புதுடில்லி : லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுவாரா? அப்படி போட்டியிட்டால் எந்த மாநிலத் தொகுதியில் போட்டியிடுவார்? என்ற கேள்விகள் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. இந்த கேள்விகளுக்கு பா.ஜ., ஒரு விதமாகவும், காங்கிரஸ் வேறு விதமாகவும் பதில் அளித்து வருகின்றன.
ராஜ்நாத் சிங் திட்டவட்டம் :
சமீபத்தில் பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் இந்த கேள்விகளை கேட்ட போது அவர், நிச்சயமாக போட்டியிடுவார் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், வரும் லோக்சபா தேர்தலில் குஜராத், உத்திர பிரதேசம் அல்லது நாட்டின் ஏதாவதொரு மாநிலத்தின் தொகுதியில் மோடி போட்டியிடுவார்;குஜராத்திலோ அல்லது உத்திர பிரதேசத்தில் மட்டுமோ அவரது புகழ் பரவி இருக்கவில்லை; நாடு முழுவதும் மக்கள் மனதில் மோடிக்கு செல்வாக்கு பெருகி உள்ளது; அதனால் அவர் எங்கு போட்டியிட்டாலும் அவர் அமோகமான வெற்றியை பெறுவது உறுதி; மோடி எந்த மாநிலத்தில் போட்டியிட விரும்புகிறாரோ அது அவரது விருப்பம்; அவர் தேர்ந்தெடுக்கும் தொகுதியில் அவருக்காக பணியாற்ற அனைத்து பா.ஜ., தொண்டர்களும் காத்துக் கொண்டுள்ளனர். இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறியிருந்தாலும், மோடி தனது சொந்த மாநிலமான குஜராத் அல்லது உத்திர பிரதேசத்திலேயே போட்டியிடுவார் என பா.ஜ., தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் சிலரோ, மோடி தற்போதே புகழின் உச்சிக்கு சென்று விட்டதால் அவரின் செல்வாக்கு 2014 லோக்சபா தேர்தல் வரை நிலைக்காது என தெரிவித்துள்ளனர். இதனை ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
மோடியின் கவனம் :
5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் பா.ஜ.,வும், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் உத்திர பிரதேசத்தில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானை கைப்பற்றிவிடுவோம் என்ற நம்பிக்கை பா.ஜ.,விற்கு உள்ளது. இதனால் அதிக சவால் நிறைந்ததாக உ.பி., தான் இருக்கும் எனவும் பா.ஜ., கருதுகிறது. வாஜ்பாயின் லக்னோ தொகுதியில் போட்டியிட மோடி திட்டமிட்டிருப்பதாகவும், அதனால் உத்திர பிரதேசத்தில் அவரின் கவனம் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மிகக் குறைந்த அளவே வளர்ச்சி பெற்ற மாநிலம் உத்திர பிரதேசம் என்பதால் அங்கு பா.ஜ., தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. உ.பி.,யில் இதுவரை மோடி மேற்கொண்ட 3 பிரச்சாரங்களில் குஜராத்திற்கு இணையாக உ.பி.,யிலும் வளர்ச்சி ஏற்படுத்துவது குறித்தும், நடப்பு அரசின் குறைபாடுகள் குறித்தும் பேசியது உ.பி., மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பி.,யில் கவனம் ஏன்? :
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆன பின்னரும் சமூக மற்றும் மத கலவரங்கள் உத்திர பிரதேசத்தில் நடைபெற்று கொண்டே உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற முஷாபர்நகர் கலவரம் வரை இது தொடர்ந்து கொண்டுள்ளது. இந்த கலவரங்களுக்கு உ.பி., அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேடே காரணம் என கூறப்படுவதால் இதனை பயன்படுத்தி பா.ஜ., தனது பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் வாய்ப்பு பெற்ற ராகுல், 3வது அணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் முலாயம், பிரதமர் பதவி கனவில் இருக்கும் மாயாவதி ஆகியோர் உ.பி.,ல் போட்டியிடுவதால் பா.ஜ.,வும் உ.பி.,யை தேர்வு செய்து அதிக கவனம் செய்து வருகிறது. உ.பி.,யில் அதிகபட்சமாக 80 லோக்சபா தொகுதிகள் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். 2009ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ., அதிகபட்சமாக 35 தொகுதிகளில் வெற்றி பெற்றது உ.பி.,ல் தான். அதனால் இந்த முறை கூடுதல் கவனம் செலுத்தி குறைந்தபட்சம் 45 தொகுதிகளை கைப்பற்ற பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் கணக்கு :
கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் மீது சிறுபான்மையினர் பெற்றுள்ள பாதிப்புக்கள் காரணமாக உ.பி.,ல் 18.5 சதவீதம் சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெற முடியும் என கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் கணித்து வருகிறார். சிறுபான்மையினரின் இந்த ஓட்டுக்கள் பா.ஜ.,விற்கு கூடுதல் பலமாக அமையும் எனவும் அவர் கருதுகிறார். 2009ம் ஆண்டு தேர்தலில் உ.பி.,ல் 18.25 சதவீதம் ஓட்டுக்களைப் பெற்று 21 தொகுதிகளை கைப்பற்றியது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் பெற்ற அதிகபட்ச ஓட்டாக கருதப்பட்டது. ஆனால் 2012 தேர்தலில் அகிலேஷ், காங்கிரசின் இந்த சாதனையை முறியடித்துள்ளார். இந்த முறையும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது. காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மறுத்த மாயாவதி, 2007 தேர்தலில் பா.ஜ.,விற்கு எதிராக கையாண்ட யுத்திகளை கையாள திட்டமிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில் உ.பி.,ல் ஜாதி, மத அடிப்படையிலேயே ஓட்டுக்களை பிரிக்கவும், ஓட்டுக்களை அள்ளவும் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE