புதுடில்லி : லோக்சபா தேர்தலில் ஆண் வேட்பாளர்களை காட்டிலும் பெண் வேட்பாளர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்தள்ளது. பல ஆண்டுகளாக லோக்சபா தேர்தலில் பெண் வேட்பாளர்களின் வெற்றி விகிதம் சரிந்து வந்தது. தற்போது இந்த நிலை மாறி, பெண் வேட்பாளர்களின் வெற்றி விகிதம் உயரத் துவங்கி உள்ளது.
புள்ளி விபர ஆய்வு :
1957ம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் 2வது பொதுத் தேர்தல் முதல் 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வரை பெண் வேட்பாளர்களின் வெற்றி விகிதம் குறித்து ஒரு புள்ளி விபரம் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. மத்திய புள்ளியியல் அமைச்சகமும் திட்ட அமலாக்க அமைச்சகமும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. இதில் 1957ம் ஆண்டு இருந்ததை விட 2009ம் ஆண்டில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. 1957ல் 45 பெண்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். ஆனால் 2009 தேர்தலில் 556 பேர் போட்டியிட்டுள்ளனர். 1957 முதல் 1967 வரை நடைபெற்ற 3 பொதுத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களின் விகிதம் 45 மற்றும் 60 சதவீதமாக இருந்துள்ளது. அதே சமயம் ஆண் வேட்பாளர்களின் வெற்றி விகிதம் 21 மற்றும் 31 சதவீதமாகவே இருந்துள்ளது.1999 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் 45 முதல் 59 பெண்கள் வெற்றி பெற்று பார்லிமென்ட் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்திரா,சோனியா காலம் :
முன்னாள் பிரதமர் இந்திரா மற்றும் தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் தலைமையிலான ஆளுங்கட்சியிலேயே பெண் வேட்பாளர்களின் வெற்றி விகிதம் அதிகமாக இருந்துள்ளது. 1971 ம் ஆண்டு மொராஜி தேசாய் ஆட்சிக்கு வந்த போது பெண் வேட்பாளர்களின் வெற்றி விகிதம் 45 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக குறைந்தது. ஜனதா கட்சி ஆட்சியின் போது இந்த அளவு 27 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் 1980ல் இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 24 சதவீதமாக குறைந்திருந்தது. காங்கிரஸ் தலைவராக சோனியா பொறுப்பேற்ற பிறகு சந்தித்த 2004 மற்றும் 2009ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததுடன் பெண் வேட்பாளர்களின் வெற்றி விகிதமும் வெகுவாக உயர்ந்தது.
எதிர்ப்புக்களுக்கு சவால் :
பார்லிமென்டில் பெண்களுக்கு அதிகளவில் இடஒதுக்கீடு வழங்க பலரும் எதிர்ப்பு தெரிவித்த போது சோனியா அவற்றை முறியடித்து அதிகளவிலான பெண் வேட்பாளர்களுக்கு இடம் அளித்ததுடன், பார்லி., இடங்களிலும் இடம்பெற செய்தார். 2004 தேர்தலில் போட்டியிட்ட 355 பெண் வேட்பாளர்களில் 45 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். வெற்றி விகிதமும் 13 சதவீதமாக குறைந்தது. ஆனால் 2009 தேர்தலில் போட்டியிட்ட 556 பெண்களில் 59 பேர் வெற்றி பெற்றனர். இந்திரா காலத்தில் இருந்ததை விட சோனியா காலத்தில் பெண் வேட்பாளர்களின் வெற்றி விகிதம் அதிகரிக்காவிட்டாலும் படிபடியாக உயர்ந்துள்ளது. கடந்த கால தேர்தல்களின் அடிப்படையில் வரும் லோக்சபா தேர்தலிலும் பெண் வேட்பாளர்களின் வெற்றி விகிதம் கணிசமாக உயர வாய்ப்பு இருப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE