புதுடில்லி: அமர் சிங், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட, வி.ஐ.பி.,க்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு, 'பத்ம' விருதுகள் கொடுக்கும்படி, மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்ததாக, தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு துறைகளில், சாதனை, சேவைகள் செய்துள்ளவர்களை, கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும், மத்திய அரசு சார்பில், பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான, பத்ம விருதுகள், ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டன. பத்ம விபூஷண் விருது, நான்கு பேருக்கும், பத்ம பூஷண் விருது, 15 பேருக்கும், பத்மஸ்ரீ விருது, 80 பேருக்கும் வழங்கப்பட்டன. ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சம்பந்தப்பட்டோருக்கு, இந்த விருதுகளை வழங்கினார். இந்நிலையில், பத்ம விருதுகள் வழங்குவது தொடர்பாக, வி.ஐ.பி.,க்கள், மத்திய அரசுக்கு, ஏதாவது பரிந்துரை செய்தனரா என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு, மத்திய அரசு அளித்துள்ள பதில்:
இந்தாண்டு, பத்ம விருதுக்காக, 1,300 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில், 25க்கும் மேற்பட்ட பரிந்துரைகள், வி.ஐ.பி.,க்களிடம் இருந்து வந்திருந்தன. தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு, விருது வழங்கும்படி, வி.ஐ.பி.,க்கள், பரிந்துரை செய்திருந்தனர். இதன்படி, காங்., பொருளாளர் மோதிலால் வோரா, காங்கிரஸ் எம்.பி., சுப்பிராமி ரெட்டி, இந்துஸ்தானி இசைக் கலைஞர் பண்டிட் ஜஸ்ராஜ் ஆகியோர், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு விருது வழங்கும்படி, பரிந்துரை செய்திருந்தனர். பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், தன் சகோதரி உஷாவுக்கு, விருது வழங்கும்படி, பரிந்துரைத்திருந்தார். 'சரோட்' என்ற இசைக் கருவியை இசைப்பதில் பிரபலமான, இசைக் கலைஞர், உஸ்தாத் அஜ்மல் அலி கான், தன் மகன்கள், அமான், அயான் ஆகியோருக்கு பரிந்துரை செய்திருந்தார். சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் அமர் சிங், நடிகையும், லோக்சபா எம்.பி.,யுமான, ஜெயப்பிரதாவுக்கு, பரிந்துரை செய்திருந்தார். இவ்வாறு, அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.