சர்வதேச நகரங்களின் பெருமையைக் காட்டிலும், தொன்மை நகரான மதுரையின் பெருமை பாரம்பரியம் மிக்கது. மாமதுரையின் மாண்பு மிக்கவர்கள், எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தாலும், மண்ணின் மணத்தை பிரதிபலிப்பவர்களாகவே உள்ளனர். காட்சிக்கு எளியவரான கருவூலத்துறை இணை இயக்குனர் க.ச.முத்துப்பாண்டியனும், பதவிக்கு மட்டுமல்ல, மதுரைக்கும் பெருமை சேர்ப்பவரே. "காஸ்ட் அக்கவுன்டிங்' குறித்த இவரது ஆய்வுக் கட்டுரைகள், மத்திய அரசு, கம்பெனிகள், நிறுவனங்களின் கணக்கியல் நடைமுறையில் மாற்றங்களை கொண்டு வந்து உள்ளது. ஒரு அரசு அதிகாரி, இத்தனை சாதனைகள் நிகழ்த்தி வருவது ஆச்சர்யம்.
இனி அவரது பதில்கள்:
இளமை காலத்தை கூறுங்களேன்?
மதுரை குன்னத்தூர் சத்திரம் நகராட்சி சாம்பையன் துவக்கப்பள்ளி, கீழமாரட்வீதி ஆயிர வைசியர் பள்ளி, மேலூர் அரசு கல்லூரியில் பி.காம்., படித்தேன். புத்தக ஆர்வத்தில், நூலகங்களில் காலம் கழித்தேன். தந்தை கீழமாரட்வீதி மார்க்கெட் பணியாளராகவும் டிரைவராகவும் இருந்தார். பெரிய பின்புலம் எனக்கு இல்லை.
வழிகாட்டுதல் இன்றியும் அரசு பணி வாய்ப்பு எப்படி?
போட்டித் தேர்வு எழுதி ரயில்வே டிக்கெட் பரிசோதகரானேன். அப்போதே தபாலில் ஐ.சி.டபிள்யூ.ஏ.,- எம்.காம்., முடித்தேன். பின், "குரூப் 1' தேர்வுக்கு இணையான கணக்கு அலுவலர் தேர்வெழுதி, தமிழகத்தில் முதலிடம் பெற்றேன்.
1999 ல், அக்கவுன்ட்ஸ் ஆபீசர். ஈரோடு ஊரக வளர்ச்சித்துறை, முன்னாள் படை வீரர் நலன், பூம்புகார் கப்பல் நிறுவனத்தில் பணி செய்தேன். "காஸ்ட் அக்கவுன்டன்ட் மதுரை கிளை' துணைத்தலைவர், தலைவராகவும் இருந்தேன். சமீபத்தில் "அரசு போக்குவரத்துக்கழக செயல்பாடு' குறித்து ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்றேன்.
உங்களின் ஊக்க சக்தி எது?
கல்லூரி காலத்தில் தன்னம்பிக்கை புத்தகங்களை அதிகம் படிப்பேன். எம்.எஸ்.உதயமூர்த்தியின் "எண்ணங்கள்', அப்துல்ரஹீமின் "எண்ணமே வாழ்வு', பின்னாளில், நார்மன்வின்சென்ட் பீல்டின் "தி பவர் ஆப் பாசிட்டிவ் திங்கிங்' போன்ற பல நூல்களை படித்தேன். இதனால் முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம் என்ற எண்ணம் உருவானது. இன்றும் இதுபோன்ற நூல்கள் படிப்பதை நிறுத்தவே இல்லை.
ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதில் உங்கள் சாதனை...
"பிசினஸ் மேனேஜ்மென்ட் அக்கவுன்டிங்', "சார்ட்டட் அக்கவுன்டன்ட்' வெளியீடுகளில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். இன்டர்நேஷனல் பைனான்சியல் ரிப்போர்ட்டிங் ஸ்டாண்டர்ட்ஸ் (ஐ.எப்.ஆர்.எஸ்.,) என்ற மேல்நாட்டு கம்பெனி கணக்குகள் நடைமுறை பற்றி, 50க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதினேன். அதன் பின்பே, 2009ல் மத்திய அரசு, தனியார் நிறுவனங்களில் படிப்படியாக ஐ.எப்.ஆர்.எஸ்., அறிமுகமானது.
எக்ஸ்.பி.ஆர்.எல்., எனும் கணிப்பொறி மூலம் கம்பெனி கணக்கு பதிவு செய்வது பற்றி, நான்தான் முதன்முதலாக எழுதினேன். அதன்பின் 2012 முதல் இந்தியாவில் நிறுவன கணக்குகள் எக்ஸ்.பி.ஆர்.எல்., முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அமெரிக்க பத்திரிகை ஒன்றின் அறிவிப்பின்படி, பலநாட்டவர்களும் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தனர். தேர்வான 12 கட்டுரையில், 11 அமெரிக்கர்கள், அடுத்து என்னுடைய, ""ஜூடிசியல் டெசிஷன் ஆன் குவாலிபிகேஷன் அண்ட் என்டைட்டில்மென்ட் டூ ரிலீப் பிரம் ஜாயின்ட் அண்ட் செவரல் லியாபிலிட்டீஸ்' என்ற விவாகரத்துச் சட்டம் பற்றிய கட்டுரை மட்டுமே வெளியானது.
மதுரை பற்றி உங்கள் கருத்து?
அன்றைய மதுரை அமைதியானதாக இருந்தது. இன்று போக்குவரத்து நெரிசல் அதிகரித்துவிட்டது. வீதிகளில் சைக்கிளில் வலம்வந்தது போல இன்று வரமுடியவில்லை. இன்றும் எந்த நகரில் இருந்தாலும், தூங்கும்போது மதுரையின் மடியில் தூங்குவதாக கருதுவேன்.
ஜிகர்தண்டா, மிக்சர் ஜூஸ், போளியை தெருவில் நின்று சுவைத்துள்ளேன். இந்த ஏக்கத்தை இன்றும் அவ்வப்போது நிறைவேற்றுவேன். கீழமாசி வீதியில் வீடு இருந்ததால் கோயில் பகுதிகளில் நடைபெறும் பட்டிமன்றங்களை தவறவிட மாட்டேன். "கலாசார மதுரை' இன்னும் மாறவில்லை என்பதில் திருப்தி உள்ளது. அதேசமயம் சில மில்கள், மூடப்பட்ட நிலையில், ஓட்டல்கள், மருத்துவமனைகள் பெருகியது போல, பெரிய தொழிற்சாலைகள் வராதது வருத்தமே.
வாசகர்களுக்கு சொல்வது...?
"ஒருவன் ஏழையாக பிறப்பது குற்றமல்ல; ஏழையாகவே இறப்பதுதான் குற்றம்' என்பது, எனக்கு பிடித்த பொன் மொழி.
மொபைல்: 94435 65243; மெயில்: ksmuthupandian@ ymail.com
- மனோகரன்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE