செழிப்பான இந்தியா வேண்டுமா?| Dinamalar

செழிப்பான இந்தியா வேண்டுமா?

Added : நவ 18, 2013 | கருத்துகள் (6)
செழிப்பான இந்தியா வேண்டுமா?

ஒரு தேசமாக இந்தியாவை அதன் முழு ஆற்றலையும் அடையும் நிலைக்குக் கொண்டு வருவதே நமது நோக்கம். அதன் ஆற்றல் துல்லியமாக என்னவென்று நாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஆனால் அதன் ஆற்றலையும் எதிர்பார்ப்புகளையும் கணக்கில் கொள்ளும்போது, மிகக் குறைவாகவே இதுவரை சாதித்து வந்துள்ளது. அதனுடைய மோசமான செயல்திறனுக்கு அதன் அரசியல் தலைமையே பொறுப்பு என்பதை நாம் போதிய உறுதியுடன் கூறமுடியும். ஆதலால், இந்தியா தன்னுடைய ஆற்றலை உணரத் தேவையான உடனடி மாற்றம் அதன் ஆட்சிமுறை தரத்தின் முன்னேற்றமே. அதாவது, நாம் நல்ல தலைவர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம். ஆகையால், தகுதிவாய்ந்த, தொலைநோக்குப் பார்வைகொண்ட, அர்ப்பணிப்புள்ள மக்களைத் தலைமைப் பதவிகளுக்கு அறிவுப்பூர்மாக தேர்ந்தெடுக்க வேண்டியது நம் கையில் உள்ளது.


உண்மையான தேவை:

இந்திய ஆட்சிமுறை அமைப்பின் மாற்றம்தான் நம்முடைய உண்மையான தேவை என்பதை முறையாக வாதிட முடியும். அமைப்பில் ஏன் மாற்றம் தேவை? ஏனெனில் அமைப்பில் மாற்றம் இல்லை என்றால், தொடர்ந்து பழைய மாதிரியான ஆட்களே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அரசியலில் சமூக விரோதிகள் நுழையக் காரணம், தற்போது உள்ள அரசியல் அமைப்பு திருடர்களுக்கு வெகுமதி அளிப்பதாகவும், நேர்மையான மக்களை தண்டிப்பதாகவும் இருப்பதுதான்.


நாம் என்ன செய்கிறோம் என்பது, நாம் என்ன தெரிந்து வைத்துள்ளோம் என்பதைப் பொறுத்தது. ஆகையால் செயல்படுவதற்கு முன், சூழ்நிலை என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எல்லாப் பயணங்களையும் போல், எங்கு தற்போது இருக்கிறோமோ அந்த இடத்தில் இருந்துதான் இதையும் ஆரம்பிக்க முடியும். இப்போது இருக்கும் நிலையில் இல்லாமல் நமது இலக்குக்கு அருகில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கனா காண்பது எதற்கும் உதவாது. செயல்படாத அரசாங்க அமைப்பை நாம் கொண்டுள்ளோம் என்பதே நாம் செயல்பட ஆரம்பிக்க வேண்டிய இடம்.தகுதியற்ற ஆட்சியாளர்கள்:

நாட்டை ஆளும் பொறுப்பில் இருப்பவர்கள் தகுதியற்றவர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் அப்படி இல்லாமல் இருந்திருந்தால் நாம் இன்று இருப்பது போல பரிதாபகரமான நிலையில் இருந்திருக்கப் போவதில்லை. ஒரு குறிப்பிட்ட வேலைக்குத் தேர்ச்சி இல்லை என்பது குற்றம் அல்ல. ஆனால் நாட்டின் ஆளுகை போன்ற அதிக முக்கியத்துவம் நிறைந்த விஷயத்தில், தேர்ச்சியின்மை ஒரு குற்றமாகவே கருதப்பட வேண்டும். அதிலும், ஆனால் குற்றவாளியாக இருந்துக் கொண்டு நாட்டின் திட்டங்களை உருவாக்கும் பணியில் இருப்பது கண்டிப்பாகக் குற்றமே. இந்திய அரசியலில் சற்று அதிகமாகவே குற்றவாளிகள் உள்ளனர். அதுவே நமது செயல்பாட்டின் ஆரம்பப் புள்ளி.


