ஜனநாயகமும் வளர்ச்சியும்

Added : நவ 11, 2013 | கருத்துகள் (1) | |
Advertisement
வளர்ந்து வரும் நாடுகளின் மத்தியில் கூட இந்தியா ஒரு அதிதீவிர ஏழை நாடாகவே உள்ளது. தனிநபர் வருமானத் தரப்பட்டியலில் உலகின் 137வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் வருடாந்திர தனிநபர் வருமானம் சுமார் 1200 அமெரிக்க டாலர்கள் (ரூ.60,000) மட்டுமே. இதை, 95வது இடத்தில் உள்ள சீனாவின் 4300 டாலர்கள் (ரூ.2,15,000) வருடாந்திர தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆனால் 1978ம் ஆண்டுவாக்கில், சீனா தன்
ஜனநாயகமும் வளர்ச்சியும்

வளர்ந்து வரும் நாடுகளின் மத்தியில் கூட இந்தியா ஒரு அதிதீவிர ஏழை நாடாகவே உள்ளது. தனிநபர் வருமானத் தரப்பட்டியலில் உலகின் 137வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் வருடாந்திர தனிநபர் வருமானம் சுமார் 1200 அமெரிக்க டாலர்கள் (ரூ.60,000) மட்டுமே. இதை, 95வது இடத்தில் உள்ள சீனாவின் 4300 டாலர்கள் (ரூ.2,15,000) வருடாந்திர தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆனால் 1978ம் ஆண்டுவாக்கில், சீனா தன் பொருளாதாரத்தைத் தாராளமயமாக்க ஆரம்பித்த காலத்தில் இந்தியா சீனாவை விட பணக்கார நாடாக இருந்தது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று தொடர்ந்து நினைவூட்டப்படுகிறது. அது ஒன்றுதான் இந்தியா கோரும் பெரிய சாதனையாகத் தெரிகிறது. ஜனநாயகம் என்ற சின்னம், இந்தியா முன்னேறத் தவறியதற்கு எதிராகச் சொல்லப்படும் அனைத்து விமரிசனங்களையும் திசைதிருப்புவதற்கான கேடயமாகப் பயன்படுத்தப்படுவதுதான் இதிலுள்ள முரண்பாடு.ஜனநாயகத்தின் நிலை:

ஜனநாயகம் முன்னேற்றத்துக்குத் துணைபோக் கூடியதா அல்லது இடையூறானதா? என்ற கேள்வி முக்கியமானது. பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஜனநாயகத்தை மட்டுமே சார்ந்தல்ல. (ஜனநாயகம் இல்லாமல் முன்னேற்றத்தையும், முன்னேற்றம் இல்லாமல் ஜனநாயகத்தையும்) அதேசமய, ஒன்று இல்லாமல் மற்றொன்றைக் கொண்டிருப்பது சாத்தியமானது. அதற்கான உதாரணங்கள் உலகம் முழுக்க உள்ளன. ஆனால், முழுமையான சுதந்தரம் இல்லாத நிலை பொருளாதார ரீதியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியன தோல்வியடைவதை உறுதி செய்கிறது. இதற்கும் அனுபவரீதியான உதாரணங்கள் நிறைய உள்ளன.


சிங்கப்பூரின் பிரதமராக 1959 முதல் 1990 வரை இருந்த லீ குவான் யூ, 2006ம் ஆண்டு தன்னுடைய உரையில், '...ஜனநாயகம் என்ற முறை செயலற்ற தன்மைக்கு ஒரு சமாதானமாக (சாக்குபோக்கு) ஆகிவிடக்கூடாது. சர்வாதிகார அரசாங்கங்களைக் கொண்ட பொருளாதாரங்கள் தோற்றுப் போன உதாரணங்கள் நிறைய உண்டு. உயரிய பொருளாதாரச் சாதனைகள் படைத்த ஜனநாயக அரசாங்கங்களுக்கும் அதே அளவு உதாரணங்கள் உண்டு. அது ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா என்ற பாகுபாடு இல்லாமல், பொருளாதாரம் வளர்வதற்கும், அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தேவையானத் திட்டங்களை ஒருமித்த கருத்தாக உருவாக்கி, அடிப்படையான அந்தத் திட்டங்களை பெரும் கசிவுகள் இல்லாமல், நிலையாக, ஒரு நாட்டின் அரசியல் அமைப்பால் அமுல்படுத்த முடியுமா என்பதுதான் இங்கு உண்மையில் கருத்தில் கொள்ளவேண்டிய விஷயம். இந்தியாவின் அரசியல், ஊடகம், கல்வி மற்றும் கொள்கை மையங்கள் ஆகிய துறைகளில் இருக்கும் முன்னேறம் அடைந்த பகுதியினர் விஷயங்களை மறுவரையறை செய்து அரசியல் விவாதத்தைச் சீரமைக்க முடியும். உதாரணத்துக்கு, இன்னும் மிகச் சிறப்பான முறையில் அரசாங்க சேவைகள் வழங்கப்படுவதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.' என்கிறார்.முரண்பாடான அணுகுமுறை:

இந்தியத் தலைவர்களும், திட்டவியலாளர்களும் மூளைக்கோளாறு கொண்ட முரண்பாடான அணுகுமுறையை மக்களிடம் காட்டுகின்றனர். நாட்டை யார் ஆள வேண்டும் என்ற நுணுக்கம் வாய்ந்த முடிவை எடுக்கக் கூடிய புத்திசாலிகளாக மக்கள் கருதப்பட்டாலும், தினசரி வாழ்க்கை முடிவுகளை எடுக்கத் தகுதியற்றவர்கள் என்ற முறையிலேயே அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றனர். எனவே, அன்றாட வாழ்க்கையின் பெரும்பாலான பொருளாதார மற்றும் சமூகவாழ் விஷயங்களுக்கு வல்லமையுள்ள அரசாங்கப் பொறுப்பில் இருப்பவர்களே முடிவுகளை எடுக்கின்றனர். பொருளாதார வாழ்க்கையின் பெரும்பாலான அங்கங்களையும் தங்களுடைய கட்டளையின் கீழ் செயல்படும்படியான உரிமம் கட்டுப்பாடு அனுமதி ராஜ்யத்தை அமைத்தனர்.


அந்த அதிகாரக் கட்டுப்பாட்டு அமைப்பு மக்கள் உருப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுத்து, அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளை நாடி நிற்கும் நிலைக்கு அவர்களைத் தள்ளுகிறது. இந்தியர்களுக்குப் பொருளாதார சுதந்தரம் குறைபாடாக உள்ளதாலேயே இந்தியா ஏழைமை நிறைந்ததாக உள்ளது. அரசாங்கக் கட்டுப்பாடு பொருளாதார வளர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது.ஊழலை வளர்க்கும் கட்டுப்பாடுகள்:

பொருளாதாரக் கட்டுப்பாடுகள் இரண்டு விஷயங்களைச் செய்கின்றன. முதலில், பொருளாதார நடவடிக்கைகளைக் குறைப்பதோடு, அதன் வளர்ச்சியையும் குறைக்கின்றன. இரண்டு, அவை 'பொருளாதார வாடகை நாட்டம்' (விதிமுறைகளைச் சாதகமாக வளைத்து அதிலிருந்து லாபம் சம்பாதிக்கும் நிலை) தோன்ற வழி வகுப்பதால், ஊழல்வாதிகள் சொந்த நலனுக்காக அரசாங்கத்தைக் கையகப்படுத்திக்கொள்வதற்கு அரசியல் அவர்களை ஈர்க்கிறது. பிறகு நல்ல ஆட்சிமுறை என்பது காற்றில் கரைந்து போய் 'வாடகை நாடும் தன்மை' மட்டும் அரசாங்கத்தின் ஒரே குறிக்கோளாக ஆகிறது.


கடந்த நூற்றாண்டின் மத்தியில் (1950களில்), இந்திய அரசியலில் இருந்த ஊழல் அளவு அப்போதே அதிகம் என்றாலும், 2010 காலகட்டத்தில் இருக்கும் ஊழல் நிலையோடு ஒப்பிடுகையில் அன்றைய அரசியல்வாதிகள் தன்னலமற்ற சமூக சேவகர்களாகத் தெரிகின்றனர்.மக்களின் போக்கு:

அதுவொரு கீழ்நோக்கிய சுழற்சி. பல ஆயிரம் கோடி ஊழல் என்ற தகவல்கள் ஆச்சரியத்தையோ அல்லது அதிர்ச்சியையோ ஏற்படுத்தும் சக்தியை எப்போதோ இழந்துவிட்டன. அரசாங்கத்தின் உயர்ந்த மட்டங்களில் சமூக விரோதிகள் இருப்பதை மக்கள் வெகு சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் அளவுக்குப் பழகிவிட்டனர். இன்னும் சொல்லப்போனால், பல ஆயிரம், பல லட்சம் கோடி ஊழல் பேரங்கள் தங்கள் நலனையே பாதிக்கின்றன என்பதையோ, கையாடல் செய்யப்படும் பொதுநிதி தங்கள் சட்டைப் பையில் இருந்தே எடுக்கப்படுகிறது என்பதையோ உணராதவர்களாகவே பெரும்பான்மையான மக்கள் உள்ளனர்.


இந்தியாவின் அரசாங்கங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சாமானிய மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு காரணத்தாலேயே ஜனநாயக அரசாங்கங்கள், சர்வாதிகாரங்களாகவும், மக்களுக்குச் சுதந்தரத்தை மறுப்பவையாகவும் இருக்க முடியாது என்று அர்த்தம் கிடையாது. ஒரு கொடுங்கோல் ஆட்சியில் அடக்கி வைக்கும் அதே அளவுக்கு ஜனநாயக ஆட்சியிலும் மக்களை அடக்கிவைக்க முடியும்.சுதந்திரமா? ஜனநாயகமா?:

சுதந்தரம், ஜனநாயகம் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும்போது சுதந்தரமே வெல்கிறது. ஏனெனில், சுதந்தரமே தனிமனிதன் வளர்வதற்கும் தழைத்தோங்குவதற்கும் அனுமதிக்கிறது. ஜனநாயகம் மக்களை ஆளும் முறையைப் பற்றியது, சுதந்தரமோ வாழ்வைப் பற்றியது. நமக்கு உத்தரவிடப்போகும் அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்க இருக்கும் உரிமையை விட நாம் விரும்பும்படி வாழவும், வேலை செய்யவும் கிடைக்கும் பொருளாதார மற்றும் தனிநபர் சுதந்தரங்கள் எந்நாளும் சிறந்தவை.


ஜனநாயகம் என்பது ஒரு அரசாங்க முறை. அது, ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான வழிமுறை மட்டுமே. நாட்டை ஆள்வதற்கு இருக்கும் பல்வேறு முறைகளில் அதுவும் ஒன்று. அந்த யோசனை, நடைமுறையில் எப்படி அமலாக்கப்படுகிறது என்பது அதில் ஈடுபடும் மக்கள், குறிப்பிட்ட சூழ்நிலைகள், வரலாற்றில் தற்செயலாக நடக்கும் சம்பவங்கள் ஆகியவற்றைச் சார்ந்தே அமைகிறது. ஜனநாயகம் என்ற கருத்தை நடைமுறைப்படுத்த முற்படும்போது அது தோல்வி அடைவதற்கும் வாய்ப்புகள் உண்டு.


அதில் ஒருவகையான தோல்வி, வாக்காளர்களுக்கு அவர்களுடைய வாக்குகளின் மீதுள்ள எதிர்பார்ப்புகளுடன் தொடர்புடையது. வாக்குகள் பயன்பாடுகள் குறித்த எதிர்பார்ப்புகள் ஒட்டுமொத்தமாகச் சேரும்போது, அது நல்ல அல்லது மோசமான முடிவுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும்.எது ஜனநாயகம்?:

ஜனநாயகம் என்பது வெறுமனே வாக்களிப்பதைப் பற்றியது மட்டுமல்ல. மாறாக, தகவலறிந்து தேர்வு செய்வதைப் பற்றியது. அரசியல் கட்சிகளைப் பற்றித் தாங்களாகத் தெரிந்துகொள்வது வாக்காளர்களுக்கு சற்றுச் சிரமமான செயல். மேலும், வாக்களிப்பதற்கு நேரமும் முயற்சியும் தேவை. தகவலறிந்து வாக்களிக்க முயற்சிசெய்யப் போவதில்லை என்று ஒரு வாக்காளர் நினைக்கும்போது, தான் ஒருவரின் வாக்கு தேர்தல் முடிவில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்ற முடிவுக்கு வருகிறார். இந்த அவநம்பிக்கையால், யாரும் எந்தக் கட்சி தங்கள் வாக்கைப் பெறத் தகுதியானது என்ற தகவலை அறிந்துகொள்ள முயற்சி மேற்கொள்வதில்லை.


