போர்ட் லூயிஸ்: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை, மொரீஷியஸ் நாடு புறக்கணித்துள்ளது.
இலங்கையில், வரும், 15ம் தேதி, காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநாடு துவங்குகிறது. இலங்கையில் நடக்கும், மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, கனடா நாட்டு பிரதமர், ஸ்டீபன் ஹார்பர், இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளார். தமிழக தலைவர்களின் வற்புறுத்தலால், பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்த மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார். இந்த வரிசையில் தற்போது, மொரீஷியஸ் நாடும் சேர்ந்துள்ளது.
இது குறித்து, மொரீஷியஸ் பிரதமர் நவின் சந்திர ராம்கூலம், அந்நாட்டு பார்லிமென்ட்டில் கூறியதாவது: இலங்கையில் இறுதி கட்ட போரின் போது, மனித உரிமை மீறல்கள் நடந்தன. போர் முடிந்த பின்னும், மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. எல்லாவற்றையும் விட முதன்மையானது மனித உரிமைக்கு மதிப்பு கொடுப்பது தான். ஆனால், இலங்கையில் இந்த விஷயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கிறோம். இவ்வாறு, ராம்கூலம் கூறினார்.
மொரீஷியஸ் நாட்டில், 2015ல், காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மொரீஷியஸ் நாட்டில் வசிப்பவர்களில், 10 சதவீதம் பேர் தமிழர்கள். மொரீஷியஸ் நாட்டின் தமிழர் சங்க பிரதிநிதி, மேனன் மார்டே குறிப்பிடுகையில், ""மனித உரிமைக்கு மதிப்பளித்து, காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்துள்ள, பிரதமர் ராம்கூலத்தின் நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.
பிரிட்டன் பிரதமர்:
பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்களும், இந்த மாநாட்டை புறக்கணிக்கும் படி, மனித உரிமை ஆர்வலர்கள் வற்புறுத்துகின்றனர். பிரிட்டனில் தஞ்சம் அடைந்த, இலங்கை தமிழ் பெண்கள் இருவர், இலங்கை பாதுகாப்பு படையினர், தங்களை கைது செய்து, தொடர்ச்சியாக, 19 நாட்கள், பாலியல் பலாத்காரம் செய்ததாக, கடந்த மாதம், பேட்டியளித்திருந்தனர்.
இது குறித்து, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் குறிப்பிடுகையில், ""இலங்கையில் நடந்த போர் குற்றம் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும், காமன்வெல்த் மாநாட்டில் கேள்வி எழுப்புவேன்; இது தொடர்பான விசாரணைக்கும் அந்நாட்டு அரசை வற்புறுத்துவேன்,'' என்றார். இது தொடர்பாக, இலங்கை ராணுவ அதிகாரி, ருவன் வனிகசூரியா குறிப்பிடுகையில், ""உண்மையில் இந்த பெண்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தால், காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்க வேண்டும். ஏற்கனவே, இது போன்ற, 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது போன்ற கொடுமைகளை நாங்கள் சகித்து கொள்வதில்லை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE