புதுடில்லி : அடுக்குமாடி கட்டிடங்கள், மேம்பாலங்கள், மெட்ரோ ரயில்கள் என பெருநகரங்கள் வளர்ச்சி அடைந்து வரும் அதேசமயம், அவற்றின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்த கிராமங்கள் அடிப்படை வசதிகள் இன்றி பின் தங்கிய நிலையிலேயே உள்ளன.
கிராமங்களின் அவல நிலை :
நகரங்களின் வளர்ச்சி காரணமாக பெருகி வரும் ரியல் எஸ்டேட், மின்உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்காக அருகில் உள்ள கிராம நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து செல்கின்றனர். எத்தனை வளர்ச்சி, அதிநவீன புதிய திட்டங்கள் வந்தாலும் அவற்றின் வளர்ச்சி அப்பகுதியில் வசித்த மக்களை சென்றடையவில்லை. சரியான சாலை வசதியோ, குடிநீர் வசதியோ இல்லாமல் கிராமப்புற மக்கள் தவித்து வருகின்றனர். அருகில் உள்ள நகரங்களின் வளர்ச்சியின் சுவடுகள் தெரியாத மக்கள் ஏராளம்.
அரசுகளின் நிலைப்பாடு :
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து விட்டதாக கூறிக் கொள்ளும் அரசுகள், கிராமங்களின் நிலையை கண்டுகொள்வதில்லை. இருப்பினும் கிராமப்புற மக்களுக்கு அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாக்கடை வசதி, கல்வி நிலையங்கள், போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் அவற்றை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றன. ஆனால் அத்திட்டங்கள் வெறு பேச்சளவிலேயே உள்ளன.
தலைநகர கிராமங்களின் நிலை:
டில்லியில் நான்கில் ஒரு பகுதி கிராமங்களாகும். இங்கு டில்லியில் உள்ள மொத்த மக்கள்தொகையில் ஆறில் ஒரு பகுதி மக்கள் வாழ்ந்து வருவதாக கிராமப்புற தலைவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் டில்லி நகரில் உள்ள எந்தவொரு முக்கிய வளர்ச்சி திட்டமும் இக்கிராமங்களை சென்றடையவில்லை. இது குறித்து கிராம சமூகநல தலைவர் பிரதாப் சிங் கூறுகையில், கிராமப்புற மக்களின் பிரச்னைகளை மாநில அரசோ அல்லது மாவட்ட நிர்வாகமோ கவலைப்படுவதோ, புரிந்துகொள்வதோ இல்லை எனவும், மக்கள் பிரதிநிகளும் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி குரல் எழுப்புவதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக டில்லி மிகப்பெரிய நகரமாக வளர்ந்திருந்தாலும் அதற்கு ஏற்றாற் போல் பெருகி வரும் மக்கள்தொகைக்கு தேவையான அடிப்படை வசதிகள் மிக மிகக் குறைவாகவே உள்ளதாகவும் கிராமப்புற வாசிகள் தெரிவித்துள்ளனரக.
அரசுகளின் அலட்சியம் :
கிராமப்புற மக்களை ஏழைகளாக மாற்றி மத்திய மற்றும் மாநில அரசுகள், அவர்கள் தங்களின் சொந்த நிலங்களின் வசிப்பதை கூட அனுமதிப்பதில்லை. நகரங்களின் வளர்ச்சிக்காக பல கிராமப்புற குடியிருப்பு பகுதிகளை கையகப்படுத்தி வருகின்றன. அதற்கு பதிலாக மாற்று இடங்கள் தரப்படாடலும், தங்களின் சொந்த நிலங்களில் நடைபெறும் வேலைகளில் கூட பங்கேற்க அனுமதிப்பதில்லை. கிராமப்புற மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து டில்லி கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அரவிந்தர் சிங்கிடம் கேட்ட போது, கிராம வாசிகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், நில கையகப்படுத்தும் சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டதால் அது குறித்த நோட்டீஸ் ஏற்கனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
டில்லியின் கிராமப்புறங்களுக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்துள்ள டில்லி பா.ஜ., விஜய் கோயல், பல்வேறு கிராமங்களில் உள்கட்டமைப்பு தேவைப்படுவதாகவும், அவைகள் மிகவும் பின்தங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் தேவிதர் ஷெராவத் கூறுகையில், டில்லியில் கிராமப்புற வளர்ச்சி கழகம் செயலற்று இருப்பதாகவும், கிராமங்களின் பிரச்னைகளின் தீர்வுக்கு கொண்டு வர திட்டங்கள் தாம் வகுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE