கோவை :தேர்ச்சி விகித்தை காரணம் காட்டி மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் விதிமீறி நடக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி எச்சரித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில், பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி விகிதத்தை நோக்கமாக கொண்டு, கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுத கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மூன்று தனியார் பள்ளிகளின் மீது இதுபோன்ற புகார்கள் வந்துள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ""தேர்ச்சி விகிதத்திற்காக, மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் விதத்தில், பள்ளி நிர்வாகங்கள் நடப்பது ஏற்க இயலாது. தனித்தேர்வர்களாக மாணவர்களை எழுத கட்டாயப்படுத்தும் பள்ளிகளின் தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்க பரிந்துரை செய்யப்படும்,'' என்றார்.
மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ரங்கராஜன் கூறுகையில்,"" புகார்கள் பெறப்பட்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களை பள்ளியில் சேர்த்து தேர்வு எழுத உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பள்ளி நிர்வாகத்தை எச்சரித்துள்ளோம். இதுபோன்ற புகார்கள் பெறப்பட்டால் பள்ளிகள் மீது துறைரீதியான நடவடிக்கை கடுமையாக மேற்கொள்ளப்படும்,'' என்றார்.