியாக உடற்தகுதி தேர்வின்போது ஏற்பட்ட விபத்தில் முதுகுதண்டு வடம் பாதிக்கப்பட்டு பெங்களூரு மற்றும் புனேயில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
கழுத்திற்கு கீழ் செயல்படாத உறுப்புகளை வைத்துக்கொண்டு இனி எதற்கு இந்த வாழ்வு என்று தன் கனவுகள் நொறுங்கிப்போன நிலையில் இருந்தவரை இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அமர்ஜித் என்பவர்தான் இறைவன் படைப்பில் எல்லாவற்றுக்கும் ஒரு அர்த்தம் உண்டு உனக்கு இந்த நிலை ஏற்பட்டது கூட ஏதோ ஒரு சாதனை புரிவதற்குதான் என்று நம்பிக்கை விதைகளை மனதில் விதைத்தார்.
அந்த நம்பிக்கையுடன் தன் சொந்த ஊரான ஆய்க்குடிக்கு திரும்பினாலும் ஆரம்பத்தில் எதுவும் பிடிபடவில்லை. இவரை பராமரிக்கவும் பார்த்துக்கொள்ளவும் பலரது உதவி தேவைப்பட்டது. ஒரு நாளைக்கு ஏழுமுறை குளித்தால்தான் உடல் உஷ்ணம் குறையும் என்ற நிலையில் என் தந்தையார் ரோட்டில் போய் நின்று கொண்டு போவோர் வருவோரை எல்லாம் துணைக்கு அழைத்து வந்து என்னை குளிப்பாட்டியது உண்டு.
இந்த நிலையில் நான் எதற்கு உபயோகம் ஆவேன் என்று என்னையே கேட்ட போது நான் படித்த படிப்புதான் என் கண்முன் வந்தது. என்னை இந்த நிலையிலும் நேசித்து பாசம் காட்டிய ஆய்க்குடி கிராம குழந்தைகளுக்கு காலை மற்றும் மாலை வேளையில் பாடம் நடத்தினேன், அதையே விரிவு படுத்தி ஒரு கீற்றுக்கொட்டகையில் ஒரே ஒரு டீச்சருடன் கடந்த 1981ம் வருடம் துவங்கப்பட்டதுதான் அமர்சேவா சங்கம். எனக்குள் நம்பிக்கை விதை விதைத்த மருத்துவர் அமர் பெயரையே சேவா நிறுவனத்திற்கு வைத்தேன்.
அதன்பிறகு மாற்றுத் திறனாளி என்ற முறையில் மாற்றுத் திறனாளிகளின் தேவை என்ன என்பதை அறிந்து அதை களைவதற்காக கடுமையாக பாடுபட்டேன்.ஒரு ரப்பர் பந்து போல என்னை சுருட்டி எடுத்துக்கொண்டு ரயிலிலும், பஸ்சிலும், காரிலும் கொண்டு செல்வார்கள் நானும் சலிக்காமல் பல ஊர்களுக்ககு பயணம் மேற்கொண்டு சங்க வளர்ச்சிக்கான செயல்களில் இறங்கினேன்.
நல்ல பெற்றோர்கள், நல்ல ஊடக நண்பர்கள், நல்ல மக்கள், நல்ல நன்கொடையாளர்கள் என்று என்னைச் சுற்றி நல்ல விஷயங்களாகவே இருக்க அமர்சேவா சங்கத்தில் பல நல்ல காரியங்கள் மள, மளவென நடந்தேறியது.
இன்று 32 ஏக்கரில் அமர்சேவா சங்கம் விரிந்து பரந்துள்ளது.
உள்ளே ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு தொழில்கல்வி கற்றுத் தரப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் பொம்மைகள், நோட்டு புத்தகங்கள், யூனிபார்ம்கள் தைத்தும், தயாரித்தும் கொடுத்து சம்பாதித்து வருகின்றனர்.
சிறு குழந்தைகளுக்கு உடல் ஊனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது உடனே சரிப்படுத்தும் மையம் உள்ளது. ஆசியாவிலேயே முதுகுதண்டு வடம் சிகிச்சை செய்யும் நான்காவது மையம் இங்குதான் உள்ளது.
எனது தொண்டிற்கு தோள் கொடுக்கும் விதத்தில் என்னைப்போலவே கழுத்திற்கு கீழ் செயல்பாடு இல்லாத எஸ்.சங்கரராமன் செயலாளராக வந்தபின் சங்கத்தின் பணிகள் இன்னும் வேகம் பிடித்துள்ளது.
கள்ளி முளைத்து கிடந்த காட்டில் இன்று கல்வி முளைத்து காணப்படுகிறது என்று ஊடகங்களால் ஊட்டி வளர்க்க்கப்பட்டுவரும் அமர்சேவா சங்கம் இன்னும் போகவேண்டிய தூரமும் எட்ட வேண்டிய எல்லைகளும் நிறையவே இருக்கின்றது.