ஊழலுக்கும், அரசாங்கக் கட்டுபாடுகளுக்கும் உள்ள தொடர்பை சரியாகப் புரிந்துகொள்ளக்கூடிய நடுத்தரவர்க்க, கல்வியறிவு பெற்ற மக்கள்தொகை இப்போது கணிசமாக உள்ளது. புரிந்துகொள்வதும், புரிந்துகொள்ளும் ஆற்றல் இருப்பதும் ஒன்றல்ல. இதுவரை இந்தத் தொடர்பு அவர்களுக்குச் சரியான முறையில் விளக்கப்படவில்லை என்பதுதான் பிரச்னை. தற்போதைய கல்வி அமைப்பு, பகுப்பாய்வு செய்யும் திறனுடன் சிந்திப்பதற்கு மக்களைத் தயார்படுத்தவில்லை. அது மட்டுமா, எதையும் அவர்களாக உணர முடியாத அளவுக்கு அவர்கள் சாப்பாடு விஷயங்களாலும், சாகஸங்களாலும் (சரி உங்களுக்கு பிடிக்கும் என்றால் பீட்ஸா, கிரிக்கெட் என்பதாக வைத்துக் கொள்வோம்) அதிகமாகவே திசைதிருப்பப் பட்டவர்களாக உள்ளனர். ஒருவேளை அதைப் புரிந்துகொண்டவர்கள் இருந்தாலும், அவர்கள் எண்ணிக்கை வெகு சொற்பமாகவே உள்ளது. இதில் இன்னும் மோசமான விஷயம், அந்தச் சொற்ப எண்ணிக்கையில் உள்ள மக்கள்கூட தங்களின் ஆதங்கத்தை வெளிக்காட்ட எந்த அக்கறையும் கொள்ளாததுதான்.


சமூக விரோதிகள் பதவியில் நீடிப்பதற்கு என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, கதை இன்னும் இருண்டதாக ஆகிறது. அவர்கள் பொருளாதாரத்தின் உற்பத்தி செய்யும் பகுதிகளுக்கு வரி விதித்து, உற்பத்தியற்ற பகுதி மக்களுக்குச் சலுகைகள் வழங்குகின்றனர். அதற்குக் கைமாறாக அவர்களுடைய ஆதரவைத் தேர்தல்களில் அறுவடை வருகின்றனர். பழமொழியில் சொல்வதைப் போல், ராமுவிடம் திருடி சோமுவுக்கு கொடுப்பது எப்போதும் சோமுவின் ஆதரவை உறுதிப்படுத்தும்.


தேவையான சீர்திருத்தங்கள்:

இந்தியா ஆளப்படும் முறையில் பெருத்த மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய, ஜனநாயக வழியை நடைமுறைப்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களை நம்மால் எளிதாக் கற்பனை செய்ய முடியும். இந்த மாற்றங்களைக் கருதிப் பாருங்கள்:


1. யார் தேர்தல்களில் போட்டியிட முடியும் என்பதற்கு நுழைவுத் தகுதியாக உயர்ந்த அளவுகோல்களை வைக்கவேண்டும். நன்கு தேர்ச்சியுடைய, தங்கள் துறைகளில் தனித்தேர்ச்சியை நிரூபித்த, தனிப்பட்ட முறையில் மிக நேர்மையான, இந்தியாவின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கு ஆழமான அர்ப்பணிப்புள்ள மக்களே அரசியல் பதவிகளுக்கு வர முடியும் என்ற நிலை உருவாக குறைந்தபட்சத் தகுதிகளை மிகக்கடுமையாக வைக்கவேண்டும்.


2. வாக்காளர் ஆவதற்கான தகுதிகளையும் அதிகப்படுத்த வேண்டும். உயர்நிலைப்பள்ளித் தேர்ச்சி, அரசியல் செயற்பாடுகள், நாடு சந்திக்கும் சவால்கள், பொதுவாழ்வில் நேர்மை, கண்ணியம் முதலான விஷயங்கள் பற்றிக் குறைந்தபட்ச அளவிலாவது புரிந்து கொண்டவர்கள் போன்றவை தகுதிகளாக இருக்கவேண்டும்.


3. யார் தேர்தல்களில் போட்டியிடலாம், யார் வாக்களிக்கலாம் என்பதற்குத் தேவையான தகுதிகளை அதிகப்படுத்துதல். அதாவது, மேற்கூறிய இரண்டு விஷயங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.


இந்தச் சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தை வலுப்பெறச்செய்து, அதிகாரத்தை அரசியல்வாதிகளிடம் இருந்து பிடுங்கி மக்களுக்கு வழங்கும். இந்தவொரு காரணத்தினாலேயே அரசியல் கட்சிகள் இத்தகைய மாற்றங்களை அனுமதிக்கப் போவதில்லை.இரண்டுங்கெட்டான் சூழ்நிலை:

கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவது நன்றாக இருக்கும் என்றாலும் நாம் இப்போது ஒரு இரண்டுங்கெட்டான் சூழ்நிலையில் சிக்கிக் கொண்டுள்ளோம். இந்தக் கட்டமைப்பு மாற்றங்களை கொண்டு வரக்கூடிய அதிகாரம் பதவியில் உள்ள அரசியல்வாதிகளிடம் உள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள அமைப்பின் மூலம் இந்தப் பதவிகளையும், அதிகார நிலையையும் அடைந்தவர்கள் அவர்கள். எனவே, இந்தப் பதவிகளை மீண்டும் அடையத் தடையாக இருக்கப்போகும் வகையில் அமைப்பை மாற்ற வேண்டிய எந்தக் காரணமும் அவர்களுக்கு இல்லை. ஆகையால், கட்டமைப்பு மாற்றம் நல்ல விஷயம் என்றாலும் இப்போது அதை முயற்சிப்பதில் எந்தப் பலனும் இல்லை.நகர்புற வாக்காளர்கள் நிலை:

கல்வியறிவு பெற்ற நகர்புற வாக்காளர்களை இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்தில் கொள்வோம். தங்கள் வாக்குகள் பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்ற நம்பிக்கையில் பெரும்பாலும் அவர்கள் வாக்களிப்பதில்லை. இது பொதுவாக அறியப்பட்ட ஒரு விஷயம். அவர்களில் கணிசமானோர் இந்த நினைப்பைக் கொண்டிருக்கும்போது, அவர்கள் நம்புவது உண்மையாகிப் போகிறது. ஏனெனில், அது சுயமாக நிறைவேறும் தீர்க்கதரிசனத்தைப் போன்றது.


கல்வியறிவு பெற்ற நகர்ப்புற மக்களின் அதிகாரமற்ற நிலைக்கு அவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் ஒரளவு காரணம். மக்கள்தொகையில் வெறும் 30 சதவிகிதம் மட்டுமே நகர மக்கள்தொகையாக உள்ளது. இந்தக் கூட்டத்தினர் மனமுடைந்து போன ஒரு குழுவாக, தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கத் தங்களால் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை என்ற நிலைக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டனர். அந்த நினைப்பு இந்தப் பிரச்னையை மேலும் சிக்கலாக்குகிறது.


சொல்லப்போனால், அவர்கள் ஒருவகையில் வாக்குரிமை பறிக்கப்பட்டவர்கள். அவர்களுடைய கண்ணோட்டத்தில் அவர்களுடைய வாக்குகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லை என்ற அவநம்பிக்கையே அந்த சுய வாக்குரிமை பறிப்புக்குக் காரணம். அரசியல் கட்சிகளுக்கு இது தெளிவாகத் தெரியும். அதனால் அந்தக் கட்சிகள் கல்வியறிவு பெற்ற நகர்புற வாக்காளர்களின் நலன்களை உதாசீனப்படுத்தி வருவது புரிந்துகொள்ளும் விதமாகவே உள்ளது. இது நகர்ப்புற வாக்காளர்களை அரசியல் விஷயங்களில் இருந்து மேலும் அன்னியப்படுத்துகிறது. மொத்தத்தில் இது நகர்புற வாக்காளர்களின் தன்னிச்சையான வாக்குரிமை பறிப்பு. இதுவே விரும்பத்தகாத ஆட்கள் அரசியல் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஓரளவு காரணமாகிறது.அரசியல் கட்சிகளின் போக்கு:

வாக்காளர்கள் தங்களைத் தகவலறிந்தவர்களாக ஆக்கிக் கொள்ளவும், வாக்களிக்கவும் எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பதைக் கவனிக்கும் அரசியல் கட்சிகள், வாக்காளர்களிடம் தங்களை வேறுபடுத்திக் காட்டப் பெரிதாக எந்த முயற்சியும் செய்வதில்லை. ஏனெனில் வாக்காளர்களை ஈர்க்கும் விதமாக தங்களை மாற்றிக் கொள்வது அரசியல் கட்சிகளுக்கு விலைமிக்க செயல்.


தகவலறிந்த வாக்காளர்களை ஈர்க்க எவ்வித முயற்சியையும் எடுக்க விரும்பாத, ஒன்றில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் காட்ட முடியாத அரசியல் கட்சிகள் உருவாவதே இதன் வெளிப்பாடாக ஏற்படும் பேரழிவுகள். அரசியல் கட்சிகள் வாக்காளர்களின் பிரச்னைகளை அலட்சியப்படுத்தி, விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் மோசமாக ஆட்சி செய்கின்றனர். வாக்காளர்கள் தகவலறிந்து வாக்களிப்பதற்கு முயற்சியை செலவிடும்போதுதான், அந்த முயற்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக உரிய முறையில் அரசியல் கட்சிகள் செயல்படும். அப்போதுதான் ஜனநாயகத்தில் விரும்பத்தக்க வெளிப்பாடுகள் நிகழும்.

( இதன் அடுத்த பகுதி 25/11/2013 வெளியாகும்)

இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-702-2.html
ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 09445901234 / 09445979797

நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னைAdvertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X