மாசில்லா மதுரை: பள்ளியில் படிப்பு; விடுமுறையில் விழிப்புணர்வு; அசத்தும் ஆர்வமுள்ள ஆர்த்தி| Dinamalar

மாசில்லா மதுரை: பள்ளியில் படிப்பு; விடுமுறையில் விழிப்புணர்வு; அசத்தும் ஆர்வமுள்ள ஆர்த்தி

Added : நவ 18, 2013
Advertisement
மாசில்லா மதுரை: பள்ளியில் படிப்பு; விடுமுறையில் விழிப்புணர்வு; அசத்தும் ஆர்வமுள்ள ஆர்த்தி

கருப்பாயூரணி லட்சுமி பள்ளி, சுற்றுப்புற தூய்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சமீபத்தில் தூய்மை திட்டத்தை ஆரம்பித்துள்ளது. படிக்கும் நேரம் தவிர விடுமுறை நாட்களில், மதுரையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று சுற்றுப்புற தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் லட்சுமி பள்ளியின் மாணவி ஆர்த்தி கூறியதாவது:நகர்புறங்களில் குப்பைகளை சுத்தம் செய்ய தேவையான பணியாளர்கள் இருக்கின்றனர். கிராமங்களில் குப்பை தொட்டிகள் இருப்பதில்லை, தெருவில் குப்பைகளை கொட்டி நோய் பரவும் நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கிராம மக்களை ஒன்று சேர்த்து அசுத்தமான சூழ்நிலை நம்மை எப்படி பாதிக்கிறது, என விழிப்புணர்வு ஏற்படுத்தி, நம் சுத்தம் நம் கையில் தான் இருக்கிறது என்பதை புரிய வைத்திருக்கிறோம். பிற பள்ளி மாணவர்களுக்கு குறும்படங்களை திரையிட்டு, சுகாதார கல்வியை கற்றுக் கொடுத்து வருகிறோம். விவசாய நிலங்கள் அதிகமுள்ள கிராமங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கினால் மண் வளத்தை பாதித்து மரங்கள், செடிகளின் வளர்ச்சியை தடுத்து நிறுத்திவிடும். இதை மனதில் வைத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, துணிப் பைகளை பயன்படுத்தினால் நல்லது. எங்கள் முயற்சியில் பலனாக கிராம மக்களின் மனநிலை மாறி குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியும் தங்கள் மாணவர்களை இது போன்ற சமூக பணியில் ஈடுபடுத்தினால் குறுகிய காலத்தில் நம் நகரம் தூய்மை நகரமாக மாறிவிடும்.இவ்வாறு கூறினார். விடுமுறை நாட்களை தனக்கும், சமூகத்திற்கும் பயனுள்ளதாக மாற்றிய ஆர்த்தியின் ஆர்வம் அனைத்து மாணவர்களுக்கும் வர வேண்டும்.


பறவைகளின் சரணாலயம் சிறைச்சோலை:

மதுரை மத்திய சிறை கட்டப்பட்டு, 150 வது ஆண்டை எட்டி கொண்டிருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில், 1865ல் இச்சிறை கட்டப்பட்டது. ஆங்கிலேயர் காலம் முதல் தற்போது வரை பல்வேறு பிரமுகர்கள் அடைக்கப்பட்ட வரலாறு கொண்டது. இச்சிறைச்சாலை, சோலைவனமாக திகழும் நோக்குடன், ஏராளமான மரக்கன்றுகளை ஆங்கிலேயர்கள் நட்டு சென்றனர்.சிறை வளாகத்தில் டி.ஐ.ஜி., கண்காணிப்பாளர் மற்றும் வார்டன்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. அவற்றை சுற்றிலும் ஆங்கிலேயரால் நடப்பட்ட மரக்கன்றுகள் இன்று விருட்சங்களாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக டி.ஐ.ஜி., பங்களா சுமார் 2 ஏக்கரில் உள்ளது. இப்பங்களாவை சுற்றிலும் வானுயர்ந்த மரங்கள் அடர்ந்த வனமாக காட்சி தருகின்றன. மலைவேம்பு, மருது, வேம்பு உட்பட அனைத்து வகையான மரங்களும் ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ளன. பங்களா முன்புறம் அமைந்துள்ள சிறிய குட்டை இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இரு ஆண்டுகளாக மழையில்லாததால், வறண்ட இக்குட்டையில் வாழை, பப்பாளி போன்ற பயன்தரும் பழமரங்கள் வளர்ந்துள்ளன. கறிவேப்பிலை தோட்டம் கண்ணை பறிப்பதாக உள்ளது. இச்சோலை கைதிகள் உதவியுடன் தினமும் பராமரிக்கப்படுகிறது.டி.ஐ.ஜி.,யாக பொறுப்பேற்ற முகமது அனீபா மரம் வளர்ப்பில் மேலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். அவரது முயற்சியால், டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு செல்லும் வழியின் இரு புறமும் பட்டு போயிருந்த பூங்கா பசுமைமயமாகி வருகிறது. குட்டையை சீர்படுத்தி, மழை நீரை தேக்கி, மீன்கள் வளர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். சுள் என கடுமையான சூரியன் சுட்டெரித்தாலும், இந்த பங்களா வளாகத்திற்குள் செல்லும் போது அடர்ந்த வனத்திற்குள் நடப்பது போன்று, பறவைகளின் ரீங்காரமிடும் சத்தம், இலைகளை அசைத்தும், தழைகளை உதிர்த்தும் காற்றில் ஆடும் மரம், செடிகள் நம்மை வரவேற்பதை போல காட்சியளிக்கின்றன.

டி.ஐ.ஜி., கூறியதாவது: கைதிகள் மற்றும் சிறை வார்டன்களின் ஒத்துழைப்பால், இச்சோலை சாத்தியமாகியுள்ளது. இதை மேலும் பசுமைமயமாக்க, குட்டையில் நீர் தேக்கி, மீன்கள் வளர்க்கவும், இல்லாத மரக்கன்றுகள், பழக்கன்றுகளை வாங்கி நடவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த மரங்களை பார்க்கும் போது மனது இதமாகிறது, என்றார்.


மரங்களின் காவலன்:

விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகி போனது, அந்த பிளாட்டுகளில் கட்டப்படும் வீடுகளில் வெட்டப்பட்ட மரங்கள் கதவு, ஜன்னலாகி மாறிப் போனது. மனிதன் இயற்கைக்கு உதவியாக இல்லாமல் போனாலும், குறைந்தபட்சம் அதை அழிக்காமல் இருந்தால் போதும். இயற்கையை பாதுகாக்கும் எண்ணம், ஒரு சிலருக்கு மட்டுமே வருகிறது. மதுரை பார்வை பவுண்டேஷன் குபேந்திரன், மாசில்லா காற்றை சுவாசிக்க அரசு பள்ளிகளில் மரங்களை நட்டு வளர்த்து பாதுகாத்து வருகிறார்."" இயற்கைக்கு நாம் சிறு உதவி செய்தாலும் அது நமக்கு
பலமடங்கு பலனை திருப்பி தரும். இந்த நோக்கத்தை கொண்டு முதல் கட்டமாக 1 லட்சம் மரக்கன்றுகள் நடுவது என முடிவு செய்து, மதுரையின் மண் வளம் பெருக மரங்கள் வளர்க்கும் பணியை செய்து வருகிறோம். அலங்காநல்லூர் அரசு பள்ளியில், 100 மரக் கன்றுகள் நட்டு, அதற்கென்று தனியாக ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் வசதியும் செய்துள்ளோம். இந்த கன்றுகள் 6 மாதங்களில் பெரிய மரங்களாகிவிடும். ஒத்தக்கடை, மாயாண்டிபட்டி உயர்நிலைப் பள்ளியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு மரம் கூட இல்லை. இந்த பள்ளியை பசுமையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் 600 மரக்கன்றுகள் நடவு செய்துள்ளோம். இதை போல 120 அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இதுவரை 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். காடுகளின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது, இந்நிலையில் நகர்புறங்களில் மரங்கள் வளர்த்தால் தூய காற்றை சுவாசித்து, நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். மரங்களின் காவலனாக இயற்கையை நேசிக்கும் இவரிடம் பேச 99437 42425க்கு அழைக்கலாம்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X