முதுகுதண்டு வட பாதிப்பு மையத்தை விரிவு படுத்த வேண்டும், சிறு வயதிலேயே குழந்தைகளின் மன.உடல் ஊனம் கண்டறியப்பட்டு அவை களையப்பட தேவையான கருவிகள் நிறைய வாங்கப்பட வேண்டும். தாய், தந்தையற்ற உடல் ஊனமுற்றவர்களின் வாழ்நாள் முழுவதற்குமான காப்பகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை அன்பும், சமுதாயத்தின் அரவணைப்பும், அரசாங்கத்தின் வேலை வாய்ப்பும்தான். வெளிநாடுகளில் ஒரு சதவீத வேலைவாய்ப்பு என்பதை கட்டாயமாக அமல்படுத்துகின்றனர் அதே போல இங்கேயும் அமல்படுத்தினால் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்குமே வேலை கிடைத்து விடும். அதற்கான முயற்சிகளில் நானும் செயலாளர் சங்கரராமனும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். உங்களைப் போன்ற நல்லோர் ஆதரவால் எங்கள் கனவுகள் அனைத்தும் மெய்ப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறி முடித்தார் ராமகிருஷ்ணன்.
நாட்டில் எத்தனையோ தொண்டு நிறுவனங்களை பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். மன, உடல் வளர்ச்சி குறைந்த ஆதரவற்ற குழந்தைகளை காண்பித்து தொண்டு நிறுவனத்தை ஆரம்பிப்பவர்கள் ஆரம்பித்து ஐந்து வருடங்களில் சம்பந்தபட்ட குழந்தைகள் வளர்ச்சியை இரண்டாது இடத்திற்கு தள்ளிவிட்டு தங்களது வளர்ச்சியில் மட்டும் அக்கறை காண்பித்து ஹைடெக்காக காணப்படுவார்கள்.
ஆனால் அமர் சேவா சங்கம் அப்படி இல்லாமல் ஆரம்பத்தில் இருந்த அதே எளிமை கோலத்துடன் காணப்படுகிறது. ஒவ்வொரு பைசாவையும் பார்த்து பார்த்து யோசித்து யோசித்து செலவு செய்கின்றனர். கிட்டத்தட்ட 32 வருடமாகியும் தலைவர் ராமகிருஷ்ணன் ஆடம்பரத்தின் அரிச்சுவடி கூட தன் மீது படரவிடாமல் எளிமை திருக்கோலத்தில் காணப்படுகிறார். என்னால் ரொம்ப நேரம் உட்கார்ந்து பேச முடியாது கொஞ்சம் படுத்துண்டு பேசலாமா? என பணிவுடன் அனுமதி கேட்கிறார். குற்றாலத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில்தான் அமர் சேவா சங்கம் இருக்கிறது அங்கே வர்ரவங்க ஒரு எட்டு இங்கேயும் வந்துட்டு போங்க எங்க குழந்தைகள் ரொம்ப சந்தோஷப்படும்.நீங்களும் இங்கே அடிக்கடி வந்துட்ட போங்க நாங்க சந்தோஷப்படுவோம் என்கிறார்.
அமர் சேவா சங்க விருந்தினர் விடுதியில் இரண்டு நாள் தங்கியிருந்து அவர்களுடன் வாழ்ந்து பார்த்த போது வாழ்க்கையின் பல அர்த்தங்களை உணர முடிந்தது. அதை அங்குள்ள குழந்தைகளே உணர்த்தினர். அவர்களிடம் கவலை இல்லை, கண்ணீர் இல்லை, பசி இல்லை, போட்டி இல்லை, பொறாமை இல்லை மாறாக நம்மால் முடியும் என்ற மலையளவு நம்பிக்கை இருக்கிறது குறையாத அன்பு இருக்கிறது குன்றாத பாசம் இருக்கிறது இந்த நாட்டிற்கும் பிறந்த வீட்டிற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் இருக்கிறது. இத்தனைக்கும் காரணம் கடவுள் போல அவர்களுக்காக ராமகிருஷ்ணன் இருப்பதினால்.
அமர்சேவா சங்கத்தைவிட்டு திரும்பி வரும் போது யாரோ எப்போதோ எழுதியதுதான் நினைவிற்கு வந்தது அது,
ஞானங்கள் பல ஊனமாகி நாட்டில் இருக்கும் நிலையில் பல ஊனங்கள் இங்கே ஞானங்களாக இருக்கின்றனர் என்பதுதான்.
அமர்சேவா சங்க தலைவர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் பேசுவற்கான எண்: 9994385170.
- எல்.முருகராஜ்


Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prabhu kumarasamy - Chennai,இந்தியா
23-டிச-201321:55:10 IST Report Abuse
prabhu kumarasamy மனித நேயம் கடவுளின் பிரதிபலிப்பு .... என் வாழ் நாளில் சந்திக்க விரும்பும் மனிதர் ஆய்க்குடி ராமகிருஷ்ணன்
Rate this:
Cancel
k.ramadas - al ain,ஐக்கிய அரபு நாடுகள்
10-டிச-201317:14:28 IST Report Abuse
k.ramadas தலை வணங்குகின்றேன் நண்பரே . உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel
p.raj-chennai - chennai,இந்தியா
13-நவ-201306:16:33 IST Report Abuse
p.raj-chennai நானும் ஆய்க்குடி ஊரை சார்ந்தவன் தான். உங்களால் எங்கள் ஆய்க்குடி கிராமம் பெருமை கொண்டது . நீடூடி வாழ வாழ்த்தும் ப. ராஜேந்திரன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X