ஜனநாயகம் என்ற அமைப்பு முதல்தரமான உலகில் மட்டுமே பிசிறில்லாமல் செயல்படக் கூடியது. ஆனால், சந்தைகளும் அவற்றின் தோல்விகளும் போல், ஜனநாயகத்தின் தோல்விகள் மோசமான முடிவுகளுக்கு இட்டுச் செல்கின்றன. அவை இந்தியா போன்ற பெரிய தேசத்தின் பல கோடி மக்களுக்குக் கொடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஜனநாயகத்தின் தோல்விகளை நேரடியாக எதிர்கொண்டு, அதைத் தீவிரமாகவும் உடனடியாகவும் சரிசெய்யும் வழிவகைகளை உருவாக்க வேண்டிய தருணம் இது.


'நாடுகள் அவற்றின் அருகதைக்கு ஏற்ற அரசாங்கங்களையே பெறுகின்றன' என்ற கூற்றிலும் ஓரளவு உண்மை உண்டு. இதற்கான வாதம் எளிதானது. மக்களே தங்கள் தலைவர்களைத் தேர்வு செய்பவர்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே, ஒரு ஜனநாயக நாட்டின் அரசாங்கத்தை உருவாக்குபவர்கள். ஒரு நாட்டின் மிக மோசமான ஆட்சிமுறை, நேரிடையாக, அதன் மக்களின் தரத்தையே பிரதிபலிக்கிறது.


( இதன் அடுத்த பகுதி 18/11/2013 வெளியாகும்)

இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-702-2.html

ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 09445901234 / 09445979797

நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.S.JAHUFER SADIK - Jeddah,சவுதி அரேபியா
21-நவ-201314:28:53 IST Report Abuse
S.S.JAHUFER SADIK அனைவரும் படிக்கும் படி எளிமையாக சிந்தனையை தூண்டியுள்ளார். நாம் தான் எல் கே ஜி முதல் நன்கொடை என்ற பெயரில் லஞ்சத்தை ஊக்குவிக்கிறோம் கல்வி விலை பொருளாகிவிட்டது. முடியாதவனின் பிள்ளையின் தலை விதி அதோகதி அரசாங்க பள்ளி. உருப்படுமா? பதிலுக்கு லட்சம் மாணவர்களில் ஒருவனை உதாரணம் காட்டுவீர்கள். முதலில் கல்வியை சுத்தமாக்குங்கள். ஓரளவு நாடு உருப்படும். அடுத்து பொது சிந்தனை கொண்ட கல்வியை உருவாக்கி இளம் வயது முதல் சுயநலமில்லாமல் நாட்டிற்கு தன்னை அற்பணிக்கும் ஒரு உயரிய என்னத்தை இளம் பிராயம் முதல் மக்களுக்கு ஏற்படுத்துங்கள். இத்துறை முதுகலை வரை தொடரச்செய்து அதில் தெரிந்தவர்களை நாட்டின் பிரதிநிதியாக்குங்கள். முடியாதா? என்ன? தற்போது இதில் வெற்றி உடனே எதிர்பார்க்கா விட்டாலும் நம் பேரப்பிள்ளைகளாவது நாம் காணும் கனவை அனுபவிப்பார்கள். நம்மை அடுத்துள்ள கேரள மாநிலத்தில் ஒரு அமைச்சரை தொடர்ந்து இருபது கார்கள் செல்லவில்லை? தவறு செய்தால் சரியோ தவறோ மக்களே துண்டை புடிக்கிறார்கள். தற்போதிய நமது முறையில் பல லட்சங்களை கொண்டு மருத்துவ துறையில் நுழையும் நம் வாரிசுகளிடம் எப்படி பொது சிந்தனையை எதிர்பார்க்க முடியும்? முயற்சி செய்தால் பலன் கிடைக்கும் யார் தொடங்குவது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X