தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை: முதல்வர் ஜெ., - Jayalalitha | TN Assembly meet begins | Dinamalar

தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை: முதல்வர் ஜெ.,

Updated : நவ 12, 2013 | Added : நவ 12, 2013 | கருத்துகள் (31) | |
சென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட யாரும் பங்கேற்கக்கூடாது என சட்டசபையில் அரசின் தீர்மானத்தை முன்மொழித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். மேலும் தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை எனவும் கூறினார்.காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா தரப்பில் பெயரளவில் கூட யாரும் பங்கேற்க கூடாது என்று தமிழக
தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை: முதல்வர் ஜெ.,

சென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட யாரும் பங்கேற்கக்கூடாது என சட்டசபையில் அரசின் தீர்மானத்தை முன்மொழித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். மேலும் தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை எனவும் கூறினார்.

காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா தரப்பில் பெயரளவில் கூட யாரும் பங்கேற்க கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இது குறித்து ஆலோசிக்க தமிழக சட்டசபை அவசர கூட்டம் துவங்கியது.

இந்த கூட்டத்தில் அரசின் தீர்மானத்தை தாக்கல் செய்த முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட யாரும் பங்கேற்கக்கூடாது. இந்தியாவிலிருந்து யாரும் பங்கேற்கக்கூடாது என சட்டசபை வலியுறுத்துகிறது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து 2011ல் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெயரளவில் கூட காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என ஏற்கனவே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க வேண்டும்.

மனவருத்தம்: தமிழர்களுக்கு சாதகமான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்பியிருப்பது தமிழரின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம்.மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு தன் வருத்தத்தை தெரிவிக்கிறது. இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பது மன வருத்தத்தை தருகிறது. தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்காத, உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மததிய அரசின் முடிவு மனவேதனையை தருகிறது . இலங்கைக்கு ஆயுதபேர உதவி அளித்ததற்கு பரிகாரமாக இந்தியாவிலிருந்து யாரும் பங்கேற்கக்கூடாது.

வழக்கமான முடிவு:காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காதது வழக்கமான முடிவாக இருக்கிறது. கடந்த 1993ம் ஆண்டு முதல் நடைபெற்ற 10 மாநாடுகளில் 5 ல் பிரதமர் பங்கேற்கவில்லை. மத்திய அரசின் முடிவை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். இலங்கையில் மாநாடு நடத்துவது போர்க்குற்றம் நடத்தியவர்களை பாதுகாப்பது போல் உள்ளது. மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் இலங்கையின் போர்க்குற்றத்தை அங்கீகரித்தது போலாகிவிடும். இலங்கையை அங்கீகரித்த பழி இந்தியாவுக்கு ஏற்படுவதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் முடிந்த நிலையில் தமிழர்களுக்கு எந்த உரிமையும் தரவில்லை. தமிழர்கள் பகுதியில் சிங்களவர்கள் வசிக்கின்றனர். தொடர்ந்து பல்வேறு இன்னல்களை இலங்கை தமிழர்கள் அனுபவித்து வருகின்றனர். போர்க்குற்றம் நடத்தியவர்கள் இனப்படுகொலை நடத்தியவர்கள் தண்டிக்கப்படவில்லை. இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார்.

முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசிய பின், தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

காங்கிரஸ் வெளிநடப்பு:இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். இந்த தீர்மானத்தின் மீது பேசிய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், பிரதமர் குறித்து தெரிவித்த கருத்தை நீக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். காங்கிரஸ் உறுப்பினர்கள் பேச பின்னர் வாய்ப்பு தரப்படும் என சபாநாயகர் தனபால் கூறினார். இதனை ஏற்காமல் காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

கிருஷ்ணசாமி வெளியேற்றம்:சட்டசபையில் தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசிய புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி, காமன்வெல்த் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி குழுவினர் பிரதமரை சந்தித்து பேச வேண்டும் என கூறினார். இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். பின்னர் கிருஷ்ணசாமியை சட்டசபையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

காங்., கருத்து: தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தான் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை. இலங்கை தமிழர்களின் நலன்களை பாதுகாக்கவே காமன்வெல்த் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதாகவும், மாநாட்டை புறக்கணித்தால் இலங்கை தமிழர்களை யார் பாதுகாப்பது என தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன் கேள்வி எழுப்பினார்.

ஜவாஹிருல்லா பேச்சு: சட்டசபையில் தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசிய மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா, மாநாட்டை இலங்கை நடத்துவதால் ராஜபக்சேவுக்கு வீட்டோ அதிகாரம் கிடைத்து விடும். தமிழர் பிரச்னையை காமன்வெல்த் மாநாட்டில் பேச முடியாமல் போய் விடும் என கூறினார்.

தி.மு.க., வரவேற்பு: தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த தீர்மானத் தி.மு.க., முழுமனதாக வரவேற்கிறது என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார். ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை போன்று இதனையும் ஆதரிக்கிறோம் என கூறினார்.

காங்., மா.கம்யூ., புறக்கணிப்பு: இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடந்தது. அதில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

சம்பந்தன் வரவேற்பு: தமிழக சட்டசபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர், மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. காமன்வெல்த் மாநாட்டில் வடக்கு மாகாண முதல்வர் கலந்து கொள்ள மாட்டார் என கூறினார்.

பிரதமருக்கு ஜெ., கடிதம்: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கடிதம் வாயிலாக பிரதமருக்கு அனுப்பப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார். தீர்மானத்தின் நகலையும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் அனுப்பி வைத்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X