அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாலு வரி "நறுக்'

Added : நவ 09, 2013
Advertisement

வன்னியர் நல வாரியம் செயல்படுமா?
வன்னியர் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக, அச்சமுதாயத்தின் முன்னோர்கள், தங்கள் சொததுக்களை உயிலாக எழுதி, அறக்கட்டளைகளை உருவாக்கியுள்ளனர். இவற்றை ஒருங்கிணைத்து, வன்னியர் பொதுச்சொத்து நலவாரியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என, அரசுக்கு உத்தரவிட வேண்டி, ஐகோர்ட்டில் வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் பலனாக, 76 அறக்கட்டளைகளை ஒருங்கிணைத்து, வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் உருவாக்கப்பட்டது. இவ்வாரியத்திற்கான இணையதளத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். ஆனால், அந்த வாரியம் முழுமையான செயல்பாட்டுக்கு வராமல், முடங்கி கிடக்கிறது.

தி.மு.க., செயலர் மீது 30 வழக்குகள்

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க.,வில் மாவட்டச்செயலர் பெரியசாமிக்கும், எம்.பி., ஜெயதுரைக்கும் ஏழாம் பொருத்தம். உட்கட்சி தேர்தலில், கட்சி பதவிகளை பிடிக்க, இரு தரப்பினரின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் போட்டி உருவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஒன்றியம், ஆறுமுகநேரி பேரூர் தி.மு.க., செயலர் சுரேஷ் மீது, அம்மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் மட்டும், பல்வேறு பிரிவுகளில், 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரை மீண்டும் பதவிக்கு கொண்டு வர, பெரியசாமி தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். சுரேஷ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் நகல், வழக்கு எண்கள் கொண்ட புகார் மனு, கட்சியின் தலைமைக்கு, மாவட்ட உடன்பிறப்புகள் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்., 'டிக்கெட்'க்கு பால் தினகரன் பரிந்துரை

காங்கிரஸ் கட்சியில் எம்.பி., - எம்.எல்.ஏ., தேர்தலில், சீட்டுகளை பெற வேண்டும் என்றால், கோஷ்டி தலைவர்களின் ஆதரவும், டில்லி தலைவர்களின் ஆசியும் இருக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த என்.டி.எஸ்.சார்லஸ், ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றியுள்ளார். தேர்தலுக்கு தேர்தல், கஜினி முகமது போல தொடர்ந்து முயற்சித்தும், அவருக்கு சீட்டு கிடைக்கவில்லை, இனி ஆண்டவர் தான் கருணை காட்ட வேண்டும் என, அவர் மீது பாரத்தை போட்டுள்ளார். சார்லஸ் கிறிஸ்துவ நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலும், திருநெல்வேலி லோக்சபா தொகுதியில், கிறிஸ்துவ நாடார் சமுதாய ஓட்டுக்கள் கணிசமாக உள்ளதாலும், அவருக்கு 'சீட்' வழங்க வேண்டும் என, காங்கிரஸ் துணை தலைவர் ராகுலுக்கு, கிறிஸ்துவ மத போதகர் பால் தினகரன் பரிந்துரை கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

'ஆட்டம்' கண்டுள்ள முக்கிய பதவிகள்

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.,வில் சமீபகாலமாக கோஷ்டி பூசல் உச்சத்தை தொட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் பலர், கட்சி தலைமைக்கு தொடர்ந்து, புகார்களை அனுப்பி வந்தனர். இதன் விளைவாக, கட்சியின் மாவட்ட செயலர் உட்பட அனைத்து சார்பு அமைப்பு நிர்வாகிகளை ஒட்டு மொத்தமாக, சென்னைக்கு வரவழைத்து, நேரடி விசாரணை நடத்த, முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, கட்சி நிர்வாக பொறுப்புகளை கவனித்து வரும், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்திலிங்கம் அடங்கிய 'நால்வர் அணியினர் நேரடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், மாவட்ட செயலருக்கு எதிராக, கட்சியின் சார்பு அமைப்பு நிர்வாகிகள் ஒருமித்த குரலில், பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளனர். விசாரணையில், 'கட்சி தலைமை நீலகிரி மாவட்ட செயல்பாடுகள் மீது அதிருப்தி அடைந்துள்ளது' என, கூறப்படுகிறது. இதனால், விரைவில், நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.,வில் மாற்றங்கள் ஏற்படலாம், என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கோஷ்டி பூசலால் தே.மு.தி.க., தலைமை அதிர்ச்சி

தே.மு.தி.க.,வில், தற்போது, லோக்சபா தேர்தல் நிதி வசூல், மாநாடு ஏற்பாடு குறித்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதற்காக, விஜயகாந்த் உத்தரவின் பேரில், மாவட்ட வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட செயலர் செயல்வீரர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்கின்றனர்; மாநில நிர்வாகிகள் தலைமை ஏற்று நடத்தி வருகின்றனர். செயல்வீரர் கூட்டங்கள் மூலம், பல மாவட்டங்களில், கட்சியில் கோஷ்டி பூசல் அதிகரித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஜயகாந்திற்கு நெருக்கமான மாநில நிர்வாகிகள், மூவர் தான், இதற்கு காரணம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இவர்கள், மாவட்டம், வட்டம், நகரம், பேரூர், ஒன்றிய செயலர்கள் உள்ளிட்ட பதவி வழங்க கடைபிடித்த நடைமுறையே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் நேரத்தில், கட்சியில் கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது, அக்கட்சி தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாவட்ட வாரியாக, கோஷ்டி அரசியலில் ஈடுபடுபவர்களை, கட்சி தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சமரசம் செய்ய ரகசிய ஏற்பாடு நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X