உத்தமர்தானா சொல்லுங்கள்...- முனைவர் எஸ்.ஸ்ரீகுமார்-| Uratha sindhanai | Dinamalar

உத்தமர்தானா சொல்லுங்கள்...- முனைவர் எஸ்.ஸ்ரீகுமார்-

Updated : நவ 17, 2013 | Added : நவ 16, 2013 | கருத்துகள் (12)
Share
உரத்த சிந்தனை,முனைவர் எஸ்.ஸ்ரீகுமார்,Uratha sindhanai

இந்தியாவின் பிரதமரும், முதல்வர்களும், அமைச்சர்களும், அதிகாரிகளும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாமல், மக்களுக்கு சேவை செய்யும் புனிதப் பசுக்களாக அமைவர் என்ற எண்ணத்தில், இந்தியாவில் அரசியல் சாசனங்கள் உருவாக்கப்பட்டன. காலப் போக்கில் அவர்கள், அனைவரும் பிறழ்ச்சி மனோபாவம் கொண்டவர்களாக, சுயநலப் போக்குடையவர்களாக, மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுபவர்களாக, அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களாக, பதவி ஆசை கொண்டவர்களாக மாறிப் போயினர்.

மக்கள் நலனைப் புறக்கணித்து, ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதில் ஆர்வம் காட்டினர். இந்தியாவில், என்று, புதிய பொருளாதார கொள்கை புகுத்தப்பட்டதோ, அன்றிலிருந்து ஆட்சியாளர்களும், தனியார் நிறுவனங்களும், அரசு அதிகாரிகளும் கை கோர்க்கத் துவங்கினர். இதன் விளைவே, ஊழலின் வரவு. அத்தியாவசியப் பொருட்களிலிருந்து, பாதுகாப்பு பொருட்கள் வாங்குவது வரை அனைத்திலும், ஊழல் பெருத்தது. நிலத்தின் ஆழத்திலிருந்து, வானின் உயரம் வரை புழங்கும், அனைத்துப் பொருட்கள் வாங்குவதிலும், விற்பதிலும் முறைகேடுகள் அதிகரித்து, ஊழலும் மலிந்தது.நீர் முழ்கிக் கப்பல், நிலக்கரி, '2ஜி' அலைக்கற்றை, ஹெலிகாப்டர், பீரங்கி என, அனைத்திலும், பல லட்சம் கோடிகள் லஞ்சமாகப் பெறப்பட்டு, ஊழலை மலியச் செய்து, எங்கும் ஊழல்; எதிலும் ஊழல் என்றானது. இதில், லஞ்சம் கொடுத்தவர்கள் மாட்டிக் கொள்வதும், லஞ்சம் வாங்கியவர்கள் தப்பித்துக் கொள்வதும் தொடர் கதையானது.'2ஜி' அலைக்கற்றை ஊழலில் அத்துறையோடு சம்பந்தப்பட்டிருந்த பிரதமரை, விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென கோரி, பார்லிமென்ட் அமளியில் ஆழ்ந்தபோது, 'விசாரணைக்கு உட்படுவதில், எந்த விதத் தயக்கமுமில்லை' என்று, முதலில் அறிவித்து விட்டு, 'பிரதமரை விசாரணைக்கு உட்படுத்துவது நியாயமில்லை. அவர் புனிதப் பசுவாக கருதப்படுபவர்' என்று கூறி, விசாரணையிலிருந்து தப்பிக்க செய்தனர்.

தற்போது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டிற்காக, சி.பி.ஐ.,யால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 'நிலக்கரி துறையின் அமைச்சர் என்ற வகையில், பிரதமர் பதவி விலக வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நிலக்கரி துறை அமைச்சராக இருந்ததால் மட்டுமே, அந்த துறையின் ஒதுக்கீட்டு முறைகேடுகளுக்கு, பிரதமர் பொறுப்பாக மாட்டார் என்று, முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் கோப்புகள் பல, மாயமாக மறைந்த போதும், கோப்புகளுக்கு பிரதமர் காவல் காக்க முடியாது என்று சொல்லப்பட்டது.இப்போது, நிலக்கரி துறையின் முன்னாள் செயலர், பி.சி.பராக், 'சுரங்க ஒதுக்கீட்டில் இறுதி முடிவு எடுத்தது பிரதமர் தான். அவருக்கு தெரிந்து தான் ஒதுக்கீடு நடந்தது. இதில், தவறு நடந்திருந்தால் பிரதமரையும், இந்த வழக்கில், மூன்றாவது சதிகாரராகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் சதிகாரன், குற்றவாளி என்றால், பிரதமரும் தானே குற்றவாளி' என, கூறியுள்ளதால் காங்., கதி கலங்கிப் போய் உள்ளது.ஆதித்ய பிர்லா குழுமத்தை சேர்ந்த ஹிண்டால்கோ மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான, நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி.,) பொதுத்துறை நிறுவனமும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோரி விண்ணப்பித்திருந்தன. முதலில், அரசுத் துறை என்பதால், என்.எல்.சி.,க்கு சுரங்கம் ஒதுக்கீடு செய்ய நிலக்கரித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேர்வுக்குழு முடிவு செய்தது.

அதன்பின், முதலில் விண்ணப்பித்ததால், ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்வது குறித்து, மறுபரிசீலனைச் செய்ய வேண்டுமென, பிரதமருக்கு ஆதித்ய பிர்லா குழும அதிபர் குமார் மங்கலம் பிர்லா கோரிக்கை வைத்தார். பிரதமரை நேரில் சந்தித்தும் பேசியுள்ளார். இதன் பின் இரண்டு நிறுவனங்களும், கூட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கிச் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதற்கு, அத்துறையின் செயலர் பரிந்துரை செய்ததோடு, அமைச்சராக இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.இப்படியிருக்க, தனியார் நிறுவனங்களுக்கு, நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் தெரிவித்தது.இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க துவங்கியது. முறைகேடு நடந்தது தொடர்பாக, ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலர், பி.சி.பராக் உள்ளிட்ட சிலர் மீது குற்றச்சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது, முதல் குற்றவாளியாக பிரதமரை கருதாதது ஏன் என்ற சர்ச்சை பூதாகாரமெடுத்துள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில், முதல் குற்றவாளியே பிரதமர் மன்மோகன் சிங் தான். காங்., தலைமைக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் இடையே எவ்வாறு துண்டுச் சீட்டு போக்குவரத்து நடந்தது என்பது குறித்து, அம்பலப்படுத்தும் நேரம் வந்து விட்டது. பராக் வாக்குமூலத்தை வைத்துப் பார்க்கும் போது, நிலக்கரி ஊழல் விவகாரத்தில் முதல் குற்றவாளியே பிரதமர் மன்மோகன் சிங் தான் என, பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா குற்றம் சாட்டியுள்ளார்.காங்., கட்சியின் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணிஷ் திவாரியோ, 'சுரங்க ஒதுக்கீடு விஷயத்தில் பா.ஜ.,வினர், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். பா.ஜ.,வினர் எப்போதுமே, தோட்டாக்கள் இல்லாத துப்பாக்கியால் சுடுவதில் வல்லவர்கள். இப்போதும், அப்படித்தான், அவர்கள் நடவடிக்கை அமைந்துள்ளது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது. இதனால், இதுபற்றிய விவரங்களை விரிவாக கூற முடியாது' என, பிரதமரை பரிசுத்தவானாக காட்ட முயன்றுள்ளார்.நிலக்கரி சுரங்க ஊழலில் கடந்த, இருபது ஆண்டுகளில் யார் யாரெல்லாம் பொறுப்பிலிருந்தார்களோ, அவர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பிரதமரும், அதில் விதிவிலக்கல்ல. வேலைக்காரன் தவறிழைத்தால் முதலாளியும் குற்றவாளியாக தான் கருதப்படுவான்.

காங்., கட்சியின் மத்திய ரயில்வே துறையின் அமைச்சராக இருந்த லால்பகதுார் சாஸ்திரி, அரியலுார் ரயில் விபத்தில் பலர் உயிரிழந்ததைக் கேள்விப்பட்டதும், விபத்திற்கு பொறுப்பேற்று, உடனே பதவி துறந்ததையும், அருண்ஷோரி அலைக்கற்றை ஊழல் விஷயத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, 'அமைச்சர் என்ற நிலையில் நான் மட்டுமே முழு பொறுப்பேற்கிறேன். அதிகாரிகளை விட்டு விடுங்கள்' என்று கூறியதையும், இந்நேரத்தில் நினைவுகூர்வது அவசியமானது.பிரதமர், பதில் சொல்ல வேண்டிய, முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது. அவரோ மவுனம் சாதிக்கிறார். காங்., கட்சி இதைப் பற்றி கருத்துக் கூற இன்னும், முன் வரவில்லை. லோக்சபா தேர்தலில் தோல்வியை தழுவி, ராஜ்யசபா தேர்தல் மூலம் உறுப்பினராகி, ஒன்பது ஆண்டு ஆறு மாதங்கள் பிரதமராக இருந்து வரும் மன்மோகன் சிங், வாய் திறந்து பேசியதே அரிது.அப்படியே வாய் திறந்து பேசினாலும், நம்பும் நிலையில் மக்களும் இன்று இல்லை. பாகிஸ்தானுக்கு சென்று அவமானத்தை சந்தித்து வந்த அவர், இங்கும் ராகுலால் அவமானப்படுத்தப்பட்டார். இத்தனைக்கு பிறகும் அவராகவே முன் வந்து பதவியை துறப்பது மேலானது. இல்லையேல், அரசியல் சதியின் பலியாடாகப் பிரதமர் ஆக்கப்படுவார். முழ்கும் கப்பலை காப்பாற்ற காங்., பிரதமரை பலி கொடுக்க முன் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இ.மெயில்: sreekumar@gmail.com

- முனைவர் எஸ்.ஸ்ரீகுமார்- பேராசிரியர் - சமூக ஆர்வலர்

